

‘மிஸ்டர் சம்பத்’, ‘முகமது பின் துக்ளக்’, ‘யாருக்கும் வெட்கமில்லை’, ‘உண்மையே உன் விலை என்ன?’ ஆகிய நான்கு படங்களை இயக்கி இருக்கிறீர்கள். இப்போது உங்களை யாராவது படத்தை இயக்கச் சொன்னால் ஒப்புக்கொள்வீர்களா?
பணத்தைக் கோட்டைவிடத் தயாரிப்பாளர்கள் யாராவது தயாராக இருக்கிறார்களா என்ன?
அப்படியென்றால் உங்கள் இயக்கத்தில் வெளியான படங்கள் எல்லாம் தோல்விப் படங்களா?
நல்லவேளையாக அந்தப் படங்களினால் நஷ்டம் எதுவுமில்லை. எப்படியோ என்னையும் மீறி அவை தப்பித்துவிட்டன. அவை நான்கும் ஐம்பது நாட்கள் ஓடிய படங்கள். என்னுடைய ஏதோ தவறினால்தான் அவை நூறு நாள் படங்களாக ஆகவில்லை என்று நினைக்கிறேன்.
நீங்கள் சுமார் எவ்வளவு படங்களில் நடித்திருக்கிறீர்கள்? அவற்றில் உங்களுக்குப் பிடித்த ரோல்கள் என்று எவற்றைக் குறிப்பிடுவீர்கள்?
சுமார் 200 படங்களில் நடித்திருப்பேன். அத்தனையும் தமிழ்ப் படங்கள்தான். அவற்றில் ‘மிஸ்டர் சம்பத்’, ‘முகமது பின் துக்ளக்’, ‘தங்கப் பதக்கம்’, ‘மகிழம்பூ’ ஆகிய படங்களில் நான் ஏற்ற ரோல்கள் எனக்குப் பிடித்தவை.
‘யாருக்கும் வெட்கமில்லை’ படத்தில் உங்கள் இயக்கத்தில் ஒரு சீரியஸான முஸ்லிம் கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்தீர்கள். அதுபோன்ற சீரியஸ் ரோலை உங்களுக்கு அதற்குப் பிறகு யாரும் அளிக்கவில்லையா?
ஏன், அந்தப் படத்துக்கு வெகு காலம் முன்னாலேயே ‘மறக்க முடியுமா?’, ‘உறவு சொல்ல ஒருவன்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’ஆகிய படங்களில் சீரியஸ் கதாபாத்திரங்களை ஏற்றிருக்கிறேனே...
நீங்கள் பார்த்த படங்களில் எவற்றை நல்ல படங்கள் என்பீர்கள்?
‘சங்கராபரணம்’ என்னை மிகவும் கவர்ந்தது. கதை, சோமயாஜுலுவின் நடிப்பு, இசை, இப்படி எல்லாமே கச்சிதமாக இருந்தன. ‘இம்பாக்ட்’டும் கெடாமல் டாக்குமெண்டரி போலும் ஆக்காமல் அருமையாக எடுத்திருந்தார் விஸ்வநாத். அதேபோல் ஆங்கிலத்தில் ‘தி பெக்கெட்’ படத்தில் இரண்டு முக்கியக் கதாபாத்திரங்களும் மோதும் இடங்களிலெல்லாம் நடிப்பும் வசனமும் கொடி கட்டிப் பறந்தன. சோஷியல் கமிட்மெண்டுடன், அதே சமயம் வறட்டுத்தனமாகவும் எடுக்கப்படாத படம் என்றால் ‘தண்ணீர் தண்ணீர்’ படத்தைச் சொல்லலாம்.
அரசியலில் புகழ்பெற சினிமாவைப் பயன்படுத்திக் கொள்பவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அரசியலில் சிலர் புகழ்பெற சினிமா உதவியிருக்கிறது என்பது உண்மை. ஆனால், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றவர்கள் அரசியலில் வெற்றி பெற்றதற்கு சினிமாதான் காரணம் என்று சொல்ல முடியாது. அண்ணாதுரை தான் பேசும் மேடைகளில் எல்லாம் எம்.ஜி.ஆரைப் பாராட்டி, அவரையும் பேச வைத்திருக்கிறார். அதேபோல் ஜெயலலிதாவும் எம்.ஜி.ஆரால் அரசியல் பயிற்சி அளிக்கப்பட்டவர்தான். அரசியலில் எந்தப் பின்னணியும் இல்லாமல் நேரடியாக சினிமாவிலிருந்து அரசியலுக்குக் குதித்து வெற்றி பெற்றவர் என்.டி.ஆர். ஒருவர்தான். ஆனால், அவரது அப்போதைய வெற்றிக்குக்கூட சினிமாப் புகழைவிட, காங்கிரஸுக்கு மாற்று தேவை என்று ஆந்திர மக்கள் விரும்பியதுதான் காரணம் என்பேன்.
சமூகம் சீரழிய சினிமா ஒரு காரணம் என்கிறார்கள் பலர். ‘நாட்டில் நடைபெறாத விஷயங்களையா நாங்கள் திரையில் காட்டுகிறோம்’ என்கின்றனர் திரையுலகத்தினர். உங்கள் கருத்து என்ன?
சமுதாயம் ஒருபடி கீழே இறங்கினால், சினிமா அதை நான்கு படி கீழே இறக்குகிறது. தரக்குறைவான அம்சங்கள் கொண்ட ஒரு திரைப்படம் வெற்றி பெற்றுவிட்டால் உடனே மக்கள் அப்படிப்பட்ட படங்களைத்தான் ரசிக்கிறார்கள் என்கிறார்கள். மக்கள் ரசனையைச் சரிவர யாராலும் புரிந்துகொள்ள முடியாது. அப்படி அதை யாராலாவது துல்லியமாகக் கணிக்க முடிந்தால் அவருக்கு ரஜினிகாந்தைவிட அதிகப் பணம் தரத் தயாரிப்பாளர்கள் தயாராக இருப்பார்கள்.
தற்காலத் திரைப்படங்களில் நகைச்சுவை பற்றி...
நகைச்சுவையின் தரம் மிகவும் தாழ்ந்திருக்கிறது.
அதற்குக் காரணம் என்ன என்று நினைக்கிறீர்கள்?
நகைச்சுவைப் பகுதியை உருவாக்குபவர்களின் கவனக்குறைவு, தரமின்மைதான் இதற்குக் காரணம். சில பேர், தங்கவேலு, நாகேஷ் போன்று திறமை மிக்க நடிகர்கள் இப்போது தோன்றாததால்தான் நகைச்சுவையின் தரம் குறைந்துள்ளது என்கிறார்கள். அந்த வாதத்தை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியே இருந்தாலும் திறமை குறைவானவர்களிடம்தான் இயக்குநர் அதிக வேலை வாங்க வேண்டும். அதிகப் பொறுப்போடு வசனம் கொடுக்க வேண்டும்.
நேர்முகம்: நட்சத்திரன்