

கவிஞர் யுகபாரதி, தமிழின் முன்னணிப் பாடலாசிரியர். சமீபத்தில் இவர் எழுதிய ‘மாடர்ன் லவ் சென்னை’, ‘மாமன்னன்’ ஆகிய படங்களின் பாடல்கள் பட்டிதொட்டியெல்லாம் ஒலித்துவருகின்றன. அவருடனான நேர்காணலின் சுருக்கப்பட்ட வடிவம் இது.
காலையில் இளையராஜா, மாலையில் ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பாடல்கள் எழுதிய அனுபவம்?
இரு பெரும் இசையாளுமைகளுடன் ஒருசேர பயணித்த அனுபவம் அலாதியானது. கடந்த காலங்களை இசையால் நிரப்பிய அவர்களில் ஒருவர் மண்ணிசையை மக்கள் மயப்படுத்தியவர். இன்னொருவரோ நவீன இசையின் நாற்றங்காலாக மாறியவர். இருவரிடமும் இன்னமும் குறையாத அந்த ஆர்வமும் ஆற்றலும் ஆச்சர்யப்படுத்தின. ஒரே ஒரு வித்தியாசம், இசைப்புயலுக்கு மண்ணிசைப் பாடல்களையும், இசைஞானிக்கு நவநவீன சொற்களையும் எழுத நேர்ந்ததுதான். ‘நெஞ்சமே நெஞ்சமே...’ காதல் பாடலில்கூட நாட்டார் இசையைக் இணைக்கலாமா என ரஹ்மான் கேட்டதும், ‘யாமே கொற்றம் யாதோ குற்றம்?’ என்கிற வரியை நவீன இசையாக்கலாமா என்று இளையராஜா துணிந்ததும் மேதைமையல்லாமல் வேறென்ன?
ஏஆர்.ரஹ்மானின் குரலில் வந்துள்ள ‘ஜிகு ஜிகு ரயில்’ திடகாத்திரமான அரசியல் பாடலாக இருக்கிறதே?
இசையமைப்பாளர் வித்யாசாகர் ‘ரயில் ஒரு நீண்ட புல்லாங்குழல்’ என்றிருக்கிறார். அதைவிட, அண்ணாவின் கதை வசனத்தில் 1947இல் வெளிவந்த ‘நல்லதம்பி’ திரைப்படத்திலும் ஒரு ரயில் பாடலுண்டு. உடுமலை நாராயண கவி எழுதியது. ‘கரகரவென சக்கரம் சுழல/கரும்புகையோடு வருகிற ரயிலே’ எனத் தொடங்கும் அப்பாடலில் ரயிலைச் சமத்துவத்தின் குறியீடாக ஆக்கியிருப்பார்கள். இது குறித்தெல்லாம் ரஹ்மானுடன் பேசிக்கொண்டிருக்கையில் பாப் மார்லியின் ‘Zion train is coming our way..’ என்கிற பாடலும் நினைவிற்கு வந்தது. ரயிலை முன்வைத்து நாமுமே சமத்துவத்தின், சமூகநீதியின் குறியீடாக ஒரு பாடலை உருவாக்கலாமா என இயக்குநர் மாரிசெல்வராஜ் கேட்டதும், அப்பாடல் பிறந்தது. ரயில், கடல், யானை, காடு இந்த நான்கையும் எத்தனை முறை பார்த்தாலும், எத்தனை முறை எழுதினாலும் அலுக்கவே அலுக்காது. எல்லாருக்கும் எல்லாமும் என்பதைச் சொல்ல ரயிலிசை உதவியது.
‘மாமன்னன்’ பாடல்களில் உள்ள சொற்களை ரஹ்மான் எப்படி எதிர்கொண்டார்?
வடிவேலுவின் குரலில் வந்துள்ள ‘மலையிலதான் தீப்பிடிக்குது’ பாடலில், ‘படை இருந்தும் பயந்த சனம்’ என்கிற வரியைக் கேட்டதுமே ரஹ்மானிடமிருந்து வெளிப்பட்ட உற்சாகம் சொல்லுக்குள் அடங்காதது. ‘உச்சந்தல ஓட்டுக்குள்ள நச்சரவம் பூந்ததென்ன’ பாடலில் ‘நச்சரவம்’ ‘மண்ணுருளி ’ ‘பாக்குவெட்டி பல்லுக்குள்ள’ போன்ற பிரயோகங்களை வியந்தார். ‘ஆதி... ஆதி’ பாடலில் ‘சீறும் காளைக் கூட்டம் மோத/சிங்கமே நீ ஓடு’ என்பதை நிதானித்து உள்வாங்கினார். ‘சிங்கநடை போட்டு சிகரத்தில் ஏறு’ என்றில்லாமல் ‘சிங்கமே ஓடு’ என்னும் மக்கள் அரசியலை வாழ்த்தினார். காட்டுக்கே ராஜா என்னும் கற்பிதம், ஆதிக்கத்தின் குறியீடு என்பதால் அதை விரட்டுவதும் துரத்துவமே பாடலின் சாரமென்பதை வரவேற்றார்.
முழுப்படத்துக்கு எழுதும்போது உங்கள் பாடல்கள் அழுத்தத்துடன் வெளிப்படுகிறன்றனவே?
காட்சிகளை எளிதாக உள்வாங்கி எழுத முடியும். முதல் பாடலில் சொல்லியதை அடுத்தப் பாடலில் வராமலும் பார்த்துக்கொள்ள முடியும். ஒரே தொனியில் எழுதப்படுவதால் ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு மெல்லிய இணைப்பைக் கொண்டுவரவும் முடியும். ‘மாமன்னன்’ படத்திலுள்ள பாடல்களில் வெற்றி, காடு ஆகிய சொற்கள் அனைத்துப் பாடல்களிலும் இடம்பெற்றிருக்கும். அதற்குக் காரணம், கதையின் தன்மையைப் பிரதிபலிப்பதே. மாமன்னன் படத்திலுள்ள அனைத்துப் பாடல்களும் புலமைப்பித்தனின் ‘நஞ்சை உண்டு / புஞ்சை உண்டு’ பாடலின் உந்துதலில் இருந்தே உருவானது.
‘மாடர்ன் லவ் சென்னை’ அனுபவம்?
அரிதும் பெரிதுமாக அமைந்த அனுபவம். ஒரே தொகுப்பில் நான்கு இசையமைப்பாளர்கள். ‘சூரியன் தோன்றுது சாமத்திலே’ இளையராஜாவுக்கு ‘யாயும் ஞாயும்’ யுவன் சங்கர்ராஜாவுக்கு ‘குக்கூன்னு கூவும் காகம் நீ’ ஜி.வி.பிரகாஷ்குமாருக்கு ‘ஒரு முறைதான் மழைவருமா?’ ஷான் ரோல்டன் என நான்கு பேருக்கும் நான்கு விதமாக எழுதினேன். ‘நினைவோ ஒரு பறவை’ படத்தில் பின்னணி இசைக்குப் பதிலாகப் பாடலையே அமைக்கலாமென்று இயக்குநர் தியாகராஜன் குமார ராஜா சொன்னதும், இளையராஜா சம்மதித்தார். ‘சுட்டாலுமே தீ இன்பமே’ என்றொரு பாடல். அது, ‘தீக்குள் விரல் வைத்தால் நந்தலாலா / நின்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா’ என்ற பாரதியின் தாக்கம்தான். அத்தொகுப்பிலுள்ள பதிமூன்றுக்கும் மேலான பாடல்கள் அனைத்திலும் பாரதி இருக்கிறான்.
வெற்றி மாறன், மாரி செல்வராஜ், ராஜு முருகன், சுதா கொங்கரா, தா.செ. ஞானவேல், தியாகராஜன் குமாரராஜா என நம்பிக்கைக்குரிய இளம் இயக்குநர்களுடன் தொடர்ந்து பணியாற்றுகிறீர்கள். அது பற்றி...
கடந்த இருபது வருடத்தில் ‘இதெல்லாம் சினிமாவில் எழுதவே முடியாதா’ என ஏங்கியிருக்கிறேன். அந்த ஏக்கங்களின் வடிகாலே தற்போதைய எனது திரைப்பாடல்கள். மார்க்ஸ், பெரியார், அம்பேத்கர் என்கிற புள்ளியைத் தொட்டு எழுதுவதில் எனக்கேற்படும் சந்தோத்திற்கு அளவில்லை. மக்களையும் மண்ணையும் முதன்மைப்படுத்தும் இயக்குநர்கள் இப்போது அதிகம் வந்திருக்கிறார்கள். அவர்களில் பலரும் என் நண்பர்களாகவும் தம்பிகளாகவும் இருப்பது என் கொடுப்பினை.
சினிமாவில் ஒரு சொல்கூட, அரசியல் சரி, தவறுடன் பார்க்கப்படும் சூழல் பற்றி சொற்களுடன் புழங்கும் உங்கள் கருத்து...
மிகச் சரி. இங்கே ஒவ்வொரு சொல்லுக்குப் பின்னேயும் ஜாதியும் மதமும் இருக்கிறது. ஒரு சொல் வெல்லும், ஒரு சொல் கொல்லும் என்பார்களே அப்படித்தான். எந்த இடத்தில் எதை எழுதுகிறோம் என்பதும் யாருக்காக எழுதுகிறோம் என்பதும் கவனத்துக்குரியவை. என்னையும் மீறி சில சமயம் பொதுப் புத்தியிலிருந்து ஓரிரு சொற்கள் கற்களாக வெளிப்பட்டுவிடுவதும் உண்டுதான். ஆனாலும், அரிசி களைவதுபோல ஒவ்வொரு முறையும் அந்தக் கற்களை களைந்துவிடுகிறேன்.
படத்தில் பாட்டுக்கான தேவை இன்று இல்லை என்று சமீபத்தில் இயக்குநர்கள் பலர் கருத்துத் தெரிவித்து வருகிறார்களே?
தமிழ் மரபே இசை மரபுதான் என்று உணர்ந்தால் பாடல்கள் தேவையில்லை என்ற முடிவிற்கு வரமாட்டார்கள். திரைப் பாடல்கள், காட்சியை நகர்த்துபவை அல்ல; காட்சிகளால் விவரிக்க முடியாதவற்றை விளக்க உதவுபவை. பிராந்திய அடையாளங்களைப் பாடல்களின் வழியேதான் கடத்த முடியும். தாலாட்டோ, ஒப்பாரியோ இப்போது பாடப்படுவதில்லை என்பதால் அது பண்பாட்டின் அம்சமென்பது இல்லாமல் போய்விடுமா? பாடல்களின் தேவை, திரைப்படத்திற்கு அவசியமோ இல்லையோ ஆனால், அவை மக்களுக்குத் தேவை என்பதுதான் என் கட்சி.
‘மாவீரன் கிட்டு’ படத்துக்குப் பிறகு வசனகர்த்தா யுகபாரதியைப் பார்க்க முடியவில்லையே...
வாய்ப்புகள் வருகின்றன. ஆனால், எல்லாமே வணிக ரீதியிலான படங்கள் என்பதால் முதலில் தயங்கினேன். முற்று முழுக்க வணிகம் அல்லாத படங்களே என்னுடைய விருப்பம். அரசியல் சார்புடைய படைப்புகள் என்றால் எழுதலாம் என்றுதான் காலம் கடத்தினேன். தற்போது ஆறு திரைப்படங்கள் என்னுடைய வசனத்தில் வரவுள்ளன. பாடல்களைவிடவும் வசனங்களில் கூடுதலாக என்னை வெளிப்படுத்த முடிகிறது. ‘விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை’ என்ற பாவேந்தரின் சொற்களைத்தான் வசனங்களை எழுதும்போது எண்ணிக்கொள்கிறேன்.
இலக்கியம் தொடர்பாக என்ன எழுதிவருகிறீர்கள்?
சமீபத்தில் சங்க இலக்கியத்தை முன்வைத்து ‘மேல் கணக்கு’ என்னும் நூல் எழுதியுள்ளேன். விரைவில் வரவுள்ளது. ‘வல்லார் ஆயினும் வல்லுநர் ஆயினும்’ என்றொரு புறநானூற்றுப் பாடல் (57) உண்டு. அப்பாடல், ‘நீ பிறரது நாட்டைக் கைப்பற்றினாலும் அந்நாட்டு விளைச்சல் நிலங்களை உன் போர் மறவர்கள் அழித்தாலும், ஊரைத் தீயிட்டுக் கொளுத்தினாலும் வேல்மறவர்களைக் குத்திக் கொன்றாலும் அவ்வளவு ஏன், எது செய்தாலும் பகைவர் நாட்டுக் காவல் மரங்களை மட்டும் வெட்டிவிடாதே. ஏனென்றால் அவை உன் யானைகளைக் கட்டிவைப்பதற்கு உதவும்’ என்று சொல்லும். இன்றைய காலத்தில் காவல் மரத்திற்குப் பதிலாக மொழியை அவ்விடத்தில் வைத்தோமென்றால் அப்பாடலின் பொருள் கூடுதல் சுவையுடைதாக மாறும். ‘ஒரு பண்பாண்டின் பயணம்’ என்று ஆர்.பாலகிருஷ்ணன் சங்கப்பாடல்களின் வழியே தமிழரின் நிலப்பரப்பை ஆய்ந்திருக்கிறார். நான் நம்முடைய கலை இலக்கியங்களின் மரபுத் தொடர்ச்சியைச் சங்கப் பாடல்கள்மூலம் காட்டியிருக்கிறேன்.