

அவல நகைச்சுவையை அடிநாதமாகக் கொண்ட ‘Black Comedy' வகைப் படங்கள் உங்களுக்குப் பிடிக்குமா? எடுத்துக்காட்டாக, ‘சூது கவ்வும்’ படத்தில் இன்ஸ்பெக்டர் பிரம்மா தனது பின்புறத்தில் சுட்டுக்கொண்டபோது, அதிர்ச்சி அடைவதற்குப் பதிலாக உங்களுக்குச் சிரிப்பு வந்ததா? வந்தது என்றால் பிளாக் காமெடிப் படங்கள், சீரீஸ்கள் ஆகியவற்றின் நோக்கமும் அதுதான். திரையில் ஒரு கதாபாத்திரம் உயிரே போவது போன்ற சூழலில் கஷ்டப்படும்போது அதைப் பார்க்கும் நமக்குச் சிரிப்பு வரவேண்டும். எதைப் பற்றியெல்லாம் பேசுவது பிரச்சினைகளில் முடியும் என்று இருக்கிறதோ, அவற்றையெல்லாம் பகடி செய்வதே பிளாக் காமெடி.
‘மும்பை எக்ஸ்பிரஸ்’ படத்தில், அப்பாவியான கமல் ஹாசன் கதாபாத்திரத்தை, பசுபதியின் கதாபாத்திரம் மூளைச்சலவை செய்யும். “செடி கிட்ட பட்டா கேப்பியா? மரத்து கிட்ட? நாமெல்லாம் அதுல இருந்து முளைச்சி வந்தவங்கதான். அதனால எல்லாமே நமக்குத்தான் சொந்தம். இந்திய நாட்டு மக்களுக்குச் சொந்தமான ஒரு இடத்த வியாபாரி ஒருத்தன் புல்டோசர் வெச்சி இடிச்சிட்டுப் போயிட்டான் தெரியுமா?” என்று அவர் சொல்லி முடிக்கும்போது பின்னணியில் குதிரை கத்தும். இந்த வசனத்தைக் கேட்ட கமல் ஹாசன் உடனடியாக உள்ளம் நெகிழ்ந்து கடத்தலுக்கு ஒப்புக்கொண்டுவிடுவார். இந்தக் காட்சியைப் படத்தில் பார்த்தால் சிரிப்பு வராமல் இருக்காது. தேசப்பற்று, வீடில்லாதது ஆகிய கருத்துகளை வைத்துப் பகடிசெய்திருப்பார் கமல் ஹாசன். ஆனால், அது இந்தக் காட்சியில் கச்சிதமாகப் பொருந்தும். இப்படித்தான் ஏழைகள் மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்றும் நாம் எடுத்துக்கொள்ளலாம். ‘மும்பை எக்ஸ்பிரஸ்’, ‘சூது கவ்வும்’ போன்றவை தமிழில் பிளாக் காமெடிக்கு உதாரணம். கூடவே நெல்சன் எடுத்த ‘டாக்டர்’ படத்தையும் சொல்லமுடியும். நெல்சனின் ‘கோலமாவு கோகிலா’ இன்னொரு சிறப்பான உதாரணம். அதில் ஒரு குடும்பமே சேர்ந்து கொலை செய்வதை நாம் ரசித்தோம்.
தமிழ்ப் படங்களில் எம்.ஆர்.ராதா மிகச் சிறப்பாக இந்த பிளாக் காமெடியைக் கையாண்டிருப்பார். ‘பாகப்பிரிவினை’ படத்தில் சிவாஜி கணேசனுக்கு ஒரு கைதான் இருக்கும். அவரிடம் ஒரு காட்சியில் எம்.ஆர்.ராதா கேட்பார், “ஒத்தக் கைல எப்புடிடா சாமி கும்புடுவ? சலாம் போடுவியா?” என்று. இந்த வசனம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதேபோல் எம்.ஆர்.ராதாவின் நக்கல் தெறிக்கும் வசனங்களில், விமர்சனம் செய்வதே பாவம், தவறு என்று சமூகம் புனிதமாகப் பொத்திப் பாதுகாத்த பல விஷயங்களை வன்மையாகவே விமர்சனம் செய்திருக்கிறார். நகைச்சுவை கலந்து கொடுப்பதால் அவை நமக்கும் எளிதில் புரியும். இயக்குநர் மணிவண்ணனும் அவரது படங்கள் சிலவற்றில் பிளாக் காமெடி வகை வசனங்களை எழுதிப் பயன்படுத்தியிருக்கிறார்.
உலகெங்கும் பிளாக் காமெடிக்கு உதாரணங்கள் பல உண்டு. குவென்டின் டாரன்டினோ எடுக்கும் பல படங்களிலும் பிளாக் காமெடி பரவலாக இடம்பெற்றிருக்கும். பிரிட்டிஷ் இயக்குநர் மார்ட்டின் மெக்டோனா (Martin McDonagh) இதில் மிகச் சிறப்பானவர். அவரது நான்கு படங்களுமே இந்த வகைதான். அவை பல விருதுகளை வென்றிருக்கின்றன. அவரது இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான சமீபத்திய ‘தி பேன்ஷீஸ் ஆஃப் இன்ஷிரின்’ (The Banshees of Inisherin) படத்தில் பிளாக் காமெடி அங்கங்கே இடம்பெற்றிருந்தாலும், அவரது ‘செவன் சைக்கோபாத்ஸ்’ (Seven Psychopaths), ‘இன் புரூஷ்’ (In Bruges) ஆகியவை பிளாக் காமெடிக்கு மிகச்சிறப்பான உதாரணங்கள். கோயன் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஜோயல்.