Last Updated : 27 Oct, 2017 11:25 AM

 

Published : 27 Oct 2017 11:25 AM
Last Updated : 27 Oct 2017 11:25 AM

தரணி ஆளும் கணிணி இசை 06: விரல்களின் வழியே வெளிப்படும் கற்பனை

சி

வாஜி, எம்.ஜி.ஆர் இருவருக்குமான திரை பிம்பங்களை கட்டமைத்ததில் ‘கவியரசர்’ கண்ணதாசனின் பாடல் வரிகளுக்கும் கணிசமான பங்குண்டு. அவர்களுக்குப் பிறகு, கமல், ரஜினியின் காலம் தொடங்கியபோது கண்ணதாசனும் தொடர்ந்தார். பல சீனியர் இயக்குநர்களுடன் பணியாற்றிய கண்ணதாசன் அன்று புதுமைகளையும் புதிய திறமைகளையும் அறிமுகம் செய்துவந்த ‘இயக்குநர் சிகரம்’ கே.பாலசந்தரின் சில படங்களுக்கு பாடல்கள் எழுதினார். “ பாலசந்தர் படங்களுக்குப் பாடல் எழுதுவது என்றால் அது இனிய அனுபவமாக அமைந்துவிடும்”என்று கவியரசர் கூறியதற்குக் காரணமாக அமைந்த பல பாடல்களில் ஒன்று,

‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்

இதயசுரங்கத்துள் எத்தனை கேள்வி

காணும் மனிதருக்குள் எத்தனை சலனம் - வெறும்

கற்பனை சந்தோஷத்தில் அவனது கவனம்…’

- கதாபாத்திரங்கள், அவர்கள் சந்திக்கும் சூழ்நிலைகள், எதிர்கொள்ளும் மனமாற்றங்களுக்கு, ராகங்கள் மற்றும் தாளங்களின் பெயர்களைச் சூட்டி, மனித வாழ்க்கையை இசைமொழிக்குள் அடக்கிவிடலாம் என்று ‘அபூர்வ ராகங்கள்’ படத்தில் காட்டினார் பாலசந்தர். நடிகர்களுக்காக அல்லாமல் கதாபாத்திரங்களுக்காக பாடல்கள் எழுதும் வாய்ப்பு கண்ணதாசனுக்கு இந்தப் படத்திலும் அமைந்தது.

அவர் எழுதிய ‘ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை பாடல்’ பந்துவராளி, ரஞ்சனி, சிந்து பைரவி, காம்போதி ஆகிய நான்கு ராகங்களின் கலவையில் எம்.எஸ்.வியால் இசையமைக்கப்பட்டது. கதையையும் கதாபாத்திரங்களையும் முன்னிறுத்தி எம்.எஸ்.வியால் செய்யப்பட்ட இசைப் பரிசோதனை என்றே இந்தப் பாடலைக் குறிப்படலாம். இசை என்று வந்துவிட்டால் ‘ஸ ரி க ம ப த நி’ என்கிற இந்த ஏழு எழுத்துகளை (ஸ்வரங்களை) உச்சரிக்கும்போது உருவாகும் ஒலியைத்தான் நாம் அடிப்படையான மியூசிக் நோட்டாக (music note) வைத்திருக்கிறோம். (உண்மையில் 12 ஸ்வரங்கள்). ஆனால் சாதாரண ஏழு எழுத்துக்களை உச்சரித்தால் எப்படி இசை உருவாகும் என்று நீங்கள் கேட்கலாம். இந்த எழுத்துக்களைக் குறிப்பிட்ட கால அலகில் (Note duration) உச்சரித்துப் பாடும்போதுதான் அவை இசை ஸ்வரங்களாக மாறுகின்றன. நம் கற்பனையில் பிறக்கும் மெட்டுக்களை இந்த ஏழு ஸ்வரங்களின் கட்டுக்கோப்புக்குள் அடக்கிவிடலாம். இசைக் கருவிகளை வாசிக்கும்போதும் இதுதான் அடிப்படையான இசை இலக்கணம்.

விரல்களின் வழியே

ஒரு வாத்தியத்தின் ஒலிகளை சேம்பிள்களாக உருவாக்குகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். இந்த ஏழு சுரங்களில் அதன் ஒலிகளை (notes) வாசிக்கச் செய்து அவற்றைத் தனித் தனி ஒலிகளாக சேமித்துத் தருவதுதான் சேம்பிள் தயாரிப்பாளரின் வேலை. இன்னும் சற்று எளிமையாகக் கூற, நம் பண்பாட்டில் இரண்டறக் கலந்துவிட்ட தாள வாத்தியமான தவிலை எடுத்துக்கொள்வோம். 15-ம் நூற்றாண்டில் அருணகிரி நாதர் பாடிய திருப்புகழில் பல இடங்களில் தவில் பற்றிக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றால் தவிலின் பழைமையைப் பாருங்கள். தவிலிலிருந்து பிறக்கும் ஒலி கணீரென்று இருந்தாலும் காதுக்கு இனிமையாக ஒலிப்பதால் அதை ரசிக்கிறோம். தவிலின் உருளை வடிவிலான பகுதியை பலா மரத்தினால் செய்கிறார்கள். ஒலியின் தரம் குறையாமல் இருக்கவும் அதன் அதிர்வுகளில் பிசிறு தட்டாமல் இருக்கவும்தான் இந்தப் பலா மரம். ‘தவிலுக்கு இரு பக்கமும் இடி’ என்ற பழமொழியை இன்றும் நாம் பயன்படுத்துகிறோம். இரு பக்கமும் அடிவாங்கினாலும் இனிய ஒலியை மட்டுமே வெளிப்படுத்தும் தவிலின் சிறிய பக்கத்துக்குப் பெயர், ‘வளந்தலை’. பெரிய பக்கத்துக்கு பெயர் தொப்பி. சிறிய பக்கத்தை விரல்களில் கவசம் போன்ற கூடுகள் மாட்டிக்கொண்டு வாசிப்பார்கள். பெரிய பக்கத்தை வைரம்பாய்ந்த குச்சியைக் கொண்டு வாசிப்பார்கள். இத்தனை நுட்பமும் இலக்கணங்களும் கொண்ட தவிலில் அடித்து முழங்கப்படும் அடிப்படையான அடிமுறை இவைதான்…

‘த கி தொம் நம் ஜம்’

‘த கி தொம் நம் கி ட ஜம்’

ஏழு ஜதிகளுக்குள் அடங்கிவிடும் இந்த அடிமுறைகளை தவில் கலைஞர்களை அழைத்து, ஒவ்வொரு அடியையும் தனித்தனியே வாசிக்க வைத்து சேம்பிள் ஒலிகளாகப் பதிவுசெய்து கொள்கிறார்கள்.

உதாரணமாக ‘த கி தொம் நம் ஜம்’ என்ற அடி வரிசையில் ‘த’ என்பது ஒரு சேம்பிள், ‘கி’ என்பது ஒரு சேம்பிள், ‘தொம்’ என்பது ஒரு சேம்பிள், ‘நம்’ என்பது ஒரு சேம்பிள், ‘ஜம்’ என்பது ஒரு சேம்பிள். இப்படி தனித்தனியே இசைக்கப்பட்டுப் பதிவு செய்யப்பட்ட தவில் சேம்பிள்களை பயன்படுத்தி, பாடலுக்கான அடிப்படை ரிதம் கம்போஸ் செய்ப்படுகிறது அல்லது பின்னணி இசைக்கோவையில் ஒரு சரடாக பயன்படுத்தப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுவோம். இப்போது அதைச் செய்யும் கம்போஸர், தன் கைவிரல்களைக் கொண்டு வாசிக்க, தனக்கு ஏற்ற வசதியுடன் இருக்கும்படி, மிடி கீபோர்ட் கருவியின் கருப்பு வெள்ளை கீக்களில் (Black and white keys) தனது வசதிக்கு ஏற்றபடி அசைன் செய்துகொள்ளலாம். அதேபோல் ரிதம் பேடிலும் அசைன் செய்து கொள்ளலாம். இப்படி சேம்பிள் ஒலிகளை வசதிக்கேற்ப அசைன் செய்துகொண்டதும் தவில் இல்லாமலேயே, உங்கள் கற்பனை விரல்வழியே வெளிப்பட்டு, தாளத்தை வடிவமைக்கிறது.

இசையொலியின் அழுத்தம்

தவில்தான் என்றில்லை, எந்த இசைக்கருவியாக இருந்தாலும் அதன் அடிப்படை ஒலிகளை சேம்பிள் செய்து மிடி கீ போர்டு அல்லது மிடி பேட் வழியாக வாசிக்கலாம். கணினித் தொழில்நுட்பம் தந்திருக்கும் இந்த வரத்தை இசையமைப்பாளர்கள் தங்களது அனுபவத்தைக் கொண்டு எப்படிப் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அது இரைச்சலற்ற இசையாக மாறுகிறது.

ஒரு வாத்தியத்தில் இசைக்கப்படும் பல நுட்பமான, தனித்த ஒலிகளை வாசிக்க வேண்டுமானால், அவர் தனது விரல்களால், அல்லது மூச்சுக் காற்றால் எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் (velocity) அந்த குறிப்பிட்ட ஒலியைப் பெறமுடியுமோ அந்த அளவு மட்டுமே அழுத்தம் கொடுத்து வாசிப்பார். இது அந்தக் கலைஞர்களுக்கு அனுபவத்தில் உருவாகும் கலைத்திறன். உதாரணமாக உறுமி மேளத்தில் வளைந்த குச்சியை வைத்துத் தேய்த்து ‘பூம்..பூம்… பூம்ம்ம்.. பூம்.’ என்ற சத்தத்தை உருவாக்க அதில் கைதேர்ந்த கலைஞரால்தான் முடியும். உறுமியின் அடிப்படை இசையொலிகள் பதிவு செய்யப்பட்ட சேம்ப்ளரைப் பயன்படுத்தும் கம்போஸர் தன் விரல்களுக்கு எவ்வளவு அழுத்தம் கொடுத்தால் தனக்குத் தேவைப்படும் அசலான ‘பூம் பூம்ம்’ ஒலியைப் பெறமுடியும் என்பது அவரது அனுபவத்தை பொறுத்தது.

இவ்வாறு சேம்பிளரிலிருந்து உருவாகும் இசை, ‘லைவ் சவுண்டு’க்கு இணையாக இருக்கும் என்று கூறமுடியும். இதைத் தாண்டி சேம்பளர் ஒலிகளை இசையாக மாற்றுவதில் ஒரு முக்கிய குறைபாடு இருக்கிறது. சேம்பளரில் பதிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு வாத்தியத்தின் ஒலிகளை வாசிக்கும்போது, அவை ‘கட் நோட்’டாக ஜீவனற்றத் தன்மையுடன் இருக்கும். இப்படியிருக்கும் சேம்பிள்களை வாசித்தால் அவற்றுக்கு இடையே ‘இணைப்பு’ என்பது இருக்காது. இவற்றுக்குள் ஒரு இணைப்பை உருவாக்கி அழகுபடுத்த, இரண்டுக்கும் தொடர்புடைய ஒரு ‘ரிலேட்டிவ் நோட்’ தேவை. இப்போது சேம்பிள் ஒலிகளுக்கு இடையே ஃபெர்பார்மென்ஸ் டூல் (performance tools) மென்பொருளைப் பயன்படுத்தும்போது ‘லைவ்’ இசைக்கான ஜீவன் கிடைத்துவிடும்.

இத்தனை வசதிகளைக் கணினி இசை அள்ளிக்கொடுத்தாலும் கதையும் களமும் கோரும் ஒரு தனித்த இசையை அதிலிருந்து உருவாக்க முடியாது என்பதற்கு, எனது இசையமைப்பில் வெளிவரவிருக்கும் ‘நெடும்பா’ திரைப்படம் மிகச் சிறந்த பாடம். மலைவாழ் பழங்குடி மக்களின் இசையும் கருவிகள் எந்த சேம்பளரிலும் சேமிக்கப்படாதபோது, அதற்காக நான் என்ன செய்தேன் என்பதை அடுத்த வாரம் பார்க்கலாம்.

தொடர்புக்கு tajnoormd@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x