Last Updated : 13 Oct, 2017 10:12 AM

Published : 13 Oct 2017 10:12 AM
Last Updated : 13 Oct 2017 10:12 AM

தரணி ஆளும் கணிணி இசை 04: இடைவெளியை நிரப்பும் இசை!

‘முதல்வன்’ படத்தில், தொலைக்காட்சிச் செய்தியாளர் அர்ஜுனுக்கும் கிராமத்துப் பெண்ணான மனிஷாவுக்கும் காதல். ‘ஒருநாள்’ முதல்வராக இருந்து அர்ஜுன் செய்த அதிரடியான தூய்மைப் பணியைப் பார்த்து, அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். ஆட்சியை இழந்த அரசியல்வாதிகளால் அர்ஜுன் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் எந்த வடிவிலும் ஆபத்து வரலாம் என்ற நிலையில், இரண்டாம் பாதிக் கதை பரபரவென்று நகர்ந்துகொண்டிருக்கிறது.

இத்தனை பரபரப்புக்கிடையில் நாயகன் அர்ஜுன் தன் காதலியைச் சந்திக்க கிராமத்துக்கு வருகிறார். இயக்குநர் விரும்பிக் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, ‘குறுக்கு சிறுத்தவளே’, ‘அழகான ராட்சஸியே’ ஆகிய பாடல்களைப் போலவே இந்தச் சூழ்நிலைக்கான பாடலையும் இதயத்தின் அடியாழம்வரை ஊடுருவிச் செல்லும் மெலடியாக மெட்டமைத்து முடித்துவிட்டார் ரஹ்மான். பாடல்பதிவும் முடிந்துவிட்டது.

பாடலைக் கேட்ட இயக்குநர் ஷங்கர், அதில் விரவிக்கிடந்த காதல், மெட்டின் மென்மையில் உருகிப்போய்விட்டார். ஆனால், உதவி இயக்குநர்கள் பிடித்துக்கொண்டார்கள். “கதை இவ்வளவு வேகமாகச் சென்றுகொண்டிருக்கும்போது இப்படியொரு மெலடியை இடம்பெறச்செய்தால் அது சரியாக இருக்குமா?” என்று கேட்டு இயக்குநரிடம் விவாதிக்க ஆரம்பித்துவிட்டார்கள். விவாதத்தின் முடிவில் ஒரு முடிவுக்கு வந்தார்கள். இந்தப் பாடல் கதையின் வேகத்தைக் கட்டுப்படுத்தலாம், எனவே, கதையின் வேகத்துக்கு ஈடுகொடுப்பதுபோல் பாடல் வேகமாக இருக்க வேண்டும் என்று பேசி, முடிவுக்கு வந்தார்கள்.

இதற்காகக் காத்திருந்தவர்போல ரஹ்மான் உடனே இசையமைத்துக் கொடுத்த பாடல்தான் ‘உப்புக் கருவாடு’. கதையின் போக்கிலிருந்து விலகாதபடி உச்ச வேகத்தில் செல்லும் பாடாலாக உப்புக்கருவாடு அமைந்து. அதனால், அது ஊறுகாயாக இல்லாமல் படத்தின் ‘மெயின் டிஷ்’களில் ஒன்றாக மாறி பெரிய வெற்றியைப் பெற்றது. கதையின் பயணம் எவ்வளவு வேகமாக இருக்கிறதோ அதனுடன் இணைந்து செல்லும் விதமாகப் பாடலின் வேகமும் இல்லாமல் போகும்போதுதான் எழுந்து பாத்ரூம் போக நினைக்கிறார்கள் ரசிகர்கள்.

இசைக்கான இடைவெளியைக் கண்டுபிடித்தல்

பாடலின் வேகத்தைப் போலவே, திரைக்கதையில் நிகழும் சம்பவங்களைப் பார்வையாளர்கள் நம்பும்படி செய்வதில் பின்னணி இசையின் டெம்போவும் முக்கியமானது. கதை வளர்ந்துகொண்டே செல்லும்போது காட்சியின் சூழ்நிலைக்கு ஏற்ப பின்னணி இசையின் வேகமும் அதன் தன்மையும் மாறிக்கொண்டே வர வேண்டும். காட்சி எவ்வளவு சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தாலும், நடிகர்கள் எவ்வளவு நடிப்பைக் கொட்டியிருந்தாலும் அந்த இரண்டு முயற்சிகளுக்கும் உயிர்கொடுக்கும் சூட்சுமம் பின்னணி இசையின் டெம்போவில்தான் அடங்கியிருக்கிறது. ஒரு காட்சிக்கு எந்த இடத்தில் எவ்வளவு டெம்போ கொடுத்தால் அது உயிர்பெறும் என்பது இசையமைப்பாளருக்குத் தெரிந்திருக்க வேண்டும்.

சிறப்பாகப் படமாக்கப்பட்டிருந்தும் டெம்போ சரியான அளவில் இல்லையென்றால் அந்தக் காட்சியைப் பின்னணி இசையே கெடுத்துவிடலாம். இந்த இரண்டையும்விட முக்கியமானது, காட்சிகளில் பின்னணி இசைக்கான இடைவெளிகளை விட்டு இயக்குநர் படமாக்கியிருப்பதை ஒரு சிறந்த இசையமைப்பாளர் உணர்ந்து இசையமைப்பது. அதற்காகவே விடப்படும் இடங்களை இசையால் நிரப்பி உயிரூட்டத் தெரிந்திருப்பதுதான் முக்கியமான வித்தை. இதற்கு கீபோர்டை மட்டுமோ ஏதோ ஒரு இசைக்கருவியையோ வாசிக்கத் தெரிந்திருந்தால் மட்டும்போதாது; லேட்டஸ்ட் சாம்பிளர் மென்பொருட்களை விலைகொடுத்து வாங்கி வைத்திருந்தால் இதைச் செய்துவிட முடியாது, நீண்ட, ஆழமான அனுபவம் தேவை.

இசையமைப்பாளரும் இயக்குநர்தான்

படப்பிடிப்பு முழுமையாக முடிந்த பிறகு, ரஃப் கட் அல்லது டைரக்டர் கட் என்று சொல்லக்கூடிய முதல் கட்ட எடிட்டிங் பணியை முடித்துக்கொண்டுவந்து இசையமைப்பாளரிடம் படத்தைக் கொடுத்துவிடுவார்கள். அதில் நட்சத்திரங்கள் டப்பிங் பேசியது இருக்கும். சவுண்ட் எஃபெக்ட் என்று சொல்லக்கூடிய சிறப்பு ஒலிகளை மட்டும் சேர்த்திருக்கலாம். கிட்டத்தட்ட ஊமைப் படத்தைப்போன்ற இந்தப் பிரதியைப் பார்த்து இசையமைப்பாளர் அதற்குப் பின்னணி இசையால் உயிர் தர வேண்டும். கதையை ஏற்கெனவே இயக்குநர் இசையமைப்பாளருக்குக் கூறியிருந்தாலும் தற்போது கண்முன்னால் இருக்கும் பிரதியில் இருப்பது வேறொன்றாக இருக்கலாம்.

ஒவ்வொரு காட்சியாகக் கதை எப்படி விரிகிறது, கதாபாத்திரங்களாக நடித்திருக்கும் நடிகர்களின் வெளிப்படுத்தும் திறன் எந்த லெவலில் இருக்கிறது, காட்சியின் சூழலும் அதன் ஒளியும் இருளும் என்ன சொல்ல வருகின்றன, கேமரா கோணங்கள் உணர்த்துவது என்ன, மிக முக்கியமாக ஒரு காட்சி எங்கே தொடங்கி எங்கே முடிகிறது எனப் பல அம்சங்களைப் புரிந்துகொண்டு பின்னணி இசையை அமைக்கிறார் இசையமைப்பாளர். இந்த இடத்தில்தான் இசையமைப்பாளரும் ஒரு இயக்குநராகத் தன்னைக் கருதிக்கொண்டு பின்னணி இசையால் படத்தைத் தூக்கி நிறுத்த முயல்கிறார்.

இசைக்கான இடைவெளி

ஒரு படத்தின் பின்னணி இசை எப்போது பாராட்டப்படுகிறது என்றால், கதாபாத்திரங்களின் உணர்வுகளையும் காட்சிச் சூழலின் உணர்ச்சியையும் அது பார்வையாளர்களுக்கு மிகச் சரியாகக் கடத்திவிடும்போதுதான். பின்னணி இசை வகிக்கும் பங்கை நன்கு அறிந்த, அனுபவம் மிக்க இயக்குநர்கள், காட்சிகளில் இசைக்கென்று இடைவெளிவிட்டு (musical space) எடிட் செய்திருப்பார்கள். இப்படி இசைக்கான இடைவெளி விடப்பட்ட காட்சிகளில் இசை மெல்ல வளர்ந்து, அந்தக் காட்சியின் முழுமைக்கும் படர்ந்து, அதற்கு உயிர்கொடுக்கும்.

இப்படி இயக்குநரால் உருவாக்கப்பட்ட இசை இடைவெளிகளை மிகச் சிறப்பாக இசையமைப்பாளர் நிரப்பிய பல படங்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருக்கின்றன. அவற்றில் ஒன்று பாலா இயக்கி இளையராஜா இசைமைத்த ‘சேது’ படம். அந்தப் படத்தில் இளையராஜா, லைவ் வாத்தியக் கருவிகளை அதிகமாகப் பயன்படுத்தி (லைவ் ஆர்கெஸ்ட்ரா) பாடல்களையும் பின்னணி இசையையும் அமைத்திருந்தார்.

கணினி இசையும் ‘லைவ்’ இசையும்

வாத்திய இசைக் கலைஞர்களின் உதவியில்லாமல் கணினி தானாக ஒன்றைச் செய்துவிடுவதில்லை. அதேபோல் வாத்திய இசைக் கலைஞர்களின் பங்களிப்பு இல்லாமல் எந்த இசை மென்பொருளும் சந்தையில் உருவாதில்லை. அவற்றில் ஒன்று ஈஸ்ட் வெஸ்ட் இசை சாஃப்ர் வேர் தொகுப்புகள். திரையிசை உலகைக் கலக்கிவரும் இந்த மென்பொருட்களின் பின்னணியை அடுத்த வாரம் அலசுவோம்.

தொடர்புக்கு tajnoormd@gmail.com
( ரகசியம் தொடர்ந்து உடையும்)

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x