

பா
லிவுட்டின் பிரபல இயக்குநரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியிருக்கும் ‘பத்மாவதி’ படத்தின் டிரெய்லர், அக்டோபர் 9-ம் தேதி சமூக ஊடகங்களில் வெளியானது. இந்த டிரெய்லர், பதினெட்டு மணி நேரங்களுக்கும் மேலாக ட்விட்டரில் டிரெண்டாகியிருக்கிறது. இந்தப் படத்தில், ‘பத்மாவதி’ கதாபாத்திரத்தில் தீபிகா படுகோனும் ‘ராவல் ரதன் சிங்’ கதாபாத்திரத்தில் ஷாஹித் கபூரும் அலாவுதீன் கில்ஜி கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங்கும் நடித்திருக்கின்றனர்.
அமிதாப் பச்சன், ஹ்ரித்திக் ரோஷன், ஃபர்ஹான் அக்தர், ராஜமவுலி உள்ளிட்ட பிரபலங்கள் ‘பத்மாவதி’ படத்தின் டிரெய்லரை வியந்து பாராட்டியிருக்கின்றனர். “பித்துப் பிடிக்க வைக்கும் அளவுக்கு அழகாக இருக்கிறது” என்று ‘பத்மாவதி’படத்தின் டிரெய்லரைப் பார்த்த பிறகு, ட்விட்டரில் சொல்லியிருக்கிறார் ‘பாகுபலி’ இயக்குநர் ராஜமவுலி. இந்த டிரெய்லருக்குக் கிடைத்த வரவேற்பைப் பார்த்து நெகிழ்ந்துபோன ரன்வீர் சிங், ரசிகர்களுக்கு ட்விட்டரில் உணர்ச்சிகரமாக நன்றி தெரிவித்திருக்கிறார்.
டெல்லி சுல்தான்களில் ஒருவரான அலாவுதீன் கில்ஜி, சித்தூர் ராணி பத்மாவதியின் மீது ஆசைகொண்டதால் ஏற்படும் விளைவுகளை இந்தப் படம் பேசியிருக்கிறது. தயாரிப்பில் இருக்கும்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்ட இந்தப் படம், டிசம்பர் 1-ம் தேதி வெளியாகிறது.