ஜூன் 16, 1924 | டி.ஆர். மகாலிங்கம் நூற்றாண்டு: நினைவில் வாழும் கந்தர்வக் குரல்!

படங்கள் உதவி : ஞானம்
படங்கள் உதவி : ஞானம்
Updated on
3 min read

செங்கோட்டைச் சிங்கம், எட்டுக்கட்டையில் பாடும் சாரீரம் கொண்ட பாடக நடிகர் என்று நாடக உலகில் புகழ்க்கொடி நாட்டியவர் எஸ்.ஜி.கிட்டப்பா. அவருக்குப் பின் கம்பீரமும் இனிமையும் சரியான கலவையில் இணைந்த குரலில் பாடி ‘கிட்டப்பாவின் இசை வாரிசு’ என்று புகழ் பெற்றவர் டி.ஆர்.மகாலிங்கம். முத்தமிழும் அரியாசனத்தில் அமர்ந்திருந்த மதுரையின் மைந்தர்.

காரைக்குடியில் கீற்று வேய்ந்த படப்பிடிப்புத் தளங்களை அமைத்து, ஏவி.மெய்யப்பன் பேசும் படம் தயாரித்து, இயக்கிய காலம். கண்களை அள்ளும் கொள்ளை அழகுடன் 14 வயது டி.ஆர்.மகாலிங்கம் பாடுவதைக் கண்ட மெய்யப்பன், தனது ‘நந்த குமார்’ (1938 ) படத்தில் பதின்ம வயதுக் குறும்புக் கண்ணன் வேடம் கொடுத்து, சிறார் நடிகராக அறிமுகப்படுத்தினார். பின்னர் அவரே 21 வயது மகாலிங்கத்தை ‘ஸ்ரீவள்ளி’ (1945) படத்தில் கதாநாயகனாக அறிமுகப் படுத்தினார்.

நாடக மேடையைப் போல் அல்லாமல், வேடனாகவும் விருத்தனாகவும் வேலனாகவும் மகாலிங்கத்தையே நடிக்க வைத்தார். ‘காயாத கானகத்தே...’ என்று அந்தப் படத்தில் மகாலிங்கம்’ பாடிய கணீர் குரல் கானம், ‘கிட்டப்பா மீண்டும் பிறந்துவிட்டார்’ என்று ரசிகர்களைச் சொல்ல வைத்தது. ஒரே நடிகரே முருகனின் மூன்று தோற்றங்களையும் ஏற்று நடிக்க முடியும் என்கிற ஏவி.மெய்யப்பனின் எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தது. 55 வாரம் பிய்த்துக்கொண்டு ஓடிய ‘ஸ்ரீவள்ளி’யின் வெற்றி, 23 வயதிலேயே 1 லட்சம் ரூபாய் ஊதியம் பெறும் நட்சத்திரமாக மகாலிங்கத்தை மாற்றியிருந்தது.

‘நாம் இருவர்’
‘நாம் இருவர்’

சத்திய மூர்த்தியின் பாராட்டு: திண்ணைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரை பயின்ற பின், 12 வயதில் செல்லூர் சேஷ அய்யங்கார் பஜனைக் குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார் மகாலிங்கம். மதுரைச் சுற்று வட்டாரக் கோயில்கள் தோறும் பாடிய அவரை, ‘பக்திப் பரவசமூட்டும் குரலைக் கொண்டிருக்கும் இப்பாலகன் சினிமாவுக்குப் போனால் ஜெயிக்கலாம்’ என்று தங்க மோதிரம் அணிவித்து ஆசீர்வாதம் வழங்கினார் சுதந்திரப் போராட்ட வீரர், நாடகக் கலைஞர்களின் காவலர், அப்போது தமிழ்நாட்டு காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராக இருந்த தீரர் சத்தியமூர்த்தி.

அதன் பின்னர்தான் ஏவி.மெய்யப்பனின் பார்வை மகாலிங்கத்தின் மீது விழுந்தது. அழகும் குரலும் இணைந்த கலவையாக மகாலிங்கம் இருந்ததில் ‘பக்த பிரகலாதா’, ‘சதிமுரளி’, ‘பரசுராமர்’, ‘பூலோக ரம்பை’ என அடுத்தடுத்துப் பல படங்களில் துணை வேடங்கள் அமைந்தன. ஆனால், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு ‘ஹீரோ மெட்டீரியல்’ என்பதைச் சரியாகக் கணித்த ஏவி.மெய்யப்பன் அதை ‘ஸ்ரீவள்ளி’யில் சாத்தியமாக்கிக் காட்டினார்.

‘ஞான சௌந்தரி’
‘ஞான சௌந்தரி’

சமூகக் கதையிலும் சாதனை: தமிழ் சினிமாவில் சுதந்திர உணர்ச்சிப் பொங்கி வழிந்துகொண்டிருந்த காலகட்டம். காந்தியவாதியான ஏவி.மெய்யப்பன் சிறந்த தேசபக்திக் கதையைத் தேடிக்கொண்டிருந்தபோது அவரது கவனத்தைக் கவர்ந்தது என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினர் நடத்தி வந்த ‘தியாக உள்ளம்’ என்கிற நாடகம். ‘நாம் இருவர்’ என்கிற தலைப்பில் அதைப் படமாக்க உரிமை பெற்ற மெய்யப்பன், ‘தியாக உள்ளம்’ நாடகத்தில் நாயகனாக நடித்து வந்த எஸ்.வி.சகஸ்ரநாமத்தையே படத்துக்கும் ஒப்பந்தம் செய்தார்.

காரைக்குடி அருகிலுள்ள புதுக்கோட்டையில் வெளிப்புறப் படப்பிடிப்புடன் படத்தைத் தொடங்கினார். ஆனால் படப்பிடிப்புக்கு சகஸ்ரநாமம் வந்து சேரவில்லை. காரணம், ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ காரணமாக என்.எஸ்.கே. நாடகக் குழுவின் பொறுப்பு முழுவதும் சகஸ்ரநாமத்தின் தோள்களில் விழுந்துவிட்டது.

இதை அறிந்த மெய்யப்பன் உடனடியாக டி.ஆர்.மகாலிங்கத்தை படப்பிடிப்புக்கு அழைத்து வரும்படி சொன்னார். அப்போது, ‘ஸ்ரீவள்ளி’ படத்தைத் தொடர்ந்து, தனது ‘வேதாள உலகம்’ படத்துக்காக மகாலிங்கத்தையே மீண்டும் ஒப்பந்தம் செய்திருந்தார் மெய்யப்பன். சகஸ்ரநாமம் வரமாட்டார் என்பதை அறிந்ததும் கைகெட்டிய தூரத்தில் இருந்த மகாலிங்கத்தையே ‘நாம் இருவர்’ படத்துக்கும் உரிமையுடன் அமர்த்திக்கொண்டார்.

ஏவி.எம். இயக்கத்தில், சமூகக் கதையில், வழக்குத் தமிழில் பேசி நடித்து தன்னால் மக்களைக் கவரமுடியும் என்று ‘நாம் இருவர்’ படத்தின் மூலம் காட்டினார் மகாலிங்கம். அவர் நாயகனாக நடித்து இரண்டாவதாக வெளியான ‘நாம் இருவ’ரும் வசூல் சாதனை படைத்தது.

டி.ஆர்.மகாலிங்கத்தின் முதலிரண்டு வெற்றிகள் அவரை மூன்றாவது மிகப்பெரிய வெற்றியில் தன்னிச்சையாகப் பொருத்தியது. கேரளத்துப் பட்டதாரியான ஜோசப் தளியத், தமிழில் படம் தயாரிக்க எண்ணி, கலை இயக்குநர் எஃப். நாகூருடன் இணைந்து உருவாக்கிய படம் ‘ஞான சௌந்தரி’. அதில் டி.ஆர்.மகாலிங்கமே கதாநாயகன். கைகள் இரண்டையும் இழந்த நிலையில்.

கதையின் நாயகி ‘ஞானசௌந்தரி’யைக் காட்டிலிருந்து காப்பாற்றி வந்து, குணப்படுத்தி மணந்துகொள்ளும் ராஜகுமாரன் வேடம். படத்தின் அபார வெற்றி, பெண் பார்வையாளர்களிடம் அவருக்கு ஆதரவைக் குவித்தது. ;ஞானசௌந்தரி’யைத் தொடர்ந்து வெளிவந்தது ஏவி.எம்மின் ‘வேதாள உலகம்’. அதில் ‘செந்தமிழ் நாடெனும் போழ்தினிலே’ என பாரதியாரின் கவிதையை முதல் முறையாக திரைக்குப் பாடிய பெருமை பெற்றார்.

‘ஸ்ரீ வள்ளி’
‘ஸ்ரீ வள்ளி’

சரிவைச் சந்தித்த சாகச நாயகன்: டி.ஆர்.மகாலிங்கத்தின் ஏறுமுகத்தைக் கண்ட மாடர்ன் தியேட்டர்ஸ் டி.ஆர்.சுந்தரம், ‘ஆதித்தன் கனவு’ என்கிற சாகசப் படத்தில் நடிக்க அவரை ஒப்பந்தம் செய்தார். படத்துக்கான ஊதியம் 2 லட்ச ரூபாய். ‘ஆதித்தன் கனவு’ வெற்றியால் மீண்டும் மகாலிங்கத்தை நாயகனாக்கி ‘மாயாவதி’யைத் தயாரித்தார் சுந்தரம். அதற்கும் 2 லட்ச ரூபாய் ஊதியம்.

இதன்பின்னர்தான் மகாலிங்கத்தின் வாழ்க்கையில் பெரும் திருப்பம். பட அதிபர்களிடம் கைநீட்டி ஊதியம் பெறுவதைவிட, நாமே பட அதிபர் ஆகிவிட்டால் என்ன எனத் தோன்ற, படத் தயாரிப்பில் இறங்கினார். ஸ்ரீசுகுமார் புரொடக் ஷன்ஸ் என்கிற புதிய நிறுவனத்தைத் தொடங்கி ‘மச்சரேகை’ என்கிற படத்தைத் தயாரித்து, நடித்தார்.

முதல் தயாரிப்பு முதலுக்கு மோசமாக முடியவில்லை என்றாலும் அடுத்து தயாரித்த ‘சின்னதுரை’ அவரை ஏமாற்றியது. விட்ட இடத்தில்தானே தேட முடியும் என்று அடுத்து அவர் தயாரித்த ‘விளையாட்டு பொம்மை’ என்கிற படம் உண்மையாகவே அவரை விதியின் விளையாட்டு பொம்மை ஆக்கியது.

கையிலிருந்த பணமெல்லாம் கரைந்து, தன்னிடமிருந்த பத்துக்கும் அதிகமான வெளிநாட்டு கார்களையும் ஆசையாகக் கட்டிய பங்களா வீட்டையும் விற்றுக் கடனை அடைத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டார். அடுத்து வந்த 4 வருடங்கள் திரையுலகில் கேட்பாரற்று இருந்தார் மகாலிங்கம்.

கைகொடுத்த கண்ணதாசன்: மகாலிங்கத்தின் திறமையைக் காதலித்த பலர் திரையுலகில் இருந்தனர். ஆனால் அவருக்கு யாரும் கைகொடுக்க முன்வராதபோது கவியரசு கண்ணதாசன் முந்திக்கொண்டார். அவர் சொந்தமாகத் தயாரித்த முதல் படம் ‘மாலையிட்ட மங்கை’. அதில் மகாலிங்கத்தை நாயகனாக ஒப்பந்தம் செய்தார்.

மெல்லிசை மன்னர்கள் இசையமைப்பில் கண்ணதாசன் அத்தனை பாடல்களையும் எழுத, அப்படத்தில் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ என்று டி.ஆர்.மகாலிங்கம் மென்குரலில் பாடிய பாடல் இன்றைக்கும் தமிழர்களின் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறது. ‘மாலையிட்ட மங்கை’ மகாலிங்கத்தின் திரை வாழ்வில் மீண்டும் ஒரு வெற்றி மாலையாக விழுந்தது.

அதன்பின்னர் சில ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தாலும் பல வெற்றிப் படங்களில் நடிக்கத் தவறவில்லை. எம்.ஜி.ஆர்.- சிவாஜி ஆகிய இரு பெரும் கதாநாயகர்களின் எழுச்சி, மகாலிங்கம் எனும் மாணிக்கத்தைப் பின்னடைய வைத்தது. 1965இல் ஏ.பி.நாகராஜனின் ‘திருவிளையாடல்’ படத்தில் ‘இசைத்தமிழ் நீ செய்த அருஞ் சாதனை’ எனப் பெருங் குரலெடுத்துப் பாடிய டி.ஆர். மகாலிங்கத்தின் புகழ், இசையுலகிலும் திரையுலகிலும் ஆன்மிக உலகிலும் என்றைக்கும் அழியாச் சாதனையாக நிலைத்திருக்கும்.

- jesudoss.c@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in