சினிமா ரசனை 2.0 | பகுதி 2 - பதின்மத்தின் வர்ணஜாலம்!

தொடரின் நாயகி ஆமிபெத்துடன் இயக்குநர் மொரியா
தொடரின் நாயகி ஆமிபெத்துடன் இயக்குநர் மொரியா
Updated on
3 min read

திரைப்படங்களில் ஒரு முக்கியமான வகை ‘Coming of Age'. பால்ய வயது முடிந்து, ‘டீன் ஏஜ்’ என்று நாம் கூறுகிற பதின்மப் பருவத்துக்குள் நுழைந்து குழந்தைகள் வளரும்போது, அவர்கள் மனங்களில் ஏற்படும் மாறுதல், தன்னைச் சுற்றியுள்ள உலகைப் புரிந்துகொள்ளல், அதன்மூலம் ஒரு தனிப்பட்ட ஆளுமை உணர்வை வளர்த்துக்கொள்ளல் என்று எத்தனையோ மாற்றங்களுக்கு ஆளாகிறார்கள். நாமுமே அப்படி வளர்து வந்தவர்கள்தான். இந்த மாற்றங்களைத் திரைப்படங்களில் பேசினால் அதுதான் ‘Coming of Age' என்கிற வகை. கவிதைத் தமிழில் சொல்வதெனில் பதின்மத்தின் வர்ணஜாலம் எனலாம்.

உதாரணமாக, தமிழில் பாலு மகேந்திரா இயக்கிய ‘அழியாத கோலங்கள்’ படத்தைச் சொல்லமுடியும். ‘சம்மர் ஆஃப் 42’ (Summer of '42) என்கிற படத்திலிருந்து தழுவப்பட்டிருந்தாலும் தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் வாழும் சிறுவர்கள் பற்றிய மறக்கமுடியாத படம். மூன்று சிறுவர்கள் டீன் ஏஜை நோக்கிச் செல்கையில் அவர்களின் மனங்களில் ஏற்படும் மாறுதல்கள் அற்புதமாக இந்தப் படத்தில் சொல்லப்பட்டிருக்கும். (இப்படத்தில் கமல்ஹாசன் இருக்கிறார்! டைட்டிலில் அவர் பெயர் வராது).

ஸ்ரீதரின் ‘ஓ மஞ்சு’ - ‘அழியாத கோலங்கள்’ ஒரு வகை என்றால், ‘அழகி’ படத்தில் வரும் சிறுவர்களின் ஃபிளாஷ்-பேக் இன்னொரு வகை. படம் முழுவதுமே கதாபாத்திரங்கள் சிறுவர்களாகவும் டீன் ஏஜ் பருவத்தினராகவும் வந்திருந்தால் அழகியும் முழுக்க முழுக்க ஒரு ‘Coming of Age’ படம்தான். இந்த வகையான படங்களில் மென்மையான உணர்வுகளையே காட்டவேண்டும் என்பதில்லை. பிரெஞ்சு இயக்குநர் ஃபிரான்ஸ்வா த்ரூஃபோ (Francois Truffaut) தனது முதல் படமாக இயக்கிய ‘தி 400 ப்ளோஸ்’ (The 400 Blows) கொடுக்கும் அனுபவம் ஒன்று என்றால், அதுவே ‘சிட்டி ஆஃப் காட்’ (City of God) படம் கொடுக்கும் உணர்வுகள் முற்றிலும் எதிரானவை.

இப்படி க்ரைம், காதல், மென்சோகம், வறுமை என்று எந்த உணர்வையும் ‘Coming of Age’ படங்களில் காட்டலாம். காட்டப்பட்டிருக்கின்றன. இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால், இந்த உணர்வுகள், படத்தில் வரும் முக்கியமான இளம் கதாபாத்திரங்களை எப்படியெல்லாம் பாதிக்கின்றன என்பதுதான்.

தமிழின் சூப்பர் ஸ்டார் இயக்குநர் ஸ்ரீதர் இப்படிப்பட்டப் படங்களை முயற்சி செய்திருக்கிறார். 1976இல் வெளியான ‘ஓ மஞ்சு’ சந்தேகமில் லாமல் ஒரு ‘coming of Age’ படமே. வீட்டை விட்டு ஓடிவிடும் டீன் ஏஜ் பெண், பையன் ஆகிய இருவரது வாழ்க்கையில் என்னவெல்லாம் நடக்கின்றன என்பதே கதை. ஸ்ரீதர் தொடாத ‘ஜானர்’களே கிடையாது. ஆனால் இந்தப் படம் அந்த நாள்களில் வெற்றிபெறவில்லை.

புதிய வீடு, புதிய மனிதர்கள்: இந்த வகையைச் சேர்ந்த ஓர் அழகிய வெப் சீரீஸ்தான் இந்த வாரம் நாம் பார்க்கப்போகும் ‘ஆன் வித் ஆன் ஈ’ (Anne with an E). நெட்பிளிக்ஸில் கிடைக்கிறது. ‘Anne of Green Gables’ என்கிற (1908) கிளாசிக் நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட தொடர் இது. இந்த வெப் சீரீஸின் கரு மிகவும் எளிமையானது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவு பிறப்பில் இருந்தே கிடைக்காத ஓர் ஆதரவற்ற சிறுமி, திடீரென அவளை இரண்டு பேர் பார்த்துக்கொள்ளப்போகிறார்கள் என்கிற சூழல் வரும்போது, அந்தப் புதிய வாழ்க்கைக்காக எப்படித் துடிப்பாள்? அதற்காக என்னவெல்லாம் செய்வாள்?

அப்படிப்பட்ட வாழ்க்கை கிடைத்ததும் அதில் தன்னை எப்படியெல்லாம் பொருத்திக்கொள்ளப் பார்ப்பாள் என்பதுதான். இதில் சிறப்பம்சம், அந்தச் சிறுமி விடாப்பிடியானவள். அவள் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்கிற குணம் உடையவள், ஆனால் மிக அப்பாவியும்கூட! அதேவேளை, கொஞ்சம் நச்சரிக்கும் இயல்பும் உடையவள். குறிப்பாக படுபயங்கர ரோஷம் உடையவள். நிறையப் புத்தகம் படிக்கும் இயல்பு கொண்டவள்.

இப்படி எல்லாக் குணங்களின் கலவையும் சேர்த்து இருப்பதால் அவளுக்கு சில பிரச்சினைகளும் வருகின்றன. அவற்றையும் தைரியத்துடன் சமாளிக்கிறாள். இப்படி அவளது வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே இத்தொடர்.

சுயத்தை விட்டுக் கொடுக்காமல் ஒரு போராட்டம்! - கதை நடக்கும் காலகட்டம் 1896. கனடா வைப் பின்னணியாக வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட சீரீஸ் இது. சற்றே வயதான ஒரு சகோதரன் - ஒரு சகோதரி. இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அவர்கள் இருவருக்குமே திருமணம் ஆக வில்லை. எனவே ஒருவருக்கொருவர் துணையாகக் காலம் கழிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நிலம் உண்டு.

வயது அதிகமாகிவிட்டதால், அந்த நிலத்தைப் பார்த்துக்கொள்ள ஒரு சிறுவனைத் தத்தெடுத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்கிறார்கள். சிறார் காப்பகம் ஒன்றில் இதற்காகப் பதிவு செய்கிறார்கள். அங்கிருந்து வரும் தகவலின்படி ஒரு சிறுவனைத் தத்தெடுத்துக்கொள்ள அந்த ஊரின் ரயில் நிலையத்துக்குச் சகோதரர் செல்கிறார்.

ஆனால், இவனுக்காக அந்தக் காப்பகத்தின் சார்பில் காத்திருப்பது, பதிமூன்று வயதான சிறுமி ஆன் (Anne). வளவள என்று பேசிக்கொண்டே இருக்கும் சிறுமி ஆன், இவர்கள் கேட்ட சிறுவனுக்கு பதிலாக அந்தக் காப்பகம் தவறாக அனுப்பியுள்ளதை அறிகிறார் வயதான சகோதரர். காப்பகமோ எங்கோ ஒரு இடத்தில் உள்ளது. அதுவோ 1896. கடிதம் தவிர வேறு தகவல் தொடர்பு இல்லாத காலகட்டம். வேறு வழியில்லாமல் ஆனை தனது வண்டியில் அழைத்துக்கொண்டு வீடு திரும்புகிறார்.

அவருக்கு ஆனைப் பிடித்துவிடுகிறது. ஆனால் வீட்டில் இருக்கும் வயது முதிர்ந்த சகோதரிக்கோ அதிர்ச்சி. சிறுவன் இருக்கவேண்டிய இடத்தில் எப்படி ஒரு சிறுமி இருக்கலாம்? இதனால் ஆன் மீது எரிந்துவிழுந்துகொண்டே இருக்கிறாள். அதைப் பார்த்து சகோதரர் பரிதாபப்படுகிறார். ஆனால் ஆனுக்கோ தற்செயலாக வந்த வாய்ப்பு பறிபோய், மீண்டும் காப்பகத்துக்கே போய்விடுவோமோ என்கிற பயம்.

இந்தப் புதிய வாழ்க்கை அவளுக்கு அவசியம் தேவை. பல வீடுகளில் வேலை செய்து, கிட்டத்தட்ட ஒரு அடிமையாக மாறிதான் காப்பகத்துக்கு அவள் சென்றிருந்தாள்.
எனவே அவசர அவசரமாகத் தன்னை நிரூபித்துக்கொள்ள முயற்சி செய்கிறாள். அதில் பல பிரச்சினைகள் அவளுக்கு ஏற்படுகின்றன. இவைதான் ‘ஆன் வித் ஆன் ஈ’ Anne with an E சீரீஸின் தொடக்க நிமிடங்கள், அதன் கதைக் கரு.

ஆனின் வாழ்க்கையை எட்டிப் பார்க்கலாம்: நான் பார்த்த சீரீஸ்களிலேயே அழகான, மென்மையான, துடுக்கான ஒரு சீரீஸ் இது. மொத்தம் மூன்று சீசன்கள். ஓர் அழகான உலகத்துக்குள் நுழைந்து நாம் எட்டிப்பார்ப்பதுபோன்ற உணர்வை அளிக்கக்கூடிய சீரீஸ் இது. கூடவே 1896இல் கனடா எப்படி இருந்தது? கதை நடக்கும் அவோன்லியா என்கிற ஊரில் மக்கள் எப்படி இருந்தார்கள்? அவர்களது சமூகப் புரிதல்கள் எப்படி இருந்தன? பெற்றோர்கள் இல்லாமல் காப்பகத்தில் இருந்து வந்த ஆன் என்கிற சிறுமியை தத்தெடுத்தவர்கள் எப்படிப் பார்த்தார்கள்? தனக்கு நடக்கும் பிரச்சினைகளையெல்லாம் குறும்பாக, அதே ரோஷமும் முன்கோபமும் கொண்டவளாக, ஓயாமல் வளவளவென்று பேசிக்கொண்டு துடிப்பாகவும் வாழ்ந்தே ஆகவேண்டும் என்கிற வைராக்கியத்துடன் ஆன் எப்படியெல்லாம் சமாளிக்கிறாள்? டீன் ஏஜில் பிற பெண்களுக்கு வருவது போன்ற காதல் உணர்வுகளை அவள் எப்படிப் புரிந்துகொள்கிறாள்? இப்படிப்பட்டக் கேள்விகளுக்கெல்லாம் அழகான, இயல்பான பதில்கள் இந்த சீரீஸில் உண்டு. இந்த சீரீஸை நீங்கள் பார்த்தால், உங்கள் மனதில் இருந்து ஆன் அகலமாட்டாள் என்பதே இதன் சிறப்பம்சம். ‘Coming of Age’ என்கிற திரைப்பட வகையில் சிறப்பாக எடுக்கப்பட்டிருக்கும் படைப்புகளில் ‘ஆன் வித் ஆன் ஈ’ முக்கியமான படைப்பு.

- rajesh.scorpi@gmail.co

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in