

நமது சினிமா ரசனை 2.0 தொடரில் நாம் முதலில் பார்க்கப்போவது ஒரு தரமான OTT தொடர். 2017இல் வெளியானது. பெயர் ‘காட்லெஸ்’ (Godless). நீங்கள் ‘வெஸ்டர்ன்’ படங்களின் ரசிகராக இருந்தால், இந்த ‘வெப் சீரீஸ்’ உங்களுக்கு மிகவும் பிடிக்கும். வெஸ்டர்ன் கதைகள் என்றால் அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு முன்னரும் பின்னரும் தொடங்கி, பத்தொன்பது, இருபதாம் நூற்றாண்டின் சில ஆரம்ப வருடங்களில் நடந்த கதைகள்.
அமெரிக்கா உருவாகத் தொடங்கிய காலத்தில் பல புதிய நகரங்கள் முளைத்தன. அவற்றில், சட்டத்தைக் கையிலெடுத்துக்கொண்டு தன்னிச்சையாகச் செயல்படத் தொடங்கிய சமூக விரோதிகள், அவர்களை வேட்டையாடும் நபர்கள், ஊரில் சட்டத்தை நிலைநாட்டும் ஷெரீஃப், அமெரிக்க ராணுவம், பண்ணை முதலாளிகள், ரேஞ்சர்கள், மதுக் கூடங்கள், அவற்றில் நடனமாடும் பெண்கள், சட்ட அதிகாரிகள், செவ்விந்தியர்கள் எனப் பல கதாபாத்திரங்களை வைத்து உருவான மறக்க இயலாத வெஸ்டர்ன் படங்கள் ஏராளம். அதே பின்னணியில் நடக்கும் ஒரு கதையே ‘காட்லெஸ்’.
கிட்டத்தட்ட 140 வருடங்களுக்கு முன்னர், ஃப்ராங்க் க்ரிஃப்ஃபின் (Frank Griffin) என்கிற மிகப்பெரிய சமூகவிரோதியின் கும்பலில் அவனுக்கு மிக நெருக்கமானவனாக இருப்பவன் ராய் கூட் (Roy Goode). ஃப்ராங்க்கின் மகன் போன்றவன். ஒரு கட்டத்தில் ஃப்ராங்க்கை ஏமாற்றிவிட்டு, கொள்ளையடித்த பணத்தைத் தூக்கிக்கொண்டு தப்பித்து ஓடிவிடுகிறான் ராய்.
இந்த துரோகத்தால் பாதிக்கப்படும் ஃப்ராங்க், வெறிகொண்டு ராயைத் தேடத் தொடங்குகிறான். ஃப்ராங்க்கின் கடுஞ்சினத்துக்கு இன்னொரு காரணம், ராய் தப்பிக்கையில் ஃப்ராங்க்கின் கும்பலில் பலரையும் கொன்றுவிட்டு, ஃப்ராங்க்கின் இடது கையைச் சுட்டுச் செயலற்றதாக ஆக்கிவிட்டுத் தப்பித்திருப்பான். இதனால் ராயைக் கொன்றே ஆகவேண்டும் என்று தேடுகிறான் ஃப்ராங்க்.
‘காட்லெஸ்’ தொடரின் கதாபாத்திரங்கள் - இன்னொரு பக்கம், லா பெல் என்கிற ஒரு ஊர். அங்கே வசிக்கும் ஆண்களில் பலரும் ஒரு சுரங்க விபத்தில் இறந்துவிட்டதால் ஊரில் பெண்களே அதிகம். அவர்களே ஆதிக்கம் செலுத்தும் ஊர் அது. அந்த ஊரின் ஷெரீஃப் (சட்ட அதிகாரி) பொறுப்பில் இருக்கும் பில் மெக்ன்யூவுக்குப் பார்வை மங்கிக்கொண்டே வருகிறது. அப்போதுதான் ராயைத் தேடும் ஃப்ராங்க் பற்றிய தகவல், மார்ஷல் ஜான் குக் மூலமாக ஷெரீஃபுக்கு வருகிறது. ஃப்ராங்க்கை எப்படியாவது பிடிக்கவேண்டும் என்று ஷெரீஃபும் மார்ஷலும் சேர்ந்து தேடத் தொடங்குகிறார்கள்.
ராய் எங்கே இருக்கிறான்? சமூக விரோதி ஃபிராங்க், தனக்கு துரோகம் செய்த ராயைப் பிடித்தானா இல்லையா? இதுதான் இந்த சீரீஸின் சுருக்கம். சரி - இந்த சீரீஸில் என்ன சிறப்பு? எதற்காக நம் ‘சினிமா ரசனை 2.0’ தொடரின் முதல் அத்தியாயமாக இது இடம்பெறுகிறது?
காரணம், இதன் கதாபாத்திர வடிவமைப்புகள். மிக இயல்பாக, இயற்கையாக, 140 வருடங்களுக்கு முந்தைய வெஸ்டர்ன் உலகத்தில் வாழும் சில நபர்களை நேருக்கு நேராகப் பார்ப்பது போன்ற இதன் நேர்த்தி. அடுத்ததாக, இதன் கதை. நான் மேலே கொடுத்திருப்பது வெறும் பின்னணிதான். கதையில் ஏராளமான விஷயங்கள் உண்டு. அவையெல்லாம் பார்க்கும்போதுதான் தெரியும். கூடவே, இதன் திரைக்கதை எங்குமே அலுக்காது. சீரீஸ் தொடங்கும் சில நிமிடங்கள் மெதுவாக நகருவது போன்ற ஒரு பிரமையைத் தரும். ஆனால் உடனடியாகப் பற்றிக் கொண்டு விறுவிறுப்பாகச் செல்லும்.
இதன் கதாபாத்திர வடிவமைப்புக்கு ஓர் உதாரணமாக, சமூக விரோதி ஃப்ராங்க் க்ரிஃப்ஃபின் எப்படிக் காட்டப்பட்டிருக்கிறான் என்று பார்ப்போம். இந்தக் கதை நடக்கும் காலகட்டத்தில் இருந்த மிகப்பெரிய, கொடூரமான ஆசாமிகளில் ஒருவன் ஃப்ராங்க். இதைச் சம்பவங்களின் வழியாக அட்டகாசமாகக் காட்டியிருப் பார்கள். தன்னிடம் மாட்டிக்கொள்ளும் நபர்களை ஃப்ராங்க் என்ன செய்வான் என்பதை, ராயைத் தேடிக் கொலைவெறியில் அவன் சுற்றும்போது அவன் கையில் அகப்படும் ஒரு அப்பாவிக் குடும்பத்தை அவன் நடத்தும் விதத்திலேயே தெரிந்துகொள்ளலாம்.
இதைப் போலவே அத்தனை கதாபாத்திரங்களுக்கும் சிறப்பான வடிவமைப்பு இதில் உண்டு. எடுத்துக்காட்டாக, தப்பி ஓடும் ராய்க்கு எழுதப் படிக்கத் தெரியாது. இதனால் தன் அண்ணனிடம் இருந்து வந்திருக்கும் ஒரு முக்கியமான கடிதத்தைப் படிக்கத் தெரியாமல் கையிலேயே வைத்துக்கொண்டு சுற்றுவான். அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது என்பதும் கதைக்கு முக்கியமான சம்பவமாகப் பின்னால் வரும்.
காத்திருக்கத் தேவையில்லை! - ஃப்ராங் க்ரிஃப்ஃபினாக ஜெஃப் டானியல்ஸ் நடித்திருக்கிறார். அற்புத மான நடிப்பு. நாற்பது வருடங்களுக்கும் மேலாக நடித்துக் கொண்டிருக்கும் நடிகர்.
‘காட்லெஸ்’ சீரீஸை உருவாக்கியவர் ஸ்காட் ஃப்ராங்க் (Scott Frank). அமெரிக்காவின் பிரபல திரைக்கதை எழுத்தாளர்களில் ஒருவர். உலகப் புகழ் பெற்ற செஸ் விளையாட்டு சீரீஸான ‘தி குயின்ஸ் கேம்பிட்’ (The Queen's Gambit) இவர் எழுதி, இயக்கியதே. இன்னும், 2017இல் வெளியாகி வசூல் குவித்த ‘லோகன்’ (Logan) என்கிற படத்துக்கான திரைக்கதையையும் இயக்குநர் ஜேம்ஸ் மேங்கோல்டுடன் எழுதி இருக்கிறார். இவற்றைத் தவிர, பல படங்கள்.
ஒரு வழக்கமான வெஸ்டர்ன் படத்திலோ, சீரீஸிலோ டமால்..! டுமீல்..! என்று சுட்டுக்கொண்டு சாகசங்கள் புரிவார்கள். அப்படி இதில் இருக்காது. ஒரு நல்ல கதையுடன் பல கதாபாத்திரங் களை வைத்துக்கொண்டு அழகான, அழுத்தமான திரைக்கதையாக விரியும். ஸ்காட் ஃப்ராங்க், ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று நினைத்து எழுதி, பின்னர் கதையால் கவரப்பட்டு அதை விரிவுபடுத்தி ஒரு சீரீஸாக இறுதியில் உருவானதுதான் ‘காட்லெ’ஸின் சிறப்பம்சம்.
பல சீசன்களில் இழுக்கப்படாத கதை. ஏழே எபிசோட்கள், ஒரே சீசனோடு முடிந்துவிடுகிறது. எனவே ரசிகர்கள் அடுத்த சீசனுக்காகக் காத்திருக்க வேண்டும் என்பதில்லை. அண்மையில் வெளியான வெற்றி மாறனின் ‘விடுதலை’ படத்துக்கும் காட்லெஸ் சீரீஸுக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. இரண்டிலுமே முதலில் வரும் பெரிய ரயில் விபத்துதான் அது.
எம்மி விருதுகளில், 2018ஆம் ஆண்டில் மொத்தம் பன்னிரண்டு எம்மி களுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதில் மூன்று எம்மிகளை வென்றது இந்த சீரீஸ்.
வெஸ்டர்ன் படங்கள் பார்க்க வேண்டும் என்றால், Howard Hawks, John Ford, Sam Peckinpah, Sergio Leone, John Sturges, Sergio Corbucci, Clint Eastwood, Kevin Costner ஆகியோரின் படங்கள், வெப் சீரீஸ்களைத் தேடிப் பார்க்கலாம். இவர்கள் வெஸ்டர்ன் கதைகளில் கில்லாடிகள். இவர்களது படங்களில் அவ்வளவு உணர்வுகளும் இருக்கும். மென்சோகத்தில் தொடங்கி தடாலடி ஆக்ஷன் த்ரில்லர்கள் உட்பட வெஸ்டர்ன் திரை உலகத்தை ஒரு கலக்கு கலக்கிய இயக்குநர்கள் இவர்கள்.
வெஸ்டர்ன் என்பது ஒரு தனி உலகம்.அந்த உலகத்தில் பல்வேறு வருடங் களாகப் பல படங்களின் மூலம்எக்கச்சக்கமான இறவாப் புகழ்பெற்ற கதாபாத்திரங்கள், இயக்குநர்கள்,என்னியோ மாரிகோனி போன்ற இசை யமைப்பாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நடிகர்கள் ஆகியோர் கனவுலகில் உலவிக் கொண்டிருக்கிறார்கள். இந்தப்படைப்புகளில் சமீபகாலங்களில் வந்த சிறந்த படைப்புகளில் ஒன்று ‘Godless’ என்பதில் எனக்குச் சந்தேக மில்லை.
(ரசனை வளரும்)
- rajesh.scorpi@gmail.com