

பாவெல் நவகீதன் இயக்கத்தில் வெளியான ‘வி1 மர்டர் கேஸ்’ படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் தேனி இளைஞரான ராம் அருண் கேஸ்ட்ரோ. அறிமுகப் படத்திலேயே சிறந்த நடிப்புக்காகப் பாராட்டப்பட்டவர். தற்போது அவரே எழுதி, இயக்கி, நாயகனாக நடித்திருக்கும் படம் ‘ஹர்காரா’. இப்படத்தின் கதையைக் கேட்டபின், தமிழ்நாட்டின் தலைமை அஞ்சல் அதிகாரியான திருமதி சாருகேசி படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’கை வெளியிட்டிருக்கிறார். படம் குறித்து இயக்குநருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
நீங்கள் அறிமுகமான ‘வி1’ படத்துக்கு வரவேற்பு எப்படியிருந்தது? - 2019 டிசம்பர் கடைசி வாரத்தில் 80 திரையரங்குகளில் படம் வெளியானது. படத்துக்குக் கிடைத்த விமர்சனங்கள், ரசிகர்களின் வாய்மொழி விளம்பரம் ஆகியவற்றால் இரண்டாவது வாரத்தில் 220 திரையரங்குகளாக உயர்ந்தது. 2020 ஜனவரில் ரஜினி சாரின் ’தர்பார்’ வெளியானதால் நன்றாக ஓடிக்கொண்டிருந்த எங்கள் படத்தைத் தூக்கினார்கள்.
ஆனால் ‘தர்பா’ரையும் தாண்டி 40 திரையரங்குகளில் 33 நாட்கள் ஓடியது. பின்னர் கரோனா முதல் அலை தொடங்கியதால் ஓடிடி பிரபலமாக, அமேசானில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனால், இந்தப் படத்துக்குத் திரையரங்கம், ஓடிடி ஆகிய இரண்டு ‘பிளாட் ஃபார்ம்’களிலும் ‘எப்போது படத்தைக் கொடுப்பீர்கள்’ என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
நீங்கள் நடிக்க வந்தீர்களா, அல்லது இயக்கத்துக்கா? - நியூயார்க் பிலிம் அகாடெமியில் இரண்டு வருடம் திரை நடிப்பைப் படித்துவிட்டுத்தான் கோடம்பாக்கத்துக்கு வந்தேன். நான் ஒரு ‘அவுட் சைடர்’ என்பதால் சின்னச் சின்ன வேடங்களில் தலைகாட்டிய பின் பெரிய கேரக்டர் பெற 10 ஆண்டுகள் ஓடிவிட்டன.
நான் நடிப்புக்காக முயன்றுகொண்டிருந்த காலத்தில் பாவெல் நவகீதன் உட்பட எனக்குக் கற்றுக்கொடுத்த நண்பர்கள் பலரும் உதவி இயக்குநர்கள். அதனால், கதை சொல்வது, கதை கேட்பது, திரைக்கதையை விவாதிப்பது என இயக்கம் சார்ந்து அதிக அனுபவம் பெற்றேன். என்றாலும் நான் முக்கியத்துவம் கொடுக்க நினைப்பது நடிப்புக்குத்தான்.
‘ஹர்காரா’ என்பது என்ன மொழிச் சொல்? - ‘ஹர்காரா’ என்பது வங்க மொழிச் சொல். ’ஹர்காரா’ என்றால் கடிதத்தை சுமந்து செல்லும் மாவீரன் என்று பொருள். மொகலாயர் காலத்தில் அரசப் பரம்பரையினரின் தகவல் பரிமாற்றத்துக்காக அமர்த்தப்பட்டவர்கள். அவர்களைக் கொண்டு, ஆங்கிலேயர் ஆட்சியில் எல்லா மக்களுக்குமான அஞ்சல் துறையாக மாற்றினார்கள்.
இதைப் பின்னணியாக எடுத்துக்கொண்டு, இரண்டு கால கட்டங்களில் நடக்கும் இரண்டு கதாநாயகர்களின் கதைகளை இணைகோடாகச் சொல்லும் திரைக்கதையாக எழுதியிருக்கிறேன். முழுக்க தேனியில் படப்பிடிப்பு நடத்தினோம். 1880இல் தேனி மலை கிராமம் ஒன்றில் ஆங்கிலேயர் ஆட்சியில் பணிபுரியும் போஸ்ட் மேனாக நானும் கொட்டப்பள்ளி என்கிற அதே கிராமத்துக்குத் தற்போது போஸ்ட்மேனாக வருபவராக காளி வெங்கட் அண்ணனும் நடித்திருக்கிறோம்.
உண்மையில் இதில் நான் ஒரு ஹீரோ என்றால் காளி வெங்கட் இன்னொரு ஹீரோ. ஏன் அப்படிச் சொல்கிறேன் என்றால் நான் வரும் பகுதிகள் ஒரு மணி நேரமும் அவர் நடித்துள்ள பகுதிகள் ஒரு மணி நேரமும் படத்தில் வரும். எதிர்மறைக் கதாபாத்திரத்தில் ‘தலைக்கூத்தல்’, ‘லென்ஸ்’ படங்களின் மூலம் புகழ்பெற்றுள்ள அப்படங்களின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் நடித்திருக்கிறார். துணைக் கதாபாத்திரங்களில் ஊர் மக்களையே நடிக்க வைத்திருக்கிறேன்.
என்ன கதை? - இதை முதல் அஞ்சல்காரரின் கதை என்று சொல்லலாம். அடிப்படை வசதிகள் ஏதுமில்லாத ஒரு மலை கிராமத்துக்கு வெறுப்புடன் போஸ்ட்மேனாக வருகிறார் காளி வெங்கட். அங்கு வாழும் மக்கள் சிறு தெய்வமாக வழிபடுவது ஒரு போஸ்ட்மேன் என்று அவருக்குத் தெரியவரும்போது தெய்வமாகிப் போனவரின் கதையைத் தோண்டுகிறார். இருவருடைய கதைகளும் ஒரு புள்ளியில் இணையும்போதும் என்ன ஆச்சர்யம் காத்திருந்தது என்பதுதான் கதை.