அந்த நாள் ஞாபகம்: என் பெயரே ஒரு விசித்திரம்தான்! - ஏ.சி. திருலோகசந்தர் பேட்டி

ஏ.சி. திருலோகசந்தர்
ஏ.சி. திருலோகசந்தர்
Updated on
3 min read

‘வீரத்திருமகன்’ படத்தை முதலில் இயக்கிய திருலோகசந்தர், தொடர்ந்து ‘பாரதவிலாஸ்’, ‘அன்பே வா’, ‘நானும் ஒரு பெண்’, ‘என் தம்பி’, ‘எங்கிருந்தோ வந்தாள்’, ‘அதே கண்கள்’ என்று பல சூப்பர் ஹிட் படங்களைக் கொடுத்தவர். அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து பொக்கிஷமான பல பகுதிகள் இதோ:

பொழுதுபோக்கு ஒன்றை மட்டுமே குறியாகக் கொண்டு தற்போது பல படங்கள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது சரியான போக்கா? - நான் இயக்கிய ‘நானும் ஒரு பெண்’ படத்தில் கறுப்பு நிறமும், ஏழ்மை சூழ்நிலையும் இணைந்த ஒரு பெண்ணின் பிரச்சினைகளை விளக்கியிருந்தேன். அப்போதே வரதட்சிணைக் கொடுமையை அதில் சுட்டிக்காட்டினேன். சமூக நீதியை இன்னும் பளிச்சென்று திரையில் காட்ட வேண்டிய நேரமிது.

காமெடி, காதல், சோகம், சண்டை இப்படி எல்லாவற்றிற்கும் ஒரு படத்தில் இடம் இருக்கும்போது இயக்குநர் ‘என் மனச் சாந்திக்காக இந்தக் காட்சிகள்’ என்று நல்ல கருத்துக்களை சில காட்சிகளில் சொல்லலாமே.. இதனால் மக்கள் ஒரு படத்தை ஒதுக்கி விடுவார்களா என்ன?

எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாகக் கொண்ட ‘அன்பே வா’ படத்தை இயக்கியிருக்கிறீர்கள். அவரை இயக்குவது ஒரு இனிய அனுபவம் என்றாலும் அதில் சில சங்கடங்களும் உண்டு என்று சில இயக்குநர்கள் கூறுவதுண்டு. உங்கள் அனுபவம் எப்படி? - கதையை விவரித்த உடனேயே எம்.ஜி.ஆர். என்னிடம் ‘இதில் நான் செய்ய வேண்டியது எதுவுமில்லை. ஒரு பொம்மையைப் போல் நீங்கள் சொன்னபடி நடிக்கப் போகிறோன்’’ என்றார். படத்தின் வெற்றி விழாவில் இதை அவரே குறிப்பிட்டு “இயக்குநர் என்னை சரியான விதத்தில் ஆட்டிவைத்தார்’’ என்றார் அந்த சகலகலாவல்லவர்.

‘நானும் ஒரு பெண்’
‘நானும் ஒரு பெண்’

சமூகத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கு திரைப்படங்களும் ஒரு காரணமா? - தீவிர வன்முறையாளர்கள் சிலர் இருப்பார்கள். வேறு சிலரோ எப்படியும் குற்றங்களைப் புரியாதவர்கள். இரண்டுக்கும் இடையில் சிலர் உண்டு. அவர்கள் மனதின் அடியில் வன்முறை உணர்வு மறைந்திருக்கும். வன்முறைக் காட்சிகளை விரிவாகக் காட்டும் திரைப்படங்கள் அவர்களை நிச்சயம் குற்றம் புரியத் தூண்டும். எனவே திரைப்படங்கள் சமுதாயப் பொறுப்புணர்வுடன் உருவாக்கப்பட வேண்டும்.

நீங்கள் இயக்கிய காட்சிகளில் உங்களையே அசர வைத்தது எது? - சிவாஜியுடன் 23 படங்கள் சேர்ந்து பணியாற்றியிருக்கிறேன். பலமுறை நான் எதிர்பார்ப்பதைவிட பிரமாதமாக நடிப்பார். ‘தெய்வமகன்’ படத்தில் ஒரு காட்சியில் ‘மூன்று சிவாஜிகளும்’ தோன்றுவார்கள். மிக அற்புதமாக அந்த மூன்று கதாபாத்திரங்களிடையே வேறுபாடு காட்டி நடித்திருந்தார் சிவாஜி கணேசன். ரஷ் போட்டுப் பார்த்தபோது என்னையே மறந்து “மூணு பேரும் ரொம்ப நல்லா ஆக்ட் பண்ணியிருக்காங்க’’ என்று நான் கத்திவிட, என்னைச் சுற்றியிருந்தவர்களுக்கு ஒரே ஆச்சரியம்!

‘அன்பே வா’
‘அன்பே வா’

பல திரைப்படங்களில் அலங்காரப் பதுமையாக வந்து கொண்டிருந்தவர் ஜெயலலிதா. ஆனால் ‘எங்கிருந்தோ வந்தாள்’ படத்தில், ஜெயலலிதா அதன் இந்தி மூலமான கிலோனா படத்தில் மும்தாஜ் நடித்ததைவிட பல மடங்கு சிறப்பாக நடித்திருந்தார் என ரசிகர்கள் புகழ்ந்தனர். அது பற்றிய உங்கள் நினைவலைகள்.. முதலில் ஒரு திருத்தம். ‘கிலோனா’ மூலப்படம் அல்ல. அதுவும் அதன் தமிழ்ப் பதிப்பான ‘எங்கிருந்தோ வந்தாளும்’ ஒரே சமயத்தில் தயாரிக்கப்பட்டன. இந்தி வடிவத்தை எல்.வி. பிரசாத் இயக்கினார். இரண்டு படங்களுக்கும் பிலிம்ஃபேர் பரிசுகள் கிடைத்தன.

தன்னை மறந்துவிட்ட சிவாஜியிடம் பழைய சம்பவங்களை நெஞ்சக் குமுறலுடன் நினைவுபடுத்தும் அந்தக் காட்சிக்கான வசனங்களை ஷூட்டிங் நடந்த அன்றுதான் எழுதினேன். “சிவாஜி சார், நீங்கள் இந்தக் காட்சியில் வெறும் டம்மிதான்’’ என்றேன். கூட நடப்பவர்களின் நடிப்புத் திறமையில் அக்கறை காட்டும் சிவாஜி இதற்கும் பெருந்தன்மையோடு ஒப்புக்கொண்டார். ஜெயலலிதா மீது நான் வைத்த நம்பிக்கை வீண்போகவில்லை. காட்சி மிகச் சிறப்பாக அமைந்தது.

பல வெற்றிப் படங்களை இயக்கியிருக் கிறீர்கள். என்றாலும் தமிழ்த் திரையுலகச் சரித்திரத்தின் முக்கிய இயக்குநர்கள் யாரென்று கேட்டால் உங்கள் பெயர் உடனே நினைவுக்கு வருமா? - (சிரித்தபடி) என் பேரே கொஞ்சம் விசித்திர மானதுங்க. டெலிபோன் டைரக்டரியிலே இந்தப் பேரிலே நான் ஒருத்தன்தான் இருக்கேன். அதனால் நினைவுக்கு வராதோ என்னவோ? (சீரியஸாகி) நான் இயக்கிய ‘அதே கண்கள்’ படம் இன்றும் க்ரைம் த்ரில்லர் படங்களுக்கு ஒரு சிறந்த முன்னோடி என்கிறார்கள்.

‘ராமு’, ‘பாபு’, ‘அன்பே வா’, ‘இரு மலர்கள்’ – இப்படி ஒவ்வொரு திரைப்படமும் ஒவ்வொரு விதத்தில் சிறப்பு பெற்றவை. கிராமத்துக் கதை, காதல் கதை என்றெல்லாம் ஒரே சப்ஜெக்டில் ‘ஸ்பெஷலைஸ்’ செய்யாமல் பல்வேறு கதைக் களன்களில் நான் படங்களை இயக்கியதால்தான் (அவை பாராட்டப்பட்ட வெற்றிப் படங்களாக அமைந்தும்) எனக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையோ என்னவோ!

படங்கள் உதவி: ஞானம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in