இளையராஜா 80 | இசை ரசவாதி

இளையராஜா 80 | இசை ரசவாதி
Updated on
3 min read

லண்டன் ராயல் ஃபில்ஹார்மோனிக் இசைக்குழுவுக்காக சிம்பொனி எழுதிப் பதிவுசெய்துவிட்டு சென்னைக்கு இளையராஜா திரும்பியிருந்த தருணம் அது. அப்போது திரைக் கலைஞர்கள், அண்டை மாநில முதல்வர்களின் வாழ்த்துரைகளுடன் தயாரான சிறப்பு மலரில், ‘இளையராஜா ஒரு அம்பாசிடராக நம் இசையை லண்டனுக்கு எடுத்துச் செல்லவில்லை. மாறாக, அவர்களின் இசையை அவர்கள் மண்ணிலேயே சிறப்பாக நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்’ எனக் குறிப்பிட்டிருந்தார் கவிஞர் வாலி.

இன்று தனது 80ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் இளையராஜா, தலைமுறை இடைவெளி, இசைப் போக்குகள் போன்ற பதங்களைக் கடந்து இன்றைய இளைஞர்களும் ரசிக்கும் வகையிலான இசையைத் தருவதும் இசை ரசிகர்கள் மத்தியில் விவாத மையமாக இருப்பதும் அதேபோன்ற தனிச்சிறப்புதான்.

இளம் இசையமைப்பாளர்களின் பங்களிப்புடன் கவனிக்கத்தக்க படைப்புகளை வழங்கிவரும் கௌதம் வாசுதேவ் மேனன், வெற்றிமாறன், மிஷ்கின், தியாகராஜன் குமாரராஜா போன்ற முன்னணி இயக்குநர்கள் ஓரிரண்டு படங்களிலாவது இளையராஜாவுடன் இணைந்து பணிபுரிகிறார்கள். பலர் அந்தத் தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள். பல மொழித் திரைப்படங்கள், தனி இசைத் தொகுப்புகள் என இந்த வயதிலும் இளையராஜா இயங்கிக்கொண்டே இருக்கிறார்.

மூப்பின் நிழல் தனது கலைவாழ்க்கை மீது விழுந்துவிடாமல் பார்த்துக்கொள்கிறார். தனக்குள் முகிழ்த்த இசைப் பிரவாகத்தை, வெவ்வேறு இசைவடிவங்களைக் கற்றுத் தேர்ந்ததன் மூலம் முறைப்படுத்தி, மேதைமை தரும் துணிச்சலுடன் தேவைக்கு ஏற்ப மீறல்களை நிகழ்த்தி, ஆயிரக்கணக்கான பாடல்களைத் தந்து இளையராஜா அடைந்திருக்கும் இடம் நிகரில்லாதது!

தீராக் கருப்பொருள்: இன்றைக்கு இந்தியா முழுவதும் அறியப்படும் திரைக்கலைஞர்களில் பலர் தமது இளமைப் பருவத்தில் இளையராஜாவின் இசையால் வசீகரிக்கப்பட்டவர்கள். ஒருமுறை சென்னைக்கு ரயிலில் வந்தபோது, ‘இது இளையராஜா வாழும் நிலம்’ எனும் உணர்வெழுச்சி தனக்கு ஏற்பட்டதாக இயக்குநர் ராம்கோபால் வர்மா ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்திருக்கிறார். அந்த அளவுக்குத் தனது கல்லூரிக் காலத்தில் இளையராஜாவின் இசையில் அவர் சுகித்து இருந்திருக்கிறார்; கடவுளைத் தேடும் பக்தனாக, அவரது இசையின் மீது காதல் கொண்டு அலைந்திருக்கிறார். இதோ, “நான் சினிமாவுக்கு வந்ததற்கு ஒரே காரணம் இளையராஜாதான்” என்கிறார் மிஷ்கின்.

இளையராஜாவின் பாடல்களில் பயன்படுத்தப்பட்ட இசை நுணுக்கங்களைக் கருவியாகக் கொண்டு கர்னாடக இசை, மேற்கத்திய செவ்வியல் இசையின் கூறுகளை அலசித் தங்கள் இசையறிவை வளர்த்துக்கொண்டவர்கள் அநேகம். மழைக் காலக்கவிஞர்களின் தீராக் கருப்பொருளாக இளையராஜாவின் இசை இன்னும் இருக்கிறது. இரவு முழுவதும் அவரது இசையைப் பேசித் தீர்க்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். பட்டியல் இன்னும் நீளும்.

அனிச்சையான மேதைமை: சினிமாவுக்கான பாடல்கள் என்பதைத் தாண்டி, தனித்த முத்திரைகள், பரீட்சார்த்தங்களுடன் கூடிய செழுமையான படைப்புகளாக அவற்றை உருவாக்கியதுதான் இளையராஜாஅடைந்திருக்கும் புகழுக்கு முக்கியக் காரணம். பாடல்கள் - படங்களின் எண்ணிக்கை, படைப்புகளின் வெற்றி சதவீதம் என எந்த வகையில் பார்த்தாலும் இன்னொரு இசையமைப்பாளரை இளையராஜாவுக்கு நிகராக நிறுத்துவது கடினம். பாடலுக்கான சூழலை இயக்குநர் சொல்லும்போதே இசை, காட்சி வடிவமாக அவர் மனதிற்குள் பெருக்கெடுக்கத் தொடங்கிவிடும். ‘அன்னக்கிளி’ முதல் ‘மாடர்ன் லவ் சென்னை’ வரை அது தொடர்கிறது.

சூழலுக்கு ஏற்ற இசையின் நிறங்களை மனதுக்குள் உருவகித்து இசைக்கோவைகளை இசைக்குறிப்புகளில் வடித்து, அவற்றை ஒலிவடிவமாக அவர் கேட்கவைப்பதை, ஒரு ரசவாதியின் ஜாலமாக நேரில் பார்த்துச் சிலிர்த்த திரைக் கலைஞர்கள் ஏராளம்.

தென்னிந்திய மொழிகளில் மட்டுமல்ல, இந்தியிலும் இப்படியான அதிசயங்களை - இசைப்பணியினூடே ஓர் அனிச்சைச் செயலாக – நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இளையராஜா. ‘மூன்றாம் பிறை’யின் இந்திப் பதிப்பான ‘சத்மா’வில் இடம்பெற்ற ‘யே ஜிந்தகி கலே லகா லே’ பாடலின் பல அடுக்குகளைக் கொண்ட இசையமைப்பில், பாடல் வரிகளுக்கு ஏற்ப தேவைப்பட்டஒரு மாற்றத்தை இரண்டே நிமிடங்களில் இளையராஜா செய்ததாக ஆச்சரியத்துடன் பதிவுசெய்திருக்கிறார் கவிஞரும் இயக்குநருமான குல்ஸார்.

பிறரைப் பொறுத்தவரை நீண்ட அவகாசத்தைக் கோரும்இசைப் பணிகள், இளையராஜாவிடம் சில நிமிடங்களில் நிறைவேறிவிடும். இசையை ஒரு பயிற்சியாக அணுகுவதைத் தாண்டி சுவாசமாகவே தன்னுள் அவர் இருத்திக்கொண்டிருப்பதன் சாட்சியங்கள் இவை!

எல்லை கடந்த இசை: இளையராஜாவின் பார்வை பட்டு, எத்தனையோ தயாரிப்பாளர்கள் வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார்கள் அல்லது குறைந்தபட்சம் வெற்றிகரமாகப் படத்தை முடித்து வெளியிட்டிருக்கிறார்கள். ஏராளமான புதியவர்களுக்கு வாழ்வளித்திருக்கிறார். தன் மனதைக் கவராத கதை என்றாலும் படத்தின் வெற்றியை உத்தரவாதப்படுத்த அவர் பெரும் முயற்சி எடுத்ததை அவருடன் பணிபுரிந்த பலர் பதிவுசெய்திருக்கிறார்கள். அவர் அளவுக்குச் சந்தை மதிப்பைக் கொண்டிருந்த – அதேவேளை அதிகமான உற்பத்தித் திறனுடன் - உயர் தரத்துடன் - நீண்டகாலம் இயங்கிய ஓர் இசையமைப்பாளரை கண்டறிவது கடினம்.

பிற மொழிகளில் பிரபலமாக இருக்கும் இசையமைப்பாளர்கள் தமிழில் அற்புதமான பாடல்களைத் தந்தது உண்டு. எனினும், தென்னிந்திய மொழிகளில் 80களிலும் 90களின் தொடக்கத்திலும் இளையராஜா செலுத்திய ஆளுமை முன்னுதாரணமற்றது. அந்தந்த மாநிலக் கலாச்சாரக் கூறுகளை உள்வாங்கி அவர் உருவாக்கிய பாடல்கள், தலைமுறைகளைத் தாண்டி இன்றும் ரசிக்கப்படுகின்றன.

தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் அவர் தனியாகவே மேடை இசைக் கச்சேரிகளை நடத்த முடியும். சமீபத்தில், அவரது தெலுங்குப் பாடல்களுடன் ஹைதராபாதில் நடந்த இசை நிகழ்ச்சி ஓர் உதாரணம். தெலுங்கின் முன்னணி நடிகர்கள், இயக்குநர்களின் வெற்றிகரமான படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அவை!

இன்னும் சில எதிர்பார்ப்புகள்: எந்தத் தருணத்திலும் இசை சூழ்ந்திருக்கும் வகையில் தன் வாழ்க்கையை இளையராஜா அமைத்துக்கொண்டிருக்கிறார். வாழ்த்தைப் போல வசையையும் அவர் தன் சிந்தையில் ஏற்றிக்கொள்வதில்லை. அவரது சறுக்கல்கள் சர்ச்சைக்குள்ளாகி அவர் மீது விமர்சன மழை விழுந்துகொண்டிருக்கும் தருணத்தில், அவர் இசையுள் மூழ்கிப் புதிதாக ஒரு பாடலைப் படைத்துக்கொண்டிருப்பார். பிரசாத் ஸ்டுடியோ விவகாரம் தந்த கசப்புகளையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, தன் பெயரிலேயே புதிய இசைக்கூடத்தைத் தொடங்கி தனது இசைப் பணியைத் தொடர்வதே அவரது இடையறாத இந்தப் பயணத்துக்குச் சான்று.

அவர் அடைந்த உயரத்தைச் சமன் செய்யும் வகையிலான படங்கள் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன. அவற்றைச் சிறப்பாக அவர் பயன்படுத்திக்கொள்கிறார். அவரிடம் இன்னமும் ரசிகர்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். அரைநூற்றாண்டைத் தொடவிருக்கும் இளையராஜாவின் இசையை ஒரு இயக்கம் எனலாம். அந்த இயக்கம் இனிதாகத் தொடரட்டும்!

படங்கள் உதவி: ஞானம்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in