சரித்திர இசைப் பயணம்

சரித்திர இசைப் பயணம்
Updated on
2 min read

இளையராஜா என்கிற இசையமைப்பாளர் தமிழ்த் திரையுலகில் காலடியெடுத்து வைத்தபோது, தனது தனி அடையாளமாக, அதுவரை கற்பனை செய்யப்படாத புதிய ஒருங்கிணைந்த உலக இசை வடிவை உருவாக்கப்போகிறார் என யாருமே எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை! அவரது பேராளுமை மிக்க 45 ஆண்டுகால இசைப் படைப்புகள் கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுதும் மிகுந்த ஆச்சர்யத்துடன் ஆராய்ச்சிகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

‘அன்னக்கிளி’ மூலம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் ‘மச்சானை பாத்தீங்களா..’ எனப் பரபரப்பாக அறிமுகமான இவரை, கவியரசு கண்ணதாசன் ‘கண்ணா ஓடோடி வா.. ராஜா வா..’ என்று வரவேற்க, அடுத்தடுத்த படங்களில் பல்வேறு உலக இசை வடிவங்களை மிகச் சரியான விகிதத்தில் ஒன்றிணைத்து தன்னுடைய கட்டற்ற இசைஞானத்தை வெளிப்படுத்தத் தொடங்கினார்.

அனைத்து இசை வடிவங்களின் அடிப்படை ஒற்றுமைகளின் மீது அவருக்கு இருந்த அதி நுணுக்கமான புரிதல், கர்னாடக இசையின் மேளகர்த்தா ராக வழிமுறை வழங்கியுள்ள எல்லையில்லாத படைப்பாதாரத்தை தனது அஸ்திவார பலமாக்கிக் கொண்ட அர்ப்பணிப்பு, குழந்தைப் பருவத்திலிருந்தே ரத்தத்தில் கலந்திருந்த நாட்டுப்புற இசை, கற்பனையில் தோன்றும் இசைக்கோவைகள் அனைத்தையும் உடனடியாக மேற்கத்திய இசைக் குறிப்புகளாக எழுதக்கூடிய உயர்திறன் ஆகிய அவரது படைப்பாளுமை, தமிழ்த் திரையுலகத்தின் படைப்பு வேகத்தையே முற்றிலும் மாற்றியமைத்தது. கோலிவுட்டுக்கு அவரே அமைத்துக்கொடுத்த அந்த அதிவிரைவுச் சாலையில் அவரது தடையற்ற சரித்திரப் பயணம் இன்றும் கம்பீரமாகத் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

அறிமுகமான அடுத்த ஆண்டிலேயே பாடகி எஸ்.ஜானகிக்கு ‘செந்தூரப்பூவே..’ பாடல் வழி தேசிய விருதைப் பெற்றுக் கொடுத்து, ரீதி கௌளை ராகத்தில் ‘சின்ன கண்ண’னை அழைத்து, கர்னாடக இசை ஜாம்பவான்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். தொடர்ந்த வருடத்தில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தாகத் தமிழ்த் திரையில் முதன்முறையாக ஸ்டீரியோபோனிக் தொழில்நுட்பத்தில் ‘ப்ரியா’ படத்தின் பாடல்களைக் கொடுத்தார்.

முதல் நான்கு ஆண்டுகளிலேயே நூறு படங்களுக்கு இசையமைத்து, அவற்றில் ‘சிட்டுக்குருவி’, ‘இளமை ஊஞ்சலாடுகிறது’, ‘காற்றினிலே வரும் கீதம்’, ‘கிழக்கே போகும் ரயில்’, ‘முள்ளும் மலரும்’, ‘சிகப்பு ரோஜாக்கள்’, ‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘அழகே உன்னை ஆராதிக்கிறேன்’, ‘தர்மயுத்தம்’, ‘நிறம் மாறாத பூக்கள்’, ’புதிய வார்ப்புகள்’, ‘மூடுபனி’, ‘ஜானி’, ‘முரட்டுக்காளை’, ‘நெஞ்சத்தை கிள்ளாதே’, ‘நிழல்கள்’, ‘உல்லாச பறவைகள்’, ‘அலைகள் ஓய்வதில்லை’ என பல வெற்றிப் படங்களின் சூப்பர் ஹிட் பாடல்கள், இந்த 2023 ஆம் ஆண்டில்கூட தொலைக்காட்சி, பண்பலை, சமூக ஊடகங்களை இன்னமும் 1980ஆம் ஆண்டிலேயே வைத்திருக்கின்றன.

1980 தொடங்கி 85க்குள் ஐந்தே ஆண்டுகளில் இளையராஜா இசையமைத்த படங்களின் பட்டியல் 300ஐ தொட்டது. அதில் ‘பால நாகம்மா’, ’கோவில் புறா’ போன்ற படங்களில் தனது ஆழ்ந்த கர்னாடக இசையறிவை வெளிப்படுத்தினார். ‘கரையெல்லாம் செண்பகப்பூ’, ‘கழுகு’, ‘பன்னீர் புஷ்பங்கள்’, ‘ராஜ பார்வை’, ‘டிக் டிக் டிக்’, ‘நினைவெல்லாம் நித்யா’, ‘பயணங்கள் முடிவதில்லை’, ‘சகலகலா வல்லவன்’, ‘இளமை காலங்கள்’ என நூற்றுக்கணக்கான வெள்ளிவிழா படங்களில் கணக்கிட முடியாத எண்ணிக்கையில் அற்புதமான பாடல்களை கொடுத்தார்.

அவற்றில் மேற்கத்திய சாஸ்திரிய, நவீன இசையின் பல்வேறு வடிவங்களை மிக நுணுக்கமாக வெளிப்படுத்தினார். தனது மந்திரஜாலம் பொருந்திய ‘பாடல் இடையிசைக் கோவைகள், பின்னணி இசை’ மூலம், பாஹ், மொஸார்ட், பீத்தோவன் போன்ற பல மேற்கத்திய சாஸ்திரிய இசை அறிஞர்கள் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கினார். ‘தாய் மூகாம்பிகை’ படத்தில் இவர் பாடியிருந்த ‘ஜனனி ஜனனி’ பாடல் ஒலிக்காத கோயில் விழாக்களே இல்லை! தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்தியத் திரையுலகம் முழுவதும் தனது இசை மேலாதிக்கத்தைச் செலுத்தத் தொடங்கினார்.

‘மண்வாசனை’, ‘முதல் மரியாதை’ எனக் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் நாட்டுப்புற இசையை ஆவணப்படுத்தினார். ‘சிந்து பைரவி’ படத்தில் தியாகராஜ கீர்த்தனை ராகத்தை மாற்றியமைத்து அதே ராகத்தில் நாட்டுப்புறப் பாடலையும் ஒன்றிணைத்து, ‘இசை என்பது எல்லாருக்கும் பொதுவான ஒரே வடிவம்தான்’ என்று நிறுவினார்.

இந்தக் காலகட்டத்தில் டேப் ரெக்கார்டர் எனும் ஒலிக்கருவி தமிழகத்தின் ஒவ்வொரு வீட்டிலும் ஓர் அங்கம் ஆனது. இளையராஜாவால் தமிழகத்தில் கேசட் விற்பனை, பாடல் பதிவு செய்யும் தொழில் எப்படிப் பலருக்கு வாழ்வாதாரமாகவும் பல கோடிகள் புரளும் தொழிலாகவும் இயங்கியது என்பதை, இன்றைக்கும் சென்னையின் ‘ரிச்சி தெரு’வின் அனுபவம் வாய்ந்த வணிகர்கள் நினைவு கூர்கிறார்கள்.

தமிழ்த் திரையுலகில் விதையாய் அறிமுகமான பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள், இசைக் கலைஞர்கள் இவரது திரையிசை மழையின் உதவியோடு விருட்சமாக ஓங்கி வளர்ந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

1985க்கு பிறகு ‘ஹவ் டு நேம் இட்’, ‘நத்திங் பட் விண்ட்’ போன்ற உலக இசை ஆவணங்களைப் படைத்ததோடு, தென்னிந்தியா முழுவதும் சிம்பொனி இசை பற்றிய சிந்தனையை தூண்டினார். இசை உருவாக்கத்தில் கணினியின் பங்கு எவ்வளவு இருக்க வேண்டும் என்கிற அளவை நிர்ணயித்து அறிமுகப்படுத்தினார். 1995க்குள் 850 திரைப்படங்களுக்கு இசையமைத்து முடித்தார்.

இவற்றில் ஆயிரக்கணக்கான பாடல்கள் பெரும் வெற்றி அடைந்ததோடு, நூற்றுக்கணக்கான படங்களின் பின்னணி இசை இன்றும் பேசப்பட்டு வருகிறது. அதனால் ‘இந்தியத் திரைப்படப் பின்னணி இசை மேதை’ என்று கொண்டாடப்படுகிறார். பாடலாசிரியராகவும் பாடகராகவும் தனி முத்திரைபதித்த இசைஞானியின் இடைவிடாத இசைப் பணி உலகத் திரையிசை வரலாற்றில் ஒரு அரிதான நிகழ்வே.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in