

சட்டம் என்பது வெறும் புத்தகம் அல்ல, அது ஓர் உயிர்; அதிகாரம் என்பது உரிமை அல்ல, அது ஒரு பொறுப்பு.
இருண்ட தினங்களின் சாட்சியம்
அது ஒரு கொரோனா காலம். 2020 ஜூன் 19 அன்று இரவு 7.45 மணி முதல் ஜூன் 20 அதிகாலை 3 மணி வரை, சாத்தான்குளம் காவல் நிலையத்தின் லாக்கப் அறையில் நிலவிய நிசப்தத்தைத் தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகியோரின் மரண ஓலம் கிழித்துக் கொண்டே இருந்தது.
பின்னர் சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையின்படி, காவல் நிலையச் சுவர்களிலும், அவர்களின் உடைகளிலும், காவலர்களின் லத்திகளிலும் படிந்திருந்த ரத்தக்கறைகள் அவர்கள் அனுபவித்த வேதனையை மௌன சாட்சியாய் உலகிற்குச் சொல்லின.
ஒவ்வொருவர் உடலிலும் தலா 18 காயங்கள் இருந்தன. சாதாரண ஓர் ஊரடங்கு விதிமீறலுக்காகத் தொடங்கிய விசாரணை, கொடூரமான தாக்குதல்களாக மாறி அடுத்த ஓரிரு நாட்களில் அந்த இருவரின் உயிரையும் பறித்துவிட்டது. அறக்கடமையும் மீறப்பட்ட உண்மைகளும் ஜனநாயகத்தில் காவல்துறையின் அறக்கடமை என்பது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவது மட்டுமே.
குற்றங்களை முறையாகப் பதிவு செய்து, நேர்மையாக விசாரித்து, அறிவியல் ஆதாரங்களுடன் நீதிமன்றத்திற்கு உண்மையை வெளிக்கொணர உதவுவதே ஒரு சிறந்த காவல் துறைக்கு அழகு.
ஆனால், சாத்தான்குளம் வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் மீது காவலர்களைத் தடுத்ததாகப் பொய் வழக்குகளைப் பதிவு செய்தது, சித்திரவதையின் சான்றுகளை மறைக்க முயன்றது மற்றும் சிசிடிவி ஆதாரங்களைச் சிதைக்கக் காரணங்கள் கூறியது ஆகியவை காவல்துறையின் உண்மையான கடமை மாறிவிட்டதோ என்ற ஆழ்ந்த சந்தேகத்தை எழுப்புகின்றன.