

தமிழ்நாட்டில் உயர் கல்வி கற்பவர்களில் 72 சதவீதம் பேர் STEM எனப்படும் அறிவியல் சார்ந்த ஏதோ ஒரு துறை சார்ந்தே படிக்கிறார்கள். ஆண்டுதோறும் இந்தியாவில் 25 லட்சம் பேர் இதே ஸ்டெம் துறைகளில் தங்கள் உயர் கல்விப் படிப்பை நிறைவு செய்கிறார்கள்.
அறிவியல் உயர் கல்வி முடித்தவர்கள் நம் மாநிலத்திலும் நாட்டிலும் இவ்வளவு அதிகமாக வெளிவந்தாலும் அறிவியல் கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் மட்டுமல்ல, அறிவியல் சிந்தனை, அறிவியல் மனப்பான்மையிலும் நாம் மோசமாகப் பின்தங்கியே இருக்கிறோம்.
பாடமாக மட்டுமே அறிவியலைப் படிக்கிறோமே அன்றி, அதை வாழ்க்கையில், சமூகத்தில் கடைப்பிடிக்கிறவர்களாக நாம் இல்லை. அறிவியல் மனப்பான்மையுடன் இருப்பது, அதை வளர்த்தெடுப்பது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 51A(h)இன்படி நம் ஒவ்வொரு வருடைய அடிப்படைக் கடமை.