

மலாக்கா நீரிணைப் பகுதியில் நவம்பர் மாதம் உருவான ‘சென்யார்’ புயலால் இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.
குறிப்பாக, இப்புயலால் ஏற்பட்ட மழை வெள்ளம், நிலச்சரிவில் சுமார் 440 பேர் உயிரிழந்ததாக இந்தோனேசிய அரசு கூறியது. இதற்கு முன்னர் 1886இல் இப்பகுதியில் புயல் உருவாகியிருந்த நிலையில், 135 ஆண்டுகளுக்குப் பிறகு இது நிகழ்ந்துள்ளது.
நிலநடுக்கோடு அருகேயுள்ள மலாக்கா நீரிணையில் புயல்களைச் சுழலவைக்கிற அளவுக்குப் பூமியின் சுழற்சியால் ஏற்படும் கோரியோலிஸ் (coriolis) விசை வலுவாக இருக்காது என்பதால் இங்குப் பெரிதாகப் புயல் பாதிப்பு நேராது என்பதே வானிலையாளர்களின் கணிப்பாக இருந்தது. அதனை மீறி அரிதாக உருவாகி அதிர்ச்சியளித்திருக்கிறது ‘சென்யார்’.