

விண்வெளியில் ஆயுதக்குவிப்பு
புவியின் சுற்றுப்பாதையில் ஆயுதங்களை நிலைநிறுத்தி யிருப்பதாக அமெரிக்கா அண்மையில் அறிவித்திருப்பது, 1967இல் 100க்கும் மேற்பட்ட நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை’க் கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது.
நிலவு, விண்வெளியில் உள்ள பிற கோள், துணைக்கோள்கள் போன்றவற்றில் ராணுவத்தளம் அமைத்தல், ஆயுதச் சோதனை நடத்துதல், ராணுவச் சோதனை மேற்கொள்வது போன்றவற்றுக்கு இந்த ஒப்பந்தம் தடைவிதித்தாலும், புவி சுற்றுப்பாதையில் ஆயுதங்களை வைத்திருப்பது குறித்த வரையறை ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை என்கிறது. அதை அமெரிக்கா சாதகமாகப் பயன்படுத்திக்கொள்வது செயற்கைக்கோள்கள், நவீனத் தாக்குதல் சாதனங்கள், உத்திகள் பெருகியுள்ள தற்போதைய சூழலுக்கு உகந்ததாக இருக்காது என சீனா, ரஷ்யா ஆகியவை எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
எதிரி நாடுகளின் செயற்கைக்கோள்கள் உள்ளிட்டவற்றை நேரடியாகத் தாக்காமல், ‘ஜாமிங்’ போன்றவற்றால் விண்வெளியில் அவற்றின் செயல்திறனை முடக்கிவிட முடியும் என்பதால், அமெரிக்காவின் விண்வெளி ஆயுதக்குவிப்பு பேசுபொருள் ஆகியிருக்கிறது.
செயற்கைச் சூரியன்
குஜராத்தின் காந்தி நகரிலுள்ள பிளாஸ்மா ஆராய்ச்சி நிறுவனத்தில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட அணுக்கரு இணைவு சோதனையின்போது பிளாஸ்மா வெப்பநிலை 20 கோடி டிகிரி செல்சியஸை எட்டியது; சூரியனின் மையப்பகுதியைவிட, இது ஏறக்குறைய 20 மடங்கு அதிக வெப்பமாகும்.
எஸ்எஸ்டி-1 டோகாமாக்கின் (SST-1 tokamak) 82.6 ஜிகாஹெர்ட்ஸ், 400 கிலோவாட் திறன் கொண்ட கைரோட்ரானில் (gyrotron) மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின்போது, அதிஉயர் வெப்பநிலையில் நீண்ட நேரத்துக்கு பிளாஸ்மா நிலையானதாகவும் கட்டுப்படுத்தப்படும் வகையிலும் கையாளப்பட்டது மிக முக்கியமானது. அணுக்கரு இணைவினால் மின்சாரம் தயாரிப்பது என்பது நடைமுறையில் சாத்தியமற்றதாக இருந்தாலும், எதிர்காலத்தில் பல்வேறு கண்டுபிடிப்புகளுக்கு வித்திடுகிற வகையில் இது அமைந்துள்ளது.