

ஒரு குழந்தை முதன்முதலாக நடக்கத் தொடங்கும் காட்சியை யாரும் மறக்க முடியாது. முதலில் தடுமாறி இரண்டு அடிகள் எடுத்துவைக்கும்; பின்னர் படிப்படியாக மெதுவாக நிமிர்ந்து நின்று சீராக நடக்கத் தொடங்கும்.
அந்தச் சிறிய நிகழ்வு மனிதப் பரிணாம வரலாற்றின் மிகப்பெரிய சாதனையை நினைவூட்டுகிறது. இன்று நாம் இயல்பாகச் செய்கிற 'நேராக நின்று இரண்டு கால்களில் நடப்பது' என்கிற திறன், கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்ற பரிணாமப் பயணத்தின் பலன்.
அண்மையில் வெளிவந்த ஒரு பன்னாட்டு ஆய்வு, இந்தத் திறனின் பின்னால் இருக்கும் ரகசியத்தை வெளிச்சமிட்டுள்ளது. இந்த ஆய்வு மனிதனின் இடுப்பெலும்பு உருவாகும் விதத்தில் நடைபெற்ற இரண்டு சிறிய மாற்றங்களே, இந்தப் பெரும் புரட்சிக்குக் காரணம் என்பதைக் கண்டறிந்துள்ளது.
என்ன வித்தியாசம்? - முதுகெலும்பு உள்ள எல்லா உயிரினங் களுக்கும் இடுப்பெலும்பு இருக்கிறது. ஆனால் மனிதனுடைய இடுப்பு மற்ற விலங்குகளிடமிருந்து முற்றிலும் வேறுபட்டது. அகலமாகவும் பாத்திரம் போலவும் இருக்கும் இந்த வடிவம் உடலை நேராக நிலைநிறுத்தி, சமநிலையுடன் நடக்க உதவுகிறது. இதே வடிவம் பெரிய மூளை கொண்ட குழந்தைகளைப் பெற்றெடுக்கும் வசதியையும் உருவாக்கியது.
இதன் மூலம் மனித இனத்தின் முன்னேற்றம் இரண்டு நிலைகளிலும் நடைபெற்றது. இதனால் உடல் இயந்திர அமைப்பு சீரானதுடன் அறிவாற்றல் வளர்ச்சிக்கும் தளம் அமைந்தது. இந்த வேறுபாடு குரங்குகளுடன் ஒப்பிடும்போது தெளிவாகத் தெரிகிறது. குரங்குகளின் இடுப்பு நீளமாகவும் குறுகலாகவும் இருக்கும். அவை பெரும்பாலும் நான்கு கால்களிலேயே நகரும்; சில வேளைகளில் மட்டுமே நேராக நிற்கும்.