

மனிதனாக பிறந்த அனைவருக்கும் தங்கள் வாழ்க்கையை கண்ணியமாக அமைத்துக் கொள்ளும் உரிமை உள்ளது. அந்தக் கண்ணியத்துக்கு கேடு விளைவிக்கும் எத்தகைய செயலும் மனித உரிமை மீறலாகக் கருதப்படுகிறது. தங்கள் மீது நடத்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் பற்றி உரிய மன்றங்களின் கவனத்துக்கு கொண்டு சென்று நிவாரணம் பெறும் உரிமை குடிமக்கள் அனைவருக்கும் உள்ளது.
இந்தியாவைப் பொறுத்தமட்டில், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 பிரிவு 2(d) ஆனது ‘மனித உரிமைகள்' என்பதற்கான வரைவிலக்கணத்தைத் தருகிறது. வாழ்க்கை உரிமை, சுதந்திர உரிமை, சமத்துவ உரிமை, கண்ணியமான வழிகளில் வாழ்வதற்கான உரிமை போன்றவை இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் பன்னாட்டு உடன்படிக்கைகள் அடிப்படையில் தனி நபர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட உரிமைகள் ஆகும். இவையே, மனித உரிமைகள் என வரையறுக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக, ஒருவர் உயிருடன் இருக்கும்போது மட்டுமல்லாமல், அவர் இறந்து போன பிறகும் கூட கண்ணியமாக நடத்தப்பட வேண்டும் என்பதை அடிப்படை உரிமையாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அறுதியிட்டுக் கூறுகிறது. உயிருடன் இருக்கும் நபர், தனது நம்பிக்கை, மத வழிபாடு ஆகியவற்றை பின்பற்றுவதில் அவருக்கு இருக்கும் உரிமை, அவர் இறந்த பிறகும் அவருடைய நம்பிக்கை, வழிபாட்டு முறைகள் அடிப்படையிலேயே அவரது உடல் கண்ணியமான முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும், இதுவும் அவருக்கான அடிப்படை உரிமை என்றும் உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.