

நிலவின் தென்துருவத்திலுள்ள இருள் நிறைந்த பள்ளங்களில் பனிப்படலம் இருப்பதற்கான வாய்ப்புகளை மெய்ப்பித்திருக்கின்றன சந்திரயான் -2 சுற்றுப்பாதைக் கலத்தில் இருந்து கிடைத்திருக்கும் சமீபத்திய தரவுகள்.
சூரியஒளி படாமல் மைனஸ் 248 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை கொண்டவை இந்தப் பள்ளங்கள்; இவற்றில் கோடிக்கணக்கான ஆண்டுகளாக நீர் - பனிக்கட்டி இருப்பது தற்போது கண்டறியப்பட்டிருப்பது, விண்வெளி ஆய்வில் மனித குலத்தை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திச் செல்ல உதவலாம்.
அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் நிலவின் தென் துருவத்தில் கால் பதிப்பதற்குப் பெருமுயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில், 2040இல் மனிதரை நிலவில் தரையிறக்கத் திட்டமிட்டிருக்கும் இந்தியாவின் கனவுக்கு இக்கண்டறிதல் பெரும் ஊக்கத்தைத் தரும்.
மறைந்துவரும் மீன் வகைகள்
இந்தியர்கள் உணவில் பயன்படுத்திவரும் இரண்டு மீன் வகைகள் வேகமாக அழிந்து வருகின்றன. மகாராஷ்டிரத்தின் மாநில மீனாக அறியப்படுகிற வாவல் மீன் (pomfret), 1970களில் ஏறக்குறைய 1,200 டன் என்கிற அளவில் கிடைத்தது; அவற்றின் சராசரி எடை 300 -500 கிராம் என்றிருந்தது.