

நன்கு படித்து, பெருநிறுவனங்களில் உயர் பதவிகளில் இருக்கும் பெண்களிடம் கூட, ‘பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் (தடுத்தல், தடைசெய்தல் மற்றும் குறைதீர்த்தல்) சட்டம் 2013’ குறித்த போதிய விழிப்புணர்வு இல்லை. ஆகவே, பொதுமக்கள் மத்தியில் இச்சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்.
ஒரு பெருநிறுவனத்தின் இருநாள் பயிற்சி முகாம், சென்னைக்கு வெளியே உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வுகள் முடிந்து நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்த வேளையில், நிலாவின் அலைபேசி ஒலித்தது. அவளைத் தனது அறைக்கு வருமாறு அழைத்திருந்தார் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி. பயத்துடன் அங்கு சென்று திரும்பிய நிலா, நடுக்கத்தின் உச்சகட்டத்தில் இருந்தாள்.
அறைக்குத் திரும்பிய நிலாவின் பதற்றத்தைக் கண்டு, அவளது தோழி மீனா “ஏன் கை காலெல்லாம் நடுங்குகிறது?” என்று வினவினாள். தலைமைச் செயல் அதிகாரி தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயன்றதை நிலா கண்ணீருடன் விவரித்தாள். “இதுபோன்ற ஆட்களைச் சும்மா விடக்கூடாது. பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இவரைக் கடுமையாகத் தண்டிக்க வேண்டும்” என்று மீனா ஆவேசப்பட்டாள்.
ஆனால், பாதிக்கப்பட்ட நிலாவோ குழப்பத்தில் இருந்தாள். “இந்தச் சம்பவம் அலுவலகத்திற்குள் நடக்கவில்லையே?” என்றாள். அதற்கு மீனா, “பணியிடம் என்பது நான்கு சுவர்களுக்குள் அமர்ந்து கோப்புகளைப் பார்க்கும் இடம் மட்டுமல்ல. வேலை நிமித்தமாக நீ செல்லும் பயிற்சி முகாம், கருத்தரங்கு, பயணக் காலம், தங்கும் விடுதி என எல்லாமே பணியிடத்தின் நீட்சிதான். அலுவலக வேலைக்காக உன்னை எங்கு அழைத்துச் சென்றாலும், சட்டப்படி அது பணியிடம்தான்” என்று விளக்கினாள்.