

எங்கள் குடும்பத்துக்குச் சொந்தமான 2 ஏக்கர் நன்செய் நிலம் உள்ளது. சாலையிலிருந்து எங்கள் வயலுக்கு நேரடியாக பாதை இல்லை. இன்னொருவரின் வயல் வழியாகத்தான் செல்ல வேண்டும். கடந்த 30 ஆண்டுகளாக இதில் எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. சில மாதங்களுக்கு முன்பு எங்கள் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தன்னுடைய வயல் வழியாக செல்லக் கூடாது என அவர் கூறிவிட்டார். இதனால் எங்கள் வயலில் சாகுபடி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் வயலில் தொடர்ந்து நாங்கள் சாகுபடி செய்ய சட்டப்படி ஏதேனும் நிவாரணம் உள்ளதா? - சுப்பிரமணியன், தஞ்சாவூர்
இது தொடர்பாக தஞ்சாவூரில் உள்ள மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வசதியுரிமை சட்டப்படி பாதை வசதி கோரி அசல் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்து பரிகாரம் கோரலாம். 30 ஆண்டுகளாக இன்னொருவரின் வயல் வழியாக சென்று வந்தால் அது தொடர்பான ஆவணம் சர்வே எண்களுடன் கிராம நிர்வாக அலுவலரின் ‘அ’ பதிவேட்டிலும் கட்டாயம் குறிப்பிடப்பட்டு இருக்கும்.
அதை ஒரு ஆவணமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்து ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கலாம். ஒருவேளை ‘அ’ பதிவேடு ஆவணங்களை நிரூபிப்பதில் சி்க்கல் ஏற்படுகிறது என்றால், வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமிக்கும்படி நீதிமன்றத் தில் கோரிக்கை விடுத்து, அதன்மூலம் அந்த வழக்கறிஞர் ஆணையரை ஸ்தல விசாரணை மேற்கொள்ளச் செய்து, அதன்மூலம் பாதைக்கான உரிமையை நிலைநாட்டலாம்.