

ஆர்டிமிஸ் திட்டத்தின் கீழ் 2028இல் நிலவில் மீண்டும் விண்வெளி வீரர்களைத் தரையிறக்கவும் 2030இல் அங்கு நிரந்தரத்தளம் அமைக்கும் பணிகளைத் தொடங்கவும் முயன்றுவரும் நாசா, அதற்காக இஸ்ரோவின் ஒத்துழைப்பை நாடியுள்ளது.
நீண்டகால நிலவு ஆய்வுகளுக்காக, விண்வெளி சார்ந்த செயல்பாடுகளில் வேகமான முன்னேற்றங்களைக் கண்டுவரும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஒப்பந்தங்கள் பெங்களூருவில் அண்மையில் இறுதி செய்யப்பட்டன. இதையடுத்து அறிவியல் கருவிகள், நிலவு மேற்பரப்புத் தொழில்நுட்பங்கள், தகவல் தொடர்பு அமைப்புகள் அல்லது எதிர்கால ஆய்வுகளுக்கான கட்டமைப்புக் கூறுகளை இஸ்ரோ நாசாவுக்கு வழங்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு அறிவியலாளர்களிடம் உருவாகியுள்ளது.
ஏற்கெனவே நிசார் புவி கண்காணிப்புச் செயற்கைக்கோள் உள்ளிட்ட திட்டங்களில் இஸ்ரோ, நாசா கூட்டாகச் செயலாற்றுகிற நிலையில், இந்த நடவடிக்கை இந்திய விண்வெளித் துறையின் இன்னொரு மைல்கல்.