

பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோருக்கு உள்ள முக்கியமான சட்டப் பாதுகாப்புகள் என்ன?
இந்தியச் சட்டம் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்புக்குப் பல்வேறு சிறப்புச் சட்டங்களை வழங்கியுள்ளது. குறிப்பாக BNS Chapter V – Of Offences Against Woman And Children யின் கீழ் முக்கியமான சட்டப் பாதுகாப்பை வழங்குகிறது.
மேலும், குடும்ப வன்முறையிலிருந்து பாதுகாப்பு பெற Protection of Women from Domestic Violence Act, 2005, வரதட்சணை கொடுமைக்கு Dowry Prohibition Act, 1961 மற்றும் Bharatiya Nyaya Sanhita, 2023-இன் Section 85 (முன்னாள் IPC Section 498A), பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு Sexual Harassment of Women at Workplace (Prevention, Prohibition and Redressal) Act, 2013 (POSH Act), பாலியல் குற்றங்கள், அமிலத் தாக்குதல் section 124 BNS (acid attack), பின்தொடர்தல் Section 78 BNS (stalking), மற்றும் ஒளிந்து பார்த்தல் Section 77 BNS (voyeurism) இணைய வழி துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து பாதுகாப்பு அளிக்கும் பல்வேறு சட்டங்கள் நடைமுறையில் உள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க POCSO Act, 2012 சிறப்பு பாதுகாப்பை வழங்குகிறது. குழந்தைகளைப் பொறுத்தவரை, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க Protection of Children from Sexual Offences (POCSO) Act, 2012, குழந்தைத் தொழிலாளர் முறையைத் தடுக்க Child and Adolescent Labour (Prohibition and Regulation) Act, 1986 (2016ஆம் ஆண்டு திருத்தத்துடன்), குழந்தைத் திருமணத்தைத் தடுக்க Prohibition of Child Marriage Act, 2006, மற்றும் குழந்தைகள் பராமரிப்பு, பாதுகாப்பு, மறுவாழ்வு மற்றும் நலனை உறுதி செய்ய Juvenile Justice (Care and Protection of Children) Act, 2015 ஆகிய சட்டங்கள் முக்கியமான பாதுகாப்பை வழங்குகின்றன.
முதியோர்களுக்கு, Maintenance and Welfare of Parents and Senior Citizens Act, 2007 மூலம் பிள்ளைகளிடமிருந்து பராமரிப்பு கோருவதற்கும், அவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பதற்கும் சட்ட உரிமை வழங்கப்பட்டுள்ளது.
குடும்ப வன்முறைக்கு ஆளான பெண்கள் உடனடியாக என்ன செய்ய வேண்டும்?
குடும்ப வன்முறைக்கு ஆளாகும் பெண்கள் முதலில் தங்களின் உயிர் மற்றும் உடல் பாதுகாப்பை உறுதி செய்து, நம்பகமான உறவினர் அல்லது நண்பரின் உதவியை நாட வேண்டும்.
அதன் பின்னர் அருகிலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையம் அல்லது அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கலாம். குடும்ப வன்முறையால் உடல் அல்லது மனரீதியான பாதிப்பு ஏற்பட்டிருந்தால், உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற்று அதற்கான மருத்துவச் சான்றுகளைப் பாதுகாத்து வைத்துக் கொள்வதும் முக்கியம்.
Protection of Women from Domestic Violence Act, 2005-இன் கீழ், பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பு உத்தரவு (Protection Order), குடியிருப்பு உரிமை (Residence Order), ஜீவனாம்சம் (Monetary Relief), குழந்தையின் தற்காலிக காவல் (Custody Order), இழப்பீடு (Compensation) போன்ற பல்வேறு நிவாரணங்களை நீதிமன்றத்தின் மூலம் பெறலாம்.
கணவர் அல்லது அவரது உறவினர்களால் கொடுமை, உடல் அல்லது மனரீதியான துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை போன்ற குற்றங்கள் நடந்திருந்தால், Bharatiya Nyaya Sanhita, 2023-இன் Section 85 (IPC Section 498A) கீழ் காவல்துறையில் குற்றவியல் நடவடிக்கை எடுக்க முடியும்.
மேலும், வரதட்சணை கோருதல் அல்லது அதற்காகக் கொடுமைப்படுத்துதல் நடந்திருந்தால், Dowry Prohibition Act, 1961-இன் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேவையானால், மாவட்ட பாதுகாப்பு அலுவலர் (Protection Officer), மாவட்ட சட்டப் பணிகள் ஆணையம் (District Legal Services Authority), அல்லது 181 மகளிர் உதவி எண் மூலமும் உடனடி உதவி பெறலாம். மேலும், புகைப்படங்கள், மருத்துவச் சான்றுகள், குறுந்தகவல்கள், ஒலிப்பதிவுகள் அல்லது பிற ஆதாரங்களைப் பாதுகாத்து வைத்திருப்பது, வழக்கின் விசாரணையிலும் நீதிமன்ற நடவடிக்கைகளிலும் முக்கிய ஆதாரமாக அமையும்.
- டி.ஜெயஸ்ரீ வழக்கறிஞர், சென்னை உயர் நீதிமன்றம்; jeyashreedmba@gmail.com