

நடப்பில் உள்ள 25ஆவது சூரியத் துடிப்பு இயக்கச் சுழற்சி, எதிர்பார்த்ததைவிடக் கூடுதல் வீரியம் கொண்டதாக அமைந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக வீரியமிக்க சூரியச் சீற்றங்களும் புவிக் காந்தபுலப் புயல்களும் வீசுகின்றன.
கடந்த 2026 ஜூன் 3, இந்திய நேரப்படி மாலை 4:58 மணிக்கு (16:58 IST) AR4455 எனும் சூரியக் கரும்புள்ளிப் பகுதியில் ஒரு கடுமையான சூரிய ஒளிப்புயல் (solar flare) ஏற்பட்டது.
ரியாக எட்டு நிமிடங்கள் கழித்து, ஆஸ்திரேலியாவின் மேற்குப் பக்க இந்தியப் பெருங்கடல் பகுதியில் சிற்றலை ஒலிபரப்பில் (HF radio) பாதிப்பை ஏற்படுத்தியது. அவ்வப்போது சூரியனில் சிறுசிறு கரும்புள்ளிகள் தென்படும்.
இவை சற்றே வெப்பம் குறைவான பகுதிகள், ஆனால் காந்தப்புலம் (magnetic field) மிகவும் வலுவாக உள்ள பகுதிகள். இதுபோன்ற கரும்புள்ளிகளை இனங்கண்டதும், அவற்றுக்கு ‘துடிப்புப் பகுதி’ (active region) எனப் பெயரிடப்படும். அப்படிப்பட்ட ஒன்றுதான் துடிப்புப் பகுதி AR4455.
சீற்றம்
சூரியச் சீற்றத்தின் அளவைப் பொறுத்து பல்வேறு வகைகளாகப் பிரிப்பார்கள். அதன்படி இந்த நிகழ்வு X1.0 வகை சார்ந்தது. ஆற்றல் மிகுந்த, வலிமையான சீற்றம்; பெரிய தும்மல் போன்றது.
இந்தச் சீற்றம் நடந்த அதே வேளையில் வேறு இரண்டு M-வகை சீற்றங்களும் ஏற்பட்டன. அவற்றில் வெளிப்பட்ட சூரிய ஒளிப்புயல் (solar flares) இணைந்து ஒன்றாகப் பூமி நோக்கி வந்தன. இதன் தொடர்ச்சியாக G3 வகை காந்தப் புயல் (geomagnetic storm) பூமியில் ஏற்பட்டது.
புவிக்காந்தப் புயலுக்கு வலிமை குறைந்த G1 முதல் மீஆற்றல் கொண்ட G5 வரை ஆற்றல் அளவுகள் உண்டு. இதில் மூன்றாம் நிலை (G3) என்பதால் மிகப்பெரிய புயல் ஏற்படவில்லை என்றாலும் வலுமிக்க காந்தப் புயலாக அமைந்தது.
சூரியனில் நாள்தோறும் வெறும் முணுமுணுப்புப் போன்ற C-வகை சீற்றமும், இரைச்சலாக M-வகை சீற்றமும் ஏற்படும்; இவை செய்தி ஆவதில்லை. ஆனால் பெரும் உறுமல் போன்ற X-வகை சீற்றம் ஏற்படுவது அபூர்வம்.
அப்படிப்பட்ட அரிதான சீற்றம் அன்று நடைபெற்றதால், இந்த நிகழ்வு கவனம் பெற்றது. இது சூரியனின் காந்தப்புலத்தில் ஏற்படும் ‘காந்தப்புல மறு இணைப்பு’ (magnetic reconnection) காரணமாக நிகழ்ந்த ஒரு நிகழ்வு.