

நமது பண்பாட்டுக்கும் வேதியியலுக்குமான தொடர்பு மிகப் பழமையானது. கை மருத்துவம், சித்த மருத்துவம், பண்டைக் காலத்திலிருந்து தொடரும் சுவையான, சத்தான சமையல் முறைகள், (சமையல் முறைகள் பல்லாயிரம் ஆண்டு பழமை கொண்டவை என்கிறார்கள் சமையல் நிபுணர்கள்) வேளாண்மை வழிமுறைகள் போன்ற அனைத்தையும் வைத்துப் பார்க்கும்போது, நமது சமூகத்துக்கும் வேதியியலுக்குமான தொடர்பு நீண்ட காலமாக இருந்து வந்துள்ளது.
ஆனால் இன்றைய சூழ்நிலையில் நமது சமூகத்தில் அறிவியலுக்கும் சாதாரண மக்களுக்குமான இடைவெளி சற்று அதிகம் என்றே தோன்றுகிறது.
பொருள்களைப் பற்றிப் புரிந்துகொள்ளுதல், அவற்றைப் பகுத்துப் பார்த்தல், இரண்டு பொருள்களை எந்த விகிதத்தில் சேர்த்தால் புதிய பொருள் சரியாகக் கிடைக்கும் என்கிற புரிதல் போன்றவைதான் வேதியியலுக்கான அடிப்படை.
நமது மருத்துவ முறைகள், சமையல் முறைகளில் இதைத் தெளிவாக உணரலாம். நமது அம்மாக்கள், வைத்தியர்கள், விவசாயிகள் அனைவரும் நடைமுறை வேதியியலாளர்களாக இருந்திருக்கிறார்கள். பெரும்பாலான அடிப்படை அறிவியல் துறைகள் சாதாரண மக்களிடம் இருந்துதான் தோன்றியிருக்கின்றன.