யஷ்வந்த் வர்மா முதல் கரூர் வழக்கு வரை: உச்ச நீதிமன்றம் @ 2025 | மறக்க முடியுமா?

யஷ்வந்த் வர்மா முதல் கரூர் வழக்கு வரை: உச்ச நீதிமன்றம் @ 2025 | மறக்க முடியுமா?
Updated on
4 min read

* டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் பாதி எரிந்த நிலையில் கட்டுக்கட்டாகப் பணம் கைப்பற்றப்பட்டது தொடர்பான ஒளிப்படங்கள், வீடியோவை உச்ச நீதிமன்றம் வெளியிட்டது.

இது தொடர்பாக பஞ்சாப் - ஹரியாணா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, இமாச்சலப் பிரதேச உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜி.எஸ்.சந்தவாலியா, கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அனு சிவராமன் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவையும் உச்ச நீதிமன்றம் நியமித்தது.

* உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி யேற்றவர்கள் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 21 பேரின் சொத்து விவரங்கள் இணையத்தில் வெளியிடப்பட்டன.

* வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்குகளில் வக்ஃபு வாரியங்கள், கவுன்சில்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் படும் சட்டங்களில் நீதிமன்றங்கள் தலையிடு வதில்லை என்று வக்ஃபு திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்துத் தெரிவித்தார். காஜி, காஜியத், ஷரியா போன்ற முஸ்லிம் நீதிமன்றங்களுக்குச் சட்ட அங்கீகாரம் இல்லை எனவும் அவை பிறப்பிக்கும் உத்தரவுகள் யாரையும் கட்டுப்படுத்தாது என்றும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் புல்டோசர் மூலம் வீடுகள் இடிக்கப்பட்ட சம்பவத்துக்குக் கண்டனம் தெரிவித்த உச்ச நீதிமன்றம், வீடுகளை இழந்தவர்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது.

* உத்தரப்பிரதேச சிறுமியிடம் இரண்டு பேர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் பாலியல் பலாத்கார முயற்சியல்ல என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

* மேற்கு வங்கத்தில் மாணவர்களின் நலன் கருதி, புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும்வரை பணிநீக்கம் செய்யப் பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

* தேசியக் கல்விக் கொள்கையை ஏற்கும்படி மாநிலங்களைக் கட்டாயப்படுத்த முடியாது என்று கருத்துத் தெரிவித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்தது.

* கர்நாடகத்தில் எம்.எல்.ஏ.க்களைக் குறி வைத்து ‘ஹனி டிராப்’ செய்வதாக எழுந்த புகாரை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

* ஆகம விதிகளுக்கு உள்பட்ட கோயில் களில் அனைத்துச் சாதி அர்ச்சகர் களை நியமிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

* உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மீது வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர் தனது காலணியைக் கழற்றி வீசி அவமதிப்பு செய்தார். அவரை பார் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

* சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத குடியரசுத் தலைவர், ஆளுநர் களுக்குக் காலக்கெடு விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு விளக்கம் அளித்தது.

* மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கி லிருந்து 12 பேரை விடுவித்த மும்பை உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.

* தலைநகர் டெல்லியில் பொது இடங்களில் நாய்களுக்கு உணவளிக்க உச்ச நீதி மன்றம் தடைவிதித்தது. பின்னர் நாடு முழுவதும் நாய்களைப் பிடித்து முறையாகக் கருத்தடை செய்து தடுப்பூசி போட்டுக் காப்பகங்களில் அடைக்குமாறு உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது.

* கணவன் - மனைவி இடையே நடை பெற்ற உரையாடல்களை ரகசியமாகப் பதிவு செய்திருந்தால், அவற்றை ஆதார மாகப் பயன்படுத்தலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

* ராணுவப் பயிற்சிப் பள்ளிகளில் காயமடைந்து மாற்றுத் திறனாளியாகும் துணிச்சல்மிகு வீரர்களை ஓரங்கட்டி வீட்டுக்கு அனுப்பாமல், முப்படை அலுவலகங்களில் உட்கார்ந்து பணிபுரிய வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கருத்துத் தெரிவித்தது.

உச்ச நீதிமன்றம் - தமிழகம் சார்ந்தவை

* சனாதன தர்மம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்த விவகாரத்தில், தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மீது புதிதாக வழக்குகள் பதிவுசெய்ய உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. சென்னையில் 6 வயதுச் சிறுமி ஹாசினி பாலியல் வல்லுறவு - கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட தஷ்வந்தை விடுவித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

* கரூர் தவெக பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் அடங்கிய கண்காணிப்புக் குழுவையும் நீதிமன்றம் அமைத்தது.

* கர்நாடகத்தில் ‘தக் லைஃப்’ படத்தை வெளியிட அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. கமல்ஹாசனை மன்னிப்புக் கேட்க வலியுறுத்திய கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

* தமிழக அரசின் ‘உங்களுடன் ஸ்டாலின்’, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ ஆகிய திட்டங் களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெயரைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி வழக்குத் தொடர்ந்த அதிமுக எம்.பி., சி.வி.சண்முகத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது.

* சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்படும் மசோதாக்களை ஆளுநர் காரணமில்லாமல் ஆண்டுக்கணக்கில் கிடப்பில் போட்டால் ஜனநாயகம் கேலிக் கூத்தாகிவிடும் என்று உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கருத்துத் தெரிவித்தது.

* டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணைக்கான தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

* அமைச்சர் ஐ.பெரியசாமி - அவரது குடும்பத்தினருக்கு எதிராகச் சொத்துக் குவிப்பு வழக்கின் மறுவிசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அமைச்சர் துரைமுருகன், அவருடைய மனைவி சாந்தகுமாரிக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கின் மறு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக் காலத் தடை விதித்தது.

2025-க்கு முந்தைய கூட்ட நெரிசல் விபத்துகள்

டிச. 4, 2024: ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் நடந்த புஷ்பா-2 திரையிடலுக்கு வந்த நடிகர் அல்லு அர்ஜுனைப் பார்ப்பதற்காக முண்டியடித்த கூட்டத்தில் சிக்கி 35 வயதுப் பெண் ஒருவர் உயிரிழந்தார். அவரது மகன் காயமடைந்தார்.

ஜூலை 2, 2024: உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ராஸில் போலே பாபா என்கிற சாமியார் ஏற்பாடு செய்திருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் குழந்தைகள், பெண்கள் உள்பட 121 பேர் உயிரிழந்தனர்.

மார்ச் 31, 2023: இந்தூரில் உள்ள கோயில் ஒன்றில் ராமநவமி அன்று நடந்த விழாவின்போது, அங்கிருந்த பழங்காலக் கிணறு ஒன்றின் மீது அமைக்கப்பட்டிருந்த கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

ஜன. 1, 2022: ஜம்மு காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 12 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர்.

செப். 29, 2017: மும்பையின் மேற்கு ரயில்வேயின் எல்பின்ஸ்டோன் சாலை ரயில் நிலையத்தையும், மத்திய ரயில்வேயின் பரேல் நிலையத்தையும் இணைக்கும் பாலத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 23 பேர் உயிரிழந்தனர். 36 பேர் காயமடைந்தனர்.

ஜூலை 14, 2015: ஆந்திரப் பிரதேசத்தின் ராஜமுந்திரியில் நடந்த புஷ்கர விழாவின் தொடக்க நாளில், கோதாவரி நதிக்கரையில் உள்ள மிகப் பெரிய படித்துறையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 27 பக்தர்கள் உயிரிழந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.

அக். 3, 2014: பிஹாரின் பாட்னாவிலுள்ள காந்தி மைதானத்தில் தசரா கொண்டாட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 32 பேர் உயிரிழந்தனர். 26 பேர் காயமடைந்தனர்.

அக். 13, 2013: மத்தியப் பிரதேசத்தின் டாடியா மாவட்டத்தில் உள்ள ரத்தன்கர் கோயிலுக்குஅருகே நடந்த நவராத்திரித் திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்தனர், 100க்கும் அதிகமானோர் காயமடைந் தனர். பக்தர்கள் கடந்து செல்லவிருக்கும் பாலம் இடிந்து விழப்போகிறது என்கிற வதந்தியால் இந்தக் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

நவ. 19, 2012: பாட்னாவின் கங்கை நதிக்கரையில் உள்ள அதாலட் காட்-டில் நடந்த சாத் பூஜையின்போது, கூட்ட நெரிசலால் தற்காலிகப் பாலம் இடிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 20 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.

நவ. 8, 2011: ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் உள்ள ஹர்-கி-பவுரி காட்-டில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 20 பேர் உயிரிழந்தனர்.

ஜன. 14, 2011: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் புல்மேடு பகுதியில் சபரிமலைக்குச் சென்றுகொண்டிருந்த பக்தர்கள் மீது சொகுசு கார் ஒன்று மோதியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் 104 பக்தர்கள் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

மார்ச் 4, 2010: உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் மாவட்டத்தில் கிருபாலு மகாராஜ் ராமர் ஜானகி கோயிலில் ஏற்பாடு செய்திருந்த இலவச உணவு, உடை வழங்கும் விழாவில் உண்டான கூட்ட நெரிசலால் 63 பேர் உயிரிழந்தனர்.

செப். 30, 2008: ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூரில் உள்ள சாமுண்டா தேவி கோயிலில் வெடிகுண்டு வெடித்ததாகப் பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 250 பக்தர்கள் உயிரிழந்தனர்.

ஆக. 3, 2008: இமாச்சலப்பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள நைனா தேவி கோயிலில் பாறைச் சரிவு ஏற்பட்டதாகப் பரவிய வதந்தியால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 162 பேர் உயிரிழந்தனர், 47 பேர் காயமடைந்தனர்.

யஷ்வந்த் வர்மா முதல் கரூர் வழக்கு வரை: உச்ச நீதிமன்றம் @ 2025 | மறக்க முடியுமா?
நோபல் பரிசு முதல் தேசிய திரைப்பட விருதுகள் வரை @ 2025 | மறக்க முடியுமா?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in