

சமீபத்தில் நிலவை நெருங்கிய நாசாவின் ஆர்டெமிஸ் விண்கலம் பூமிக்குத் திரும்பியது. விண்கலங்கள் பூமியில் தரையிறங்குவது என்பது விண்வெளிப் பயணத்தில் மிகவும் சவாலான, ஆபத்தான கட்டம். வளிமண்டலத்திற்குள் நுழைந்ததிலிருந்து, கடலில் விழும் / தரையைத் தொடும், 10-20 நிமிடங்கள்தான் மிக முக்கியமான கட்டம்.
பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழையும்போது காற்றின் உராய்வு, அழுத்தம், அதிர்ச்சி அலைகள் போன்றவற்றின் காரணமாக அதன் வெளிப்புறம் சுமார் 1,500 - 3,000 டிகிரி செல்சியஸ்வரை வெப்பமடையும். இந்த வெப்பத்தைத் தாங்கத் தவறினால் விண்கலம் எரிந்து சாம்பலாகிவிடும்.
விண்வெளித் தியாகிகள்
விண்வெளி ஆய்வின் வரலாறு என்பது பல விண்வெளி வீரர்களின் தியாகத்தால் செதுக்கப்பட்டது. 1967இல், ரஷ்ய விண்வெளி வீரர் விளாடிமிர் கோம
ரோவ் பயணித்த சோயுஸ் 1 விண்கலத்தில் பாராசூட் விரியாததால், அந்த விண்கலம் ஒரு எரிகல்போல அதிவேகத்தில் பூமியில் மோதியதில் அவர் தன் இன்னுயிரை இழந்தார்.
விண்வெளி ஆய்வில் இறந்த முதல் நபர் இவரே. இதன் பிறகே, விண்வெளி ஆய்வுகளில் தொழில்நுட்பத்தைவிட மனித உயிருக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. 1970இல், நெருக்கடியான சூழலிலும் வீரர்களை மீட்டெடுத்த அப்பல்லோ 13 பயணமே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு.
எனினும், 1971இல் சோயுஸ் 11 விண்கலம் பூமிக்குத் திரும்பியபோது, தொழில்நுட்பக் கோளாறால் திடீரெனக் காற்றழுத்தம் குறைந்து, ஜார்ஜி டோப்ரோவோல்ஸ்கி, விளாடிஸ்லாவ் வோல்கோவ், விக்டர் பாட்சாயேவ் ஆகியோர் விண்கலத்திலேயே உயிரிழந்தது விண்வெளி வரலாற்றில் ஒரு கறுப்பு அத்தியாயம்.
2003இல், கொலம்பியா விண்கலம் விண்ணில் ஏவப்பட்டபோது, அதன் எரிபொருள் தொட்டியிலிருந்து விழுந்த சிறிய இன்சுலேஷன் ஃபோம் துண்டு மோதியதில், அதன் வெப்பத் தடுப்புக் கவசம் (Reinforced Carbon - Carbon Panel) சேதமடைந்தது.
இந்தச் சேதமே, கல்பனா சாவ்லா உள்ளிட்ட ஏழு விண்வெளி வீரர்கள், பூமிக்குத் திரும்பும்போது தங்கள் இன்னுயிரை இழக்கக் காரணமாக அமைந்தது.
அதீத வெப்பம்
சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமிக்குத் திரும்பும் விண்கலங்கள் மணிக்கு சுமார் 28,000 கிலோமீட்டர் (விநாடிக்கு 7.8 கி.மீ.) வேகத்தில் வளி மண்டலத்திற்குள் நுழையும். அப்போது ஏற்படும் உராய்வினால் விண்கலத்தின் வெப்பக் கவசம் சுமார் 1,600 டிகிரி செல்சியஸ்வரை வெப்பமடையும்.
ஆனால், நிலவிலிருந்து பூமிக்குத் திரும்பும் விண்கலங்கள், மணிக்கு சுமார் 40,000 கிலோமீட்டர் (விநாடிக்கு 11 கி.மீ.) வேகத்தில் நுழையும். இதன் காரணமாக வெப்பக்கவசம் சுமார் 2,700 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பத்தைத் தாங்க வேண்டியிருக்கும்.