

உலக நாடுகள் பலவற்றில் 19ஆம் நூற்றாண்டில், தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 18 மணி நேரம்வரை வேலைபார்க்க நிர்ப்பந்திக்கப்பட்டனர். ஒரு நாளுக்கான வேலை நேரத்தின் அளவு சட்டபூர்வமாக வரையறுக்கப்படாவிட்டால், தொழிலாளர் வர்க்கத்துக்கு முன்னேற்றம் சாத்தியம் இல்லை என்று கார்ல் மார்க்ஸ் கூறியிருந்தார். அப்போதிலிருந்தே எட்டு மணி நேர வேலை நாள் என்னும் கோரிக்கைக்கான போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
அமெரிக்காவில் இயங்கிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, 1886 மே 1 அன்று ஒரு நாளுக்கு எட்டு மணி நேரம் வேலை என்பதை உறுதிப்படுத்தும் நாள் என்று அறிவித்து, நாடு முழுவதும் அன்றைய நாளில் பொது வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. திட்டமிட்டபடி அமெரிக்காவின் பல தொழிற்சாலைகளில் பல்லாயிரக்கணக்கான தொழிலாளிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பேரணிகளை நடத்தினார்கள். பலர் கைதுசெய்யப்பட்டனர். மே 3 அன்று ஒரு தொழிற்சாலையின் வாயிலில் ஆயிரக்கணக் கான தொழிலாளர்கள் இணைந்து வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். அப்போது காவல் துறையின் துப்பாக்கிச் சூட்டில் ஆறு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதை எதிர்த்து மே 4 அன்று சிகாகோவில் உள்ள ஹேமார்க்கெட் சதுக்கத்தில் நடைபெற்ற கண்டனக் கூட்டத்திலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர். அப்போது வன்முறை வெடித்தது. பலர் கொல்லப்பட்டனர். இதற்காகத் தொழிலாளர் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்களில் நால்வருக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சோஷலிச அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகளும் இடம்பெற்ற இரண்டாம் அகிலத்தின் முதல் மாநாடு, பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 1889 ஜூலையில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் ‘ஹேமார்க்கெட் படுகொலை’யைக் கண்டித்ததுடன், அதற்கு வித்திட்ட போராட்டத்தை நினைவுகூரும் விதமாக 1890 மே 1 அன்று எட்டு மணி நேர வேலை என்கிற கோரிக்கைக்காக உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. 1891இல் நடந்த இரண்டாம் அகிலத்தின், இரண்டாவது மாநாட்டில், மே முதல் நாளை ஆண்டுதோறும் தொழிலாளர்களுக்கான நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அங்கீகரிக்கப்பட்டது. இப்படித்தான் மே 1 தொழிலாளர் நாளாக ஆனது. இது ‘மே நாள்’ என்றும் அழைக்கப்படுகிறது.
-நந்தன்