

சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்று, மெரினா கடற்கரையில் உள்ள உழைப்பாளர் சிலை. உழைப்பாளர்களின் உழைப்பைப் போற்றும் வகையிலும் மே நாளின் சிறப்பை வெளிப்படுத்தும் வகையிலும் அமைக்கப்பட்ட சிலை இது. மெரினா கடற்கரையை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 1959இல் காமராஜர் ஆட்சிக் காலத்தில் இந்தச் சிலை அமைக்கப்பட்டது.
சரியாக நூறு ஆண்டுகளுக்கு முன்பு, 1923 மே மாத மாலைப் பொழுதில்தான், பொதுவுடைமைவாதியான சிங்காரவேலர் முன்னெடுப்பில் இந்தியாவில் முதன்முதலாக மே நாள் இதே மெரினாவில் கொண்டாடப் பட்டது. மே நாள் கொண்டாட்டத்தில் மெரினா பிரிக்க முடியாததாக இருந்ததாலேயே, உழைப்பாளர் சிலை அங்கு வைக்கப்பட்டது.
கடினமான பாறையை 4 தொழிலாளர்கள் சேர்ந்து நகர்த்துவதைப் போன்ற உழைப்பாளர் சிலையை உருவாக்கியவர், தேவி பிரசாத் ராய் சவுத்ரி. சிறந்த ஓவியர், சிற்பி. 1954இல் சென்னை லலித் கலா அகாடமி நிறுவப்பட்டபோது, அதன் முதல் தலைவராக இருந்தவர் இவர். சென்னைக் கவின் கலைக் கல்லூரியின் மாணவராக இருந்தவர். அதன் முதல் இந்திய முதல்வராகவும் பணியாற்றியவர். லலித் கலா அகாடமியில் பணியாற்றிய காவலாளி, மாணவர் உள்ளிட்ட நால்வரை மாதிரியாகக் கொண்டு, இந்தச் சிலையை ராய் சவுத்ரி உருவாக்கினார்.