

மார்க்சியம் அல்லது கம்யூனிசம் ஆகிய சொற்கள் உணர்த்த வருவதை முழுமையாக அறியாத பலரும், அவற்றின்மீது ஒருவித அசூயையை வெளிப்படுத்துவதையும், அனைத்தையும் சமமாகப் பாவிக்கத் தேவையில்லை, பகிர்ந்துகொள்ள அவசியமில்லை என நினைப்பவர்கள் இந்தக் கொள்கைகளை வெறுப்பதையும் பொதுவாகப் பார்க்கலாம்.
முதலாளிகளாக இருப்பவர்களைத் தாண்டி, மறைமுகமாக முதலாளித்துவத்தை ஆதரிப்பவர்களும் மார்க்ஸை எதிர்ப்பதற்கு அடிப்படைக் காரணம், ஒன்று முதலாளித்துவத்தைக் கண்ணை மூடிக்கொண்டு அப்படியே ஏற்பது அல்லது அதற்கு அடிபணிந்து போக விரும்புவதே.
ஆனால், கம்யூனிசத்தை வெறுப்பவர்களும் விலகி ஒதுங்குபவர்களும், அந்தக் கொள்கைகளால் அவர்கள் அடைந்துள்ள பலன்களை, சாதகமான மாற்றங்களைப் புறந்தள்ளிவிட்டுப் பேசுகிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
அன்றைய பிரஷ்யாவில் 205 ஆண்டுகளுக்கு முன் பிறந்த மார்க்ஸ், கம்யூனிசம் என்கிற சித்தாந்தத்தை முன்மொழிந்தார். அதற்குப் பிறகுதான் பொருள்முதல் வாதிகள், மார்க்சியம், சோஷலிசம், லெனினிசம், மாவோயிஸம், பிடலிஸம் போன்ற கொள்கைகள் உருவாகின. அவை பரவலாகத் தவறாகவே புரிந்துகொள்ளப்பட்டுள்ளன.
மார்க்ஸோ, மார்க்சியமோ உருவாகியிருக்காவிட்டால் பொருளாதாரத் துறை, யதார்த்தவாத இலக்கியம், மக்கள் கலைகள், வரலாற்றுப் பார்வை, சமூக மேம்பாடு, கல்வி பரவலாதல், மருத்துவ வசதிகள் அனைவருக்கும் கிடைத்தல், தொழில் துறை – வேளாண் வளர்ச்சி, தொழிற்சங்க உரிமை, மக்கள் புரட்சியால் ஆட்சி மாற்றம் எனப் பல்வேறு விஷயங்களில் இன்றைக்கு எட்டப்பட்டுள்ள வளர்ச்சி சாத்தியப்பட்டிருக்காது.
தொழிலாளர்களுக்கு வேலை நேரம் நிர்ணயிப்பு, ஓய்வூதியம், சம்பளத்துடன் விடுமுறை, தங்கள் உரிமைகளை வலியுறுத்திப் பெறுவதற்குத் தொழிற் சங்கமாகக் கூடுதல், சமூகப் பாதுகாப்பு எனப் பல்வேறு விஷயங்களுக்கு மார்க்ஸும் அவர் வகுத்தளித்த கொள்கை அடிப்படையிலான தொடர் போராட்டங்களுமே ஏதோ ஒரு வகையில் காரணமாக இருந்துள்ளன.
உலகில் உள்ள அனைவரும் உடல் உழைப்பு, அறிவு உழைப்பு என ஏதோ ஒரு வகையில் உழைப்பைச் செலுத்தித்தான் சம்பாதிக்கிறோம், வாழ்கிறோம். இந்த உழைப்பாளிகளுக்கான அடிப்படை உரிமைகள் நிலவுடைமை சமுதாயக் காலத்திலும் தொழிற்புரட்சிக்குப் பிந்தைய முதலாளித்துவக் காலத்திலும் மதிக்கப்படாமலே இருந்துவந்தன. அடிமைத் தொழிலாளியாக வாழ்தல், ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கு உழைத்தல், விடுமுறை இல்லா உழைப்பு எனப் பல்வேறு கொடூரங்கள் தொடர்ந்துகொண்டிருந்தன.
இப்படி உழைப்பால் உலகை உய்வித்துவரும் தொழிலாளிகள் தங்கள் உரிமைகளை உணரவும், அந்த உரிமைகளுக்காக ஒன்றுசேர்ந்து போராடவும் வழியமைத்துத் தந்தது மார்க்ஸும் அவர் வகுத்தளித்த கொள்கையுமே என்பதை மறந்துவிடக் கூடாது.