

இந்தியாவின் முதல் தொழிற்சங்கமாக அங்கீகரிக்கப்பட்ட ‘சென்னைத் தொழிலாளர் சங்கம்’, 1918 ஏப்ரல் 27 அன்று தொடங்கப்பட்டது. இச்சங்கக் கட்டிடம், 1931 செப்டம்பர் 16 அன்று, ‘176, ஸ்ட்ரஹான்ஸ் ரோடு, பட்டாளம், சென்னை 12’ என்கிற முகவரியில் அமைந்தது. இன்று சென்னைத் தொழிலாளர் சங்கம் இல்லை; கட்டிடம் கட்டிடமாக இல்லை, அவ்வளவுதான்.
சங்கத்தின் பின்னணி
19ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மெட்ராஸின் தொழில் கட்டமைப்பு, வேகமாக விரிவடைந்துவந்தது. பட்டாளம்- சூளை பகுதியில் அமைந்திருந்த பின்னி நிறுவனத்தின் ‘பி அண்டு சி மில்’ எனப்பட்ட பின்னி மற்றும் கர்நாடிக் ஆலைகளில், சுமார் 20,000 தொழிலாளர்கள் வேலைபார்த்துவந்தனர். தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிசெய்யும் எந்த ஏற்பாடுகளும் அக்காலக்கட்டத்தில் இல்லை என்பதால், தொழிலாளர்கள் நிலை மோசமாக இருந்துவந்தது.
இந்த ஆலைகளில் வேலை பார்த்துவந்த தொழிலாளர்கள், பெரம்பூர் பாரக்ஸ் சாலையில் செயல்பட்டுவந்த ‘வெங்கடேச குணாம்ருத வர்ஷிணி சபா’வில் அவ்வப்போது கூடிப் பேசிவந்தனர். இந்த சபாவை நடத்திவந்த வணிகர்களான கோ.செல்வபதி செட்டியாரும் ஜி.ராமாஞ்சலு நாயுடுவும் தொழிலாளர்கள் அனுபவிக்கும் கொடுமைகளைக் கேட்டறிந்தனர். அப்போது சென்னை வெஸ்லி கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியராகப் பணியாற்றிவந்த திரு.வி.க-வைச் சந்தித்த செல்வபதி, சபாவில் வந்து தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்ற அழைப்புவிடுத்தார். அழைப்பை ஏற்று திரு.வி.க-வும் தொடர்ச்சியாக உரையாற்றிவந்தார்.
இந்நிலையில், தொழிலாளர்களை ஒன்றுதிரட்டி அவர்களின் நிலையை மேம்படுத்த விழைந்த செல்வபதியும் ராமாஞ்சலுவும் அன்னி பெசன்ட் அம்மையாரைச் சந்தித்தனர். அவருடன் ‘ஹோம் ரூல்’ இயக்கத்தில் செயல்பட்டுவந்த வாடியா என்பவரைக் கொண்டு ‘சென்னைத் தொழிலாளர் சங்கம்’ முறையாகத் தொடங்கப்பட்டது. ‘இந்தியன் பேட்ரியட்’ என்ற இதழ் மூலம் மில் தொழிலாளர்களின் பிரச்சினைகளைக் கவனப்படுத்திவந்தவரும் சென்னை மாகாணச் சங்கத் தலைவராக இருந்தவருமான கேசவப் பிள்ளையின் பங்களிப்பும் சென்னைத் தொழிலாளர் சங்க உருவாக்கத்தில் கணிசமாக இருந்தது. இச்சங்கத்தின் நிறுவனத் தலைவராக வாடியாவும், துணைத் தலைவர்களாக திரு.வி.க-வும் கேசவப் பிள்ளையும் வி.சர்க்கரைச் செட்டியாரும், பொதுச் செயலாளர்களாக செல்வபதியும் ராமாஞ்சலுவும் பொறுப்பேற்றனர்.
சென்னைத் தொழிலாளர் சங்கமானது உறுப்பினர்கள் தகுதி, சந்தா, செயற் குழு, பொதுக் குழு, நிதி நிர்வாகம் முதலியவை பற்றித் தெளிவான விதிகள் வகுக்கப்பட்டு முறையான தொழிற்சங்கமாகச் செயல்படத் தொடங்கியது. ‘பி அண்டு சி’ ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, சென்னை மாநகரின் பலதரப்பட்ட தொழிலாளர்களும் இச்சங்கத்தில் உறுப்பினர்களாயினர். 1926இல் இயற்றப்பட்ட தொழிற்சங்கச் சட்டப்படி, சென்னைத் தொழிலாளர் சங்கம் பதிவுசெய்யப்பட்டது; 1932இல் சங்கம் முதலாளிகளால் அங்கீகரிக்கப்பட்டது.
செல்வபதி - இராமாநுஜ நிலையம்
‘1931-ம் ஆண்டு சென்னைத் தொழிலாளர் சங்கம் தனக்கென்று ஒரு கட்டிடம் எழுப்பியது, அதற்குக் கால்கோள் விழா என்னால் செய்யப்பட்டது; திறப்பு விழா திவான்பகதூர் கேசவப் பிள்ளையால் நிகழ்த்தப்பட்டது. பெயர் ‘செல்வபதி - இராமாநுஜ நிலையம்.’ உச்சியில் வாடியாவின் முகவுருவப் பொலிவு. இவ்வாறு சங்கங் கண்ட ஐவர் மீதுள்ள அன்பைத் தொழிலாளர் புலப்படுத்தினர்’ எனச் சங்கக் கட்டிடம் உருவானது குறித்து திரு.வி.க. தன் ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ தன்வரலாற்று நூலில் எழுதுகிறார்.
வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தக் கட்டிடத்தின் இன்றைய நிலை, வரலாற்றைப் பாதுகாப்பதில் நம்முடைய அக்கறை எந்த அளவில் இருக்கிறது என்பதற்கான முகத்தில் அறையும் எடுத்துக்காட்டாக, ‘வேர்பரப்பி’ நிற்கிறது; கட்டிடத்தின்மீது செழித்து வளர்ந்துவிட்ட ஆலமரம், கட்டிடத்தின் மூன்று தளங்களிலும் தூண்கள், சாளரங்களில் வேர்களைப் பரப்பி வலுவாக நிற்கிறது. சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் வரலாற்றைப் படித்துவிட்டு, இக்கட்டிடத்தை நேரில் காணும் ஆவலோடு ஒருவர் வருவாரெனில், அவர் இந்த ‘மரக்கட்டிட’த்தைக் கண்டு அதிர்ந்து போவது நிச்சயம்.
1996இல் பின்னி ஆலை நிரந்தரமாக மூடப்பட்ட பிறகு, சென்னைத் தொழிலாளர் சங்கத்தில் ஏற்பட்ட குழப்பங்கள், கட்டிடத்தின் சிதைவுக்கு வழிவகுத்திருக்கின்றன. ஒரு நூற்றாண்டு வரலாறு கண்முன்னே சிதைந்துவிட்டிருக்கிறது.
| மீட்டெடுக்குமா அரசு? காலத்தில் உறைந்துவிட்ட பட்டாளம் மணிக்கூண்டு சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் தளகர்த்தர்களில் ஒருவரான செல்வபதியின் நினைவைப் போற்றும் வகையில், ஸ்ட்ரஹான்ஸ் சாலையில் சங்கக் கட்டிடத்திலிருந்து கூப்பிடு தூரத்தில் சாலையோரப் பூங்காவுடன் மணிக்கூண்டு ஒன்று நிறுவப்பட்டது. ‘ஆர்ட் டெகோ’ கட்டிடக் கலையம்சத்தில் அமைந்த இந்த மணிக்கூண்டை, 1948 ஆகஸ்ட் 4ஆம் தேதி, அப்போதைய சென்னை மேயர் யு.கிருஷ்ணா ராவ் திறந்துவைத்தார். சென்னையின் புகழ்பெற்ற கடிகாரத் தயாரிப்பு நிறுவனமான கனி அண்டு சன்ஸ் நிறுவனத்தார் இந்த மணிக்கூண்டை உருவாக்கினர். பூங்கா இருந்த தடமும் இன்று இல்லை; மணிக்கூண்டு நேரமும் காட்டுவதில்லை. இந்த மணிக்கூண்டின் வரலாற்று முக்கியத்துவம் அறியப்படாமல், இதன் பின்புறம் கட்டுமானங்கள் எழுப்பப்பட்டுவிட்டதால், மணிக்கூண்டின் மூன்று பக்கங்களை மட்டுமே இப்போது பார்க்க முடியும். சென்னைத் தொழிலாளர் சங்கத்தின் கட்டிடத்தைப் போலல்லாமல் குறைந்தபட்சம் மணிக்கூண்டு தப்பித்திருக்கிறது. நேரம் காட்டுவதில்லை என்றாலும் மணிக்கூண்டு தன் நாள்களை எண்ணிக் கொண்டு மௌனமாக நிற்கிறது. |