வாசிப்பே வெல்லும்!

வாசிப்பே வெல்லும்!
Updated on
3 min read

புத்தக வாசிப்பைவிட அதீத சுகம் தரும் பயனுள்ள எளிய பொழுது போக்கு இருக்க முடியுமா? இன்று செயற்கை நுண்ணறிவு வந்து விட்டது. ‘யாருமற்ற இடத்தில் என்ன நடக்கிறது’ என்று முதல் வரியில் எழுதிவிட்டு, ‘எல்லாம்’ என்று இரண்டாவது வரியில் மனதைப் பிரமிப்புடன் வருடும் நகுலனை வாசிக்கும்போது ஏற்படும் ஒரு சிறிய சிலிர்ப்பு அனுபவத்தைக்கூடச் செயற்கை நுண்ணறிவால் படைக்க முடியாது.

அன்று பாடப் புத்தகம், வீட்டுப்பாடம், பரீட்சை, மழையில் நடந்து பள்ளிக்கூடம் செல்லுதல் என்பன இருந்தபோதிலும் வாசிப்பும் இருக்கவே செய்தது. படுத்த படுக்கையாக இருந்த தாத்தாவுக்குச் சத்தமாக நான் வாசித்துக்காட்டிய புத்தகம்தான் ‘சத்திய சோதனை’. என் மகன், மகளின் பள்ளிப் பருவத்தில் ஹாரி பாட்டர் வந்துவிட்டது. வீட்டில் ‘ஹாரி பாட்டர் பார்ட்டி’ என்றே ஒன்று நடந்தது. என் பிள்ளைகளைப் போலவே ஹாரி பாட்டர் வாசித்திருந்த பத்துப் பன்னிரண்டு குழந்தைகள் ஒன்றுகூடி ரசிப்புத்தன்மையோடு தங்களுக்குள் வாசிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததைக் கண்டு பிரமிப்போடு சிலிர்த்ததை மறக்கவே முடியாது.

என் சந்ததியின் இளமைப் பருவத்தில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுஜாதா என்றும் சோவியத் ரஷ்யாவின் ராதுகா, மீர் பதிப்பகங்கள் வழியே கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், மக்சிம் கார்க்கி என்றும் விரிந்த எங்கள் புத்தக அலமாரியில் என்னை மணமுடித்தவர் வழியே ஆர்.சூடாமணி, ராஜம் கிருஷ்ணன், ஜேன் ஆஸ்டின், திலகவதி, லக்‌ஷ்மி என்று இடம் ஒதுக்கியது தனிக் கதை. இருவருமாக இணைந்த வாசிப்பில் ‘நேஷனல் புக் ட்ரஸ்ட்’ வழங்கிய விபூதி பூஷணின் ‘லட்சிய இந்து ஓட்டல்’ முதல் தகழியின் ‘செம்மீன்’, ஆல்பர் காம்யூ, காஃப்கா வரை வளர்ந்த நாள்களின் ஊடாகக் குழந்தைகள் பிறந்து, அதே புத்தக அலமாரியில் முத்து காமிக்ஸ், அமர் சித்திர கதா, வாண்டுமாமா என்று நுழைந்துகொண்டதை எப்படி மறக்க முடியும்.

வாசிப்பை வளர்ப்பது எளிது

இன்று வாசிப்பு செத்துவிட்டது என்கிற வாதத்தை நான் ஏற்க மாட்டேன். வாசிக்கும் ஆட்டோ ஓட்டுநர், டிக்கெட் கொடுத்து விட்டுக் கடைசி இருக்கையில் அமர்ந்து புத்தகத்தைத் திறக்கும் பேருந்து நடத்துநர், கக்கத்தில் புத்தகத்துடன் நடமாடும் ரயில் டிக்கெட் பரிசோதகர், மருத்துவப் பணிக்கு நடுவே வாசிக்கும் செவிலியர், நூலகத்துக்கு மறக்காமல் ஒரு நடை சென்றுவரும் இல்லத்தரசிகள் எனப் பலரை நான் அறிவேன். பெரும்பாலான செய்தித்தாள்கள் இன்று தங்களுக்கு ஒரு கோடி வாசகர்கள் இருப்பதாகச் சொல்கின்றனவே, வாசிப்பு இல்லாமலா சொல்வார்கள்? எப்படி உங்கள் வீட்டில் மட்டும் வாசிப்பைக் கொண்டு வந்தீர் கள், எப்படி இவ்வளவு வாசிக்கிறீர்கள் என்று கேட்பவர்களுக்குச் சொல்வேன்: வீட்டில் குழந்தைகளை வாசிக்க வைப்பது மிக மிகச் சுலபம், ஐந்தே நிபந்தனைகள் போதும்:

 உங்கள் குழந்தைகளைக் காட்டுங் கள். சற்று நேரம் அவர்களைப் பார்த்தபடி இருந்தாலே போதும், நீங்கள் வாசிப்பவரா டிவி தொடர் பார்ப்பவரா எனச் சொல்லிவிட முடியும். முதலில் பெற்றோர் வாசிக்க வேண்டும்.

 வீட்டில் செய்தித்தாள் முதல் தமிழின் வார-மாத இதழ்களை வாங்கிப்போட வேண்டும். புத்தக வாசிப்பின் முதல் படி பத்திரிகை வாசிப்புதான்.

 ஒரு மாற்றத்துக்காக எப்போதும் குடும் பத்துடன் வெளியே செல்வீர்கள் அல்லவா, அந்தப் பட்டியலில் ஊரில் உள்ள நூலகம் இருக்கிறதா? குழந்தைகளை நூலகத்துக்கு அழைத்துச் சென்று, அங்கு சுதந்திரமாக உலவவிட்டு நூலக நடைமுறைகளை இயல்பாக உணரவைத்துப் பாருங்கள்... அவர்களின் இயல்பே மாறிவிடும்.

 வாசிப்பு என்பது திறன் மட்டுமல்ல, ரசனையும்கூட. எனவே, நீங்கள் வாசித்து ரசித்ததை இந்தப் புத்தகத்திலிருந்து படித்தேன், அந்தப் புத்தகத்தில் என்ன இருக்கிறது தெரியுமா என்று சொல்லிக் குழந்தைகளுடன் பேசிப் பகிர வேண்டும். அதேபோல் குழந்தைகளையும் பகிர்ந்திட அனுமதித்துப் பழக்கினால் வீட்டில் வாசிப்பு எளிதில் வளர்ந்துவிடும்.

கைபேசிகளுக்கு ஓர் இடம்

ஷேக்ஸ்பியரின் பிறந்த நாள்தான் (ஏப்ரல் 23), உலகப் புத்தக நாளாகக் கொண்டாடப் படுகிறது. உலகப் புத்தகக் காப்புரிமை நாளாகவும் இது கடைப்பிடிக்கப்படுகிறது. தூக்கிலிடப்படும்வரை வாசித்த மாவீரன் பகத்சிங், உலகிலேயே மிகப்பெரிய லண்டன் அருங்காட்சியக நூலகத்தின் பெரும்பாலான நூல்களை வாசித்தவர் என்று பெயர்பெற்ற அண்ணல் அம்பேத்கர், ஒரு புத்தகத்தை வாசித்து முடிப்பதற்காகத் தனது புற்றுநோய் அறுவைசிகிச்சையை இரண்டு நாள்கள் தள்ளிவைத்த பேரறிஞர் அண்ணா, 6,000 புத்தகங்களைச் சேகரித்து, வாசித்து, மறைவதற்கு முன் சென்னைப் பல்கலைக்கழக நூலகத்துக்கே அவற்றைத் தானமாகக் கொடுத்த சிங்காரவேலர், பெண்கள் பள்ளிகள், கல்லூரிகள் தோறும் 100 நூலகங்களை அமைத்து வரலாறு படைத்த டாக்டர் முத்துலட்சுமி எனப் பலரை இந்த நாளில் நினைவுகூர்ந்து, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

மாவட்டம்தோறும் புத்தகத் திருவிழாக் களை அரசே நடத்துகிற இந்தக் கைபேசி யுகத்தில், வீட்டில் வாசிப்பை வளர்த்திட ஐந்தாவது இறுதி நிபந்தனை:  வேலைக்கோ கடைக்கோ சென்று திரும்பினால் காலணி களை என்ன செய்கிறீர்கள்? வாசலிலேயே கழற்றி வைக்கிறீர்கள் அல்லவா. வீட்டுக்குள் நுழையும்போதே கைபேசிகளையும் வைப்ப தற்கு ஒரு இடம், தொலைவாக இருக்க வேண்டும். தேவை தவிர வேறு எதற்கும் அவற்றை (காலணி போலவே) தொடாமல் பழகினால் கண்டிப்பாக அந்த வீடு புத்தகங்களின் ஆலயமாக மிளிரும்.

உலகின் தலைமைப் பண்புமிக்க ஆயிரம் பேரைத் தேர்வுசெய்து (சுந்தர் பிச்சை, சத்யா நாதெள்ளா உள்பட) அவர்களிடையே உள்ள பொது அம்சம் எது என்று ஜப்பானிய நிறுவனம் ஒன்று அண்மையில் பரிசோதித்தது. அவர்கள் அனைவரிடமும் இருந்த வெற்றியின் ரகசியம், அவர்கள் சிறு வயதிலிருந்தே வாசிப்புப் பிரியர்கள் என்பதுதான். வானொலி யுகம், தொலைக்காட்சி யுகம், இணைய யுகம், கைபேசி - வாட்ஸ்அப் யுகம் என எத்தனை யுகங்கள் வந்தபோதிலும் புத்தக வாசிப்பு என்பது புதிய புதிய வடிவங்கள் எடுத்தபடி தொடரவே செய்கிறது. புத்தக வாசிப்பைக் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கையில் ஒரு பகுதி ஆக்கிவிட்டால் போதும், வாசிப்பே வெல்லும்!

- ஆயிஷா இரா.நடராசன்,

கட்டுரையாளர் - கல்வியாளர், எழுத்தாளர்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in