

தீவிர இலக்கியம் ஒரு பக்கம் என்றால், அதற்கு நேரெதிராகப் பெருவாரியான வாசகர்களைச் சென்றடைபவையாக நாற்பதாண்டுகளுக்கு முன் வெகுஜனப் பத்திரிகைகளும் மாத நாவல்களும் இருந்தன. நாளிதழ்களை அச்சடிக்கும் ‘நியூஸ் பிரின்ட்’ காகிதத்தில்தான் பெரும்பாலும் இந்த மாத நாவல்கள் அச்சிடப்படும். வார இதழ்கள் - தினசரிகளை நடத்தியவர்கள் மாத நாவல்களை வெளியிட்டனர். ராணியின் ‘ராணிமுத்து’, குமுதத்தின் ‘மாலைமதி’, சாவியின் ‘மோனா’ போன்றவை அவற்றில் சில. இவை தவிர குங்குமச்சிமிழ், சுஜாதா, மேகலா, ‘மணியன்’ மாத இதழ், கதைக்கதிர், மெட்டி உள்ளிட்ட ஏராளமான மாத நாவல்கள் வெளியாகின.
1970களின் இறுதியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த மாத நாவல் உலகில், பதிப்பாளர் ஜி.அசோகனின் வரவு பெரும் பாய்ச்சலை நிகழ்த்தியது. மேற்கத்திய பாணியில் சட்டைப் பைக்குள் வைத்துக்கொள்ளும் அளவுக்குச் சிறிய அளவில் ‘பாக்கெட் நாவல்’ என்னும் புது உத்தியில் அவர் நாவல்களை வெளியிட்டார். பிறகு க்ரைம் நாவல், எ நாவல் டைம், குடும்ப நாவல் என வெவ்வேறு தலைப்புகளில் மாத நாவல்களை அறிமுகப்படுத்தினார். அதன் பிறகு நாவல் எழுத்தாளர்கள் சிலரும் மாத நாவல்களைத் தொடங்கினர் (உங்கள் ஜூனியர், சூப்பர் நாவல்). மாத நாவல்களின் வெற்றியைத் தொடர்ந்து பல்சுவை நாவல், லேடீஸ் நாவல், டெவில், ஏ ஒன் நாவல், கோஸ்ட், க்ளிக் நாவல், அழகிய மங்கையர் நாவல் எனப் பல பெயர்களில் மாத நாவல்கள் வெளியாகின.
லட்சத்தைத் தொட்ட விற்பனை
வாலியும் (அது அதில் இல்லை) சுஜாதாவும் (விபரீதக் கோட்பாடு) தொடக்கத்தில் மாத நாவல்களில் எழுதி யுள்ளனர். பாலகுமாரன், ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், மகரிஷி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி, வாஸந்தி, சுபா, புஷ்பா தங்கதுரை, ஆர்னிகா நாசர், தேவிபாலா, இந்திரா சௌந்தர்ராஜன் எனப் பலரும் மாத நாவல்களில் கொடிகட்டிப் பறந்தனர். இவர்களில் பலரும் தங்களுக்கெனத் தனிப் பாணியில் எழுத அதையொட்டி தனி வாசகர் வட்டமும் அமைந்தது. க்ரைம் கதை என்றாலே ராஜேஷ்குமார், பாலகுமாரனுக்குக் குடும்பமும் வாழ்க்கைத் தத்துவமும், இந்திரா சௌந்தர்ராஜனுக்கு அமானுஷ்யமும் மர்மமும், சிவசங்கரியின் பலம் சமூகப் பிரச்சினைகள். இப்படி ஆளுக்கொரு பாதையில் எழுதியதால் அனைத்தையுமே வாசகர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.
துப்பறியும் கதைகளில் ஒவ்வொரு எழுத்தாளரும் தங்களுக்கெனப் பிரத்யேகக் கதாபாத்திரங்களை உருவாக்கினர். 1980களில் துப்பறியும் நாவல்களை வாசித்தவர்கள் மத்தியில் இந்தக் கதாபாத்திரங்கள் பிரபலம்: கணேஷ் - வசந்த் (சுஜாதா), விவேக் - விஷ்ணு - ரூபலா (ராஜேஷ்குமார்), பரத் - சுசீலா (பட்டுக்கோட்டை பிரபாகர்), நரேந்திரன் - வைஜயந்தி (சுபா), ராஜா - ஜென்னி (ராஜேந்திரகுமார்), பிரசன்னா - லதா (தேவிபாலா)... இவர்கள்தான் கதையை நகர்த்திச் செல்லும் முதன்மைக் கதாபாத்திரங்களாக இருந்தனர்.
அப்போது மாத நாவல்கள் லட்சக்கணக்கில் விற்றன. குடும்ப நாவல்களின் விற்பனை அதிகரித்தபோது பெண்கள் பலர் எழுதவந்தனர். ரமணிசந்திரனுக்கு அதில் முக்கிய இடம் உண்டு. ‘அழகிய மங்கையர் நாவல்’ என்றாலே ரமணிசந்திரன்தான் என்கிற நிலை உருவானது. பிறகு காஞ்சனா ஜெயதிலகர், ஆர்.மணிமலா, சுமதி, வி.உஷா, வித்யா சுப்பிரமணியம் எனப் பலர் மாத நாவல்களில் எழுதினர். இணையப் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிய பிறகு நாளிதழ்கள், வார இதழ்களை வாசிப்போர் எண்ணிக்கை குறைந்ததைப் போலவே மாத இதழ்களுக்கும் வரவேற்பு குறைந்துவருகிறது. மாத நாவல்களின் இடத்தைச் செயலிகளும் இணையதளங்களும் பிடித்துக்கொண்டன.