அதிகரிக்கும் டிஜிட்டல் வாசிப்பு!

அதிகரிக்கும் டிஜிட்டல் வாசிப்பு!
Updated on
1 min read

வாசிப்புப் பழக்கம் என்பது காலத்துக்கு ஏற்ப மாறிவந்திருக்கிறது. ஓலைச்சுவடியிலிருந்து காகிதம், கணினி, திறன்பேசி, கையடக்கக் கணினி (டேப்லட்) என மாறியிருக்கிறது. அந்த வகையில் தற்போது மின் நூல்களையும் மின்படிகளையும் வாசிக்கும் போக்கு அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் மின்நூல்களின் சந்தை மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மின்நூல் சந்தையில் புழங்கும் பயனர்களின் எண்ணிக்கை தற்போது 6.8%. இந்த எண்ணிக்கை அடுத்த நான்கு ஆண்டுகளில் 9.1%ஆக உயரும் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதாவது, 2027இல் மின்நூல்களைப் படிப்போர் எண்ணிக்கை 13.33 கோடியாக இருக்கும் என்கிறது அந்தப் புள்ளிவிவரம்.

இது இந்திய நிலவரம் என்றாலும், தமிழ்நாட்டிலும் இதையொட்டியே மின்சந்தையின் வளர்ச்சி இருக்கும் என்று நம்பலாம். இன்று ஏராளமான எழுத்தாளர்களின் படைப்புகள், மின்சந்தைகளில் கிடைக்கின்றன. அச்சு வடிவில் படைப்புகளை வெளியிட்டாலும், மின்நூல்களாகவும் அவற்றைப் பதிவேற்றுகிறார்கள். இதற்கு இந்தியாவில் அறிமுகமான ‘கிண்டில்’ வழியமைத்துக் கொடுத்தது.

அதிநவீன வளர்ச்சியை அறிவுசார் உலகம் எப்போதும் பயன்படுத்தியே வந்திருக்கிறது. இன்று வளர்ந்துவரும் டிஜிட்டல் வாசிப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது. அதன் காரணமாகவே மின்நூல்களும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கின்றன. அடுத்தகட்டமாக நூல்களைப் படிப்பதற்கென்றே பிரத்யேகச் செயலிகளும் வரத் தொடங்கிவிட்டன. அதன் வழியாகவும் வாசிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. எந்த ஒரு வாசிப்பு வடிவத்துக்கும் வரவேற்பு இல்லாவிடில் தேங்கிவிடும். ஆனால், மின்நூல்கள், மின் வெளியீடுகள் தொடர்ச்சியாக வந்துகொண்டிருக்கும் நிலையில், இவை அனைத்துமே டிஜிட்டல் வாசிப்பின் வளர்ச்சியை எடுத்துக்காட்டுகின்றன.

அச்சு நூல்களைத் தேடிப் போய் வாங்காதவர்களைக்கூட, மின்நூல்களும் நூல் சார்ந்த மின்படிகளும் திறன்பேசி, கையடக்கக் கணினி வழியாகத் தேடிவருகின்றன. இந்த வழியாக வரும் வாசிப்பின் ருசியை, அவர்கள் முழுவதுமாக உணரும்போது அவர்களே மின்நூல்களையோ அச்சு நூல்களையோ தேடிப் போய் வாங்கும் நிலையும் இனி வரலாம்.

டிஜிட்டல் வாசிப்பின் அடுத்தகட்டமாக பாட்காஸ்ட்களும் அந்த இடத்தைப் பிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. செவி வழி வாசிப்பாக இதைக் கருதலாம். இதுவும் டிஜிட்டல் சட்டகத்தின் நீட்சியே. என்றாலும், அச்சு நூல்களின் வாசிப்பு வழியாகக் கிடைக்கும் உணர்வையும் மனநிறைவையும் டிஜிட்டல் வாசிப்புகள் கொடுக்குமா எனும் கேள்விக்குத்தான் விடை இல்லை.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in