

அடர்ந்த இருளின் பின்னணியில் பாதி முகம் மறைந்திருக்கும் உளவுப் பிரிவுத் தலைவருடன் இரும்புக்கை மாயாவி உரையாடும் காட்சிகளைக் கவனித்திருக்கிறீர்களா? ஒரு சுவாரசிய மர்மம் அவற்றில் பொதிந்திருக்கும். கண்ணுக்குப் புலப்படாத நாயகனாக இரும்புக்கை மாயாவி நிகழ்த்தும் சாகசங்களை தர்க்கங்களைத் தூர வைத்துவிட்டு ரசிப்போம்.
பால்ய கால வாசிப்பு: காமிக்ஸ் புத்தகங்களில் கிடைக்கும் பரவலான வாசிப்புச் சுவை அலாதியானது. தமிழில் ‘லயன் - முத்து’ காமிக்ஸ், ‘ராணி காமிக்ஸ்’ என நிறைய காமிக்ஸ் நிறுவனங்கள் வெளிநாட்டு நாயகர்களைத் தமிழ் பேசவைத்து நம் பால்ய காலக் கோடை விடுமுறைகளைக் கொண்டாட்டமாக மாற்றியிருக்கின்றன. நூற்றுக்கும் மேற்பட்ட காமிக்ஸ் இதழ்கள் தமிழில் வெளியாகியிருக்கின்றன. ‘இந்திரஜால் காமிக்’ஸில் இந்திய நாயகர்களும், ‘பொன்னி காமிக்ஸ்’, ‘வாசு காமிக்ஸ்’ போன்றவற்றில் தமிழ் நாயகர்களும் தோன்றி வாசகர்களை வசீகரித்தி ருக்கிறார்கள். இவற்றில் இந்திரஜால் காமிக்ஸ் 600 இதழ்களைத் தாண்டிவிட்டது. முத்து காமிக்ஸ் 500 இதழ்களைக் கடந்துவிட்டது. லயன் 500ஐ நெருங்கி விட்டது. ‘லயன் - முத்து’ காமிக்ஸ் நிறுவனம் இன்றைக்கும் வெற்றிகரமாக இயங்கிவருகிறது. ஒவ்வொரு புத்தகக் காட்சியிலும் இந்நிறுவனத்தின் அரங்கில் கணிசமான கூட்டத்தைக் காண முடியும்.
முதல் தமிழ் காமிக்ஸ்: “1960களில் தமிழ் காமிக்ஸ் புத்தகங்கள் பரவலான கவனத்தைப் பெற்றன என்றாலும் 1936இல் ‘சுதேசமித்திரன்’ இதழிலேயே ஒரு பக்க காமிக்ஸ்கள் வெளியாகியிருக்கின்றன. எனினும், குறைந்தபட்சம் 30 பக்கங்களுக்கு நீளும் படக்கதைகளே காமிக்ஸ்கள் என வரையறுக்கப் படுகின்றன. அந்த வகையில் 1946இல் புஜ்ஜாய் வெளியிட்ட 32 பக்க காமிக்ஸ் புத்தகம் தமிழின் முதல் காமிக்ஸ் எனலாம். இது தெலுங்கிலும் வெளியானது” என்கிறார் தமிழ் காமிக்ஸ் ஆர்வலர் கிங் விஸ்வா.
பொதுவாகவே காமிக்ஸ் புத்தகங்கள் வெளிநாட்டுக் கலாச்சாரங்கள், வரலாற்றுச் சம்பவங்கள், போர்கள் போன்றவை குறித்த மேலோட்டமான அறிமுகத்தைத் தருபவை. அமெரிக்க உள்நாட்டுப் போர், கெளபாய் சாகசங்கள் போன்றவற்றின் பின்னணியில் உருவான பிரபலமான காமிக்ஸ்கள் இத்தாலியில் தயாரானவை. குறிப்பாக இத்தாலியத் தயாரிப்பான டெக்ஸ் வில்லர் காமிக்ஸின் 75ஆவது ஆண்டு இது. கேப்டன் டைகர் முதல் வெயின் ஷெல்டன்வரை பலர் போர்களின் பின்னணியில் உருவாக்கப்பட்ட நாயகர்கள். ஆங்கில வழியில் தமிழுக்குக் கிடைக்கும் பல காமிக்ஸ்கள் நம் வாழ்க்கைச் சூழலுக்குப் பொருத்தமான வார்த்தைகளுடன் உறுத்தாத மொழிபெயர்ப்பில் உருவானவை.
இலகுவான மொழிநடை கொண்ட காமிக்ஸ்கள் ஆரம்ப கால வாசிப்புக்கு உகந்தவை. ஓவிய ஆர்வம் கொண்டவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டியவை இவை. சிறுவர்களுக்கானவை என்பதைத் தாண்டி பாலியல் குற்றங்கள், உளவியல் சிக்கல்களின் அடிப்படையிலான சாகசக் கதைகளும் உண்டு. அவை பெரியவர்களுக்கானவை. எல்லாவற்றையும் கடந்து சட்டகத்துக்குள் உயிர்ப்புடன் இயங்கும் காட்சிகளை ரசிக்க வயது ஒருபோதும் தடையாக இருக்காது!