

திறன்பேசியின் அளவில் இருக்கும் வாசிப்புச் சாதனமே அமேசான் கிண்டில். இதன் விலை மிக அதிகம் இல்லை என்றாலும், கிண்டிலை வாங்குவதைவிட கிண்டில் செயலியைத் திறன்பேசியில் தரவிறக்கம் செய்வதே புத்திசாலித்தனம். இதில் புத்தகங்களை டிஜிட்டல் வடிவில் வாங்கவும் முடியும். அதில் இலவசமாகக் கிடைக்கும் புத்தகங்களை வாசிக்கவும் முடியும்.
கிண்டிலைத் திறன்பேசியில் நிறுவி, கணக்கைத் தொடங்கி, அதனுள் நுழைந்தால் உலகில் உள்ள அனைத்து மொழிகளின் பெரும்பாலான புத்தகங்களும் நம் விரல்களின் தேர்வுக்காகக் காத்திருக்கின்றன. கிண்டிலில் ஆங்கில அகராதியும் விக்கி பீடியாவும் உண்டு. வாசிக்கும்போது புரியாத சொல்லை அழுத்தித் தொட்டால் போதும், அதன் பொருள் உடனடியாகத் திரையில் தோன்றும். ஒருவேளை அந்தச் சொல் ஊரின் பெயராகவோ வரலாற்று நிகழ்வாகவோ இருந்தால் அவற்றின் விவரத்தை அகராதிக்குப் பதில் விக்கி பீடியா தரும். இதனால் வாசிப்பு எளிதாவதோடு ஆங்கில மொழிப் புலமையும் மேம்படும்.
வேண்டிய புத்தகத்தின் பெயரைப் பதிவிட்டுத் தேடச் சொன்னால், அடுத்த நொடியில் திறன்பேசித் திரையில் அந்தப் புத்தகம் விரியும். எந்தப் புத்தகத்தைப் படிப்பது எனத் தெரியவில்லையா? அதற்கும் மெனக்கெடத் தேவையில்லை. புத்தகங்கள் மொழிவாரியாகவும் வகை வகையாகவும் எழுத்தாளர்வாரியாகவும் சீராக அட்டவணை இடப்பட்டிருக்கின்றன. வேண்டிய மொழியைத் தேர்வுசெய்தால், அந்த மொழியில் குழந்தைகள் புத்தகம், சாகசப் புனைவுகள், காதல் புனைவுகள், குடும்பப் புனைவுகள், புனைவற்றவை, பழங்கால இலக்கியங்கள் என எதை வேண்டுமானாலும் தேர்வு செய்யலாம்; அல்லது அதிகம் வாசிக்கப்பட்டதையோ வாங்கப்பட்டதையோ தேர்வுசெய்தும் படிக்கலாம். வாசித்த புத்தகம் உங்களுக்குப் பிடித்திருந்தால் அதற்கான மதிப்பீட்டையும் வழங்கலாம்.