பழைய புத்தகக் கடைகள்

பழைய புத்தகக் கடைகள்
Updated on
2 min read

அச்சில் இல்லாத, பழங்கால அரிய புத்தகங்களைக்கூட வாங்க முடியும் என்பதால்தான் பழைய புத்தகக் கடைகளை ‘பொக்கிஷக் கடைகள்’ என்று அழைக்கிறோம். பழைய புத்தகக் கடைகளில் புத்தகங்களை வாங்கிப் படித்து, ஆளுமைகளாக உருவானவர்கள் பலர்.

38 ஆண்டுகளுக்கு முன்பு சென்னையின் அடையாளங்களில் ஒன்றாகவும் சென்னைக்கு வருகிறவர்கள் அவசியம் செல்லும் இடங்களில் ஒன்றாகவும் ‘மூர் மார்க்கெட் பழைய புத்தகக் கடைகள்’ திகழ்ந்தன. 1985இல் ஏற்பட்ட தீவிபத்தில், இந்த அறிவுச் சுரங்கம் அழிந்துபோனது. அதற்குப் பிறகு பழைய புத்தகக் கடைகள் பழைய புகழையும் செல்வாக்கையும் திரும்பப் பெறவே இல்லை. ஆனால், இன்றும் மூர் மார்க்கெட்டில் பழைய புத்தகக் கடைகள் குறைவான எண்ணிக்கையில் இயங்கிக்கொண்டுதான் இருக்கின்றன.

மூர் மார்க்கெட்டுக்கு அடுத்து அண்ணா சாலையில் பழைய புத்தகக் கடைகள் இருந்தன. நடைபாதைகளில் கடைகள் வைக்க அனுமதிக்காததால் பல பழைய புத்தகக் கடைகள் காணாமல் போய்விட்டன.

லஸ் கார்னரில் பழைய புத்தகக் கடை வைத்திருந்த ‘ஆழ்வார்’ மிகவும் புகழ்பெற்றவர். தற்போது அவரின் வாரிசுகள் கடையை நடத்திவருகிறார்கள்.

தற்போது பழைய புத்தகக் கடைகளில் பெரும்பாலும் கல்வி நூல்கள், தேர்வு நூல்கள், ஆங்கில நூல்கள் போன்றவையே நிறைந்துள்ளன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு பழைய புத்தகக் கடைகளை நடத்துபவர்கள், புத்தகங்கள் குறித்து ஆழ்ந்த அறிவைக் கொண்டிருந்தார்கள். ஒருவர் அரிய நூலைத் தேடிவருகிறார் என்றால், அதன் அருமை புரிந்து அதைத் தேடிக் கொடுப்பார்கள். தங்களிடம் இல்லாவிட்டாலும் அதை எங்காவது வாங்கிக் கொடுப்பார்கள்.

ஒரு காலத்தில் சென்னை புத்தகக் காட்சி நடைபெறும்போது, வாயிலில் இருக்கும் பழைய புத்தகக் கடைகளில் கூட்டம் அலைமோதும். இப்போது கடைகளும் குறைந்துவிட்டன, கூட்டமும் குறைந்துவிட்டது.

பழைய புத்தகக் கடைகள் இன்று

பிற தொழில்களைப் போன்று பழைய புத்தகக் கடைக்காரர்களும் இணையத்திலும் சமூக வலைதளங்களிலும் கடைவிரித்துவிட்டனர். சில ஆண்டுகளுக்கு முன்பு அமேசான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் பழைய புத்தகங்களின் விற்பனையை ஆரம்பித்துவிட்டன. usedbooksfactory.com, bookflow.in போன்ற இணையதளங்களும் பழைய புத்தகங்களை விற்பனை செய்துவருகின்றன.

‘அரிதான புத்தகங்கள் விற்பனை, புத்தக விரும்பிகள், Old books sales, India rare and used books, Rare books of south India, Book Lovers போன்ற பெயர்களில் பழைய புத்தகக் கடைகள் ஃபேஸ்புக்கில் இயங்கிவருகின்றன. இவற்றில் பழைய புத்தகங்களை வாங்கலாம், நம்மிடம் இருக்கும் புத்தகங்களை விற்பனையும் செய்யலாம்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in