

உலகம் முழுவதும் இசைத் தமிழை ஆதாரமாகக் கொண்டு தங்களது கலையின் செழுமையை மக்களிடம் நிகழ்த்திய ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட கலைஞர்களின் பெயர்களைத் தாங்கிய புத்தகம் ஓர் ஆவணமாக அண்மையில் வெளிவந்திருக்கிறது. தஞ்சை பெரியகோயிலுக்குத் திருப்பதியம் செய்தவர்களின் பட்டியல், ஆபிரகாம் பண்டிதரின் ‘கருணாம்ருத சாகரம்’ திரட்டின் வழியாக அறியப்படும் இசைத் தமிழ் அறிஞர்கள், தஞ்சாவூர் இசை அறிஞர் பி.எம்.சுந்தரம் நூல்களின்வழி கண்டறிந்த நாகசுரம், தவில், நட்டுவனார்களின் பட்டியலும் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது சிறப்பு. இசைத் துறையில் அரிய, பெரிய சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் பிரபலங்களை மட்டுமல்லாமல் கிராமத்துப் பின்னணியில் கூத்துக்கட்டுவதில் புகழ்பெற்ற கலைஞர், கதாகாலட்சேபக் கலைஞர், வில்லுப்பாட்டுக் கலைஞர், நாட்டார் கலைகளில் பயன்படுத்தப்படும் வாத்தியங்களை வாசிக்கும் கலைஞர்கள் எனப் புகழ்வெளிச்சம் படாத கலைஞர்களையும் கவனப்படுத்தும் வகையில் வெளிவந்திருக்கும் புத்தகம்தான் ‘இசைத் தமிழ்க் கலைஞர்கள்’.
‘இசைத் தமிழ்க் கலைஞர்கள்’ என்னும் நோக்கீட்டு நூலைத் தொகுத்திருக்கும் முனைவர் மு.இளங்கோவன், தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் நான்காம் தொகுதியை இசை மேதை வீ.ப.கா.சுந்தரம் உருவாக்கியபோது அவருக்கு உதவியாளராக இருந்த அனுபவத்தைப் பெற்றவர்.