

தமிழ்நாட்டின் பெருமிதங்களில் ஒன்று, சென்னை தரமணியில் அமைந்துள்ள ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம். ரோஜா முத்தையா என்கிற தனிநபரின் சேகரிப்பில் இருந்த தமிழ் அச்சுப் பண்பாட்டின் பொக்கிஷம், இன்று ஒட்டுமொத்தத் தமிழர்களின் சொத்தாக இந்நூலகத்தில் பாதுகாக்கப்படுகிறது. தெற்காசியாவின் முன்மாதிரி நூலகங்களில் ஒன்றாகவும் இது கருதப்படுகிறது. உலகப் புத்தகம் மற்றும் பதிப்புரிமை நாளை முன்னிட்டு இந்நூலகத்தின் இயக்குநர் க.சுந்தருடன் உரையாடியதிலிருந்து:
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தைப் போன்ற ஓர் ஆய்வு நூலகத்தின் தேவை என்ன; பொது நூலகத் துறை/ இயக்கத்துக்கு இது எப்படிப் பங்களிக்கிறது?
நூலகங்களுக்கான முன்மாதிரியாக அங்கீகரிக்கப்பட்ட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம், தமிழ்ப் பண்பாடு சார்ந்த பல்வேறு செயல் பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. தொடக்கத்தில், அச்சு சார்ந்த ஆவணங்களை மட்டுமே பாதுகாத்துவந்த நூலகம் தற்போது ஒலி, காணொளி சார்ந்த ஆவணங்களையும் பாதுகாத்துவருகிறது. நூலகமாக மக்களுக்குச் சேவையை அளிக்கும் அதேநேரத்தில் ஆவணக்காப்பகமாகவும் செயல்படுகிறது. மக்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் நூலகச் சேவையை வழங்குதல், ஆவணங்களைப் பேணிப் பாதுகாத்தல், ஆய்வரங்குகள் - கருத்தரங்குகள் நடத்துதல் என முழுமையான செயல்பாடுகளை நூலகம் தொடர்ந்து நடத்திவருகிறது.
தமிழ்நாடு பொது நூலகங்களுக்காக ஒருங்கிணைந்த நூற்பட்டியலை அண்ணா நூற்றாண்டு நூலகத்துடன் இணைந்து ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் உருவாக்கியது. அதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட மைய நூலகங்களில் காணப்படும் நூல்களின் ஒருங்கிணைந்த பட்டியலைக் காண வழிவகை செய்யப்பட்டுள்ளது. எளிதாக இணையத்தின்வழி தேவையான நூல்கள் நமக்கு அருகே எங்கே கிடைக்கும் என்பதை இதன் மூலம் அறியலாம் [https://tamilnadupubliclibraries.org/].
1994இல் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் தொடங்கப்பட்டது. நூலகம் தொடங்கப்பட்டதன் நோக்கம் இந்த 30 ஆண்டுகளில் முழுமையாக எட்டப்பட்டுவிட்டதாக நினைக்கிறீர்களா?
நூலகத்தின் அடிப்படை நோக்கம் என்பது ஆய்வாளர்களும் மக்களும் எளிதாக நூலகச் சேவையைப் பெறுவதற்கு வழிவகை செய்வதாகும். இதன் வழிமுறைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே வருகின்றன. எங்கள் நூலகத் தில் உள்ள அனைத்து நூல்களின் பட்டியலை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம். நூல்களை வேண்டுவோர் எங்கிருந்து வேண்டுமென்றாலும் பார்க்க முடியும். பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அச்சுப் பிரதிகளை மின்னணுவாக்கம் செய்துள்ளோம். நூலகத்தில் எங்களது கணினி மூலம் அவற்றைப் பயன்படுத்திக்கொள்ள முடியும். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்கள் அனைத்தையும் பயன்படுத்தி, இன்னும் எளிதாக ஆய்வாளர்களுக்கும் மக்களுக்கும் எத்தகைய முறையில் நூலகச் சேவையை வழங்க முடியும் என்பதைக் கவனத்தில்கொண்டு செயல்பட்டுவருகிறோம்.
ஒரு லட்சம் ஆவணங்களுடன் தொடங்கப்பட்ட நூலகம் தற்போது ஐந்து லட்சத்துக்கு மேற்பட்ட அச்சு, ஒலி, ஒளி ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாத்துவருகிறது. தொடர்ந்து நூல்களைச் சேகரித்துக் கொண்டுள்ளது. இங்கே ஆவணப் பாதுகாப்பு மையம், சிந்துவெளி ஆய்வு மையம், பொதுவியல் ஆய்வு மையம், அருங்காட்சியகம் ஆகியவற்றின் மூலம் பல்வேறு செயல்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவற்றால் நூலகத்தின் நோக்கம் முழுமை அடைந்துவிட்டதாகச் சொல்ல முடியாது; அதை நோக்கிய பயணத்தில் முன்னோக்கி நகர்ந்துவருவதாக உணர்கிறோம்.
‘ஒரு பண்பாட்டின் பயணம்’ உள்ளிட்ட முக்கி யத்துவம் வாய்ந்த பதிப்புப் பணிகளை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் மேற்கொண்டு இருக்கிறது. நூலகத்தின் எதிர்காலத் திட்டங்கள், செயல்பாடுகள் பற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இங்கு இரண்டு முக்கியமான ஆய்வு மையங்கள் செயல்பட்டுவருகின்றன. ஒன்று, பண்டைய கால சமூகப் பண்பாட்டு வரலாற்றை ஆராயும் சிந்துவெளி ஆய்வு மையம். மற்றொன்று, நவீன கால சமூக வரலாற்றை ஆராயும் பொதுவியல் ஆய்வு மையம். சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகராகச் செயல்பட்டுவரும் ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய நூல்தான் ‘ஒரு பண்பாட்டின் பயணம்’. இந்நூல் சிந்துவெளி வரலாறும் வரலாற்றுக்கு முற்பட்ட தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாறும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்கிறது. இது தமிழ்ச் சமூக வரலாற்றை எடுத்துரைக்கும் முக்கியமான நூல். தற்போதைய தமிழ்நாடு அரசு பல தொல்லியல் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டுவருகிறது. அதன்வழி பல புதிய தொல்லியல் தரவுகள் வரலாற்றின் திசைவழிப் போக்கையே மாற்றக்கூடிய அளவுக்குக் கிடைத்துவருகின்றன.
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுடன் இணைந்து ஏற்கெனவே சில பணிகளை மேற்கொண்டு வருகிறோம். காப்புரிமை அற்ற அரிய நூல்களை மின்னணுவாக்கம் செய்து Internet Archive தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளோம் [https://archive.org/details/RojaMuthiah]. தற்போது தமிழ்நாடு அரசுடன் இணைந்து தேர்ந்த ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வுமுறையியல் குறித்த பயிற்சி வகுப்புகளை நூலகத்தில் நடத்திவருகிறோம். இத்துடன் குடிமைப்பணித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு நூலகத்தில் ஒரு தனி பகுதியை உருவாக்கும் திட்டமும் உள்ளது.
ஆய்வாளர்களைத் தாண்டி, மக்கள் இந்த நூலகத்தை எப்படிப் பயன்படுத்த முடியும்; எந் தெந்த வழிகளில் எல்லாம் பங்களிக்க முடியும்?
ஆராய்ச்சி நூலகம் என்கிற பெயரைத் தாங்கி நின்றாலும் ஓர் அரசுக் கிளை நூலகத்தை மக்கள் பயன்படுத்துவது போன்று தரமணி, அடையாறு, திருவான்மியூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.
மற்றொருபுறம், நூலகத்தின் செயல்பாடுகள் அனைத்தும் மக்கள் நேரடியாகப் பங்குகொள்ளும் வகையில் அமைக்கப்பெற்றவை. ஒளிப்படக் கண்காட்சி, நடுகல் கண்காட்சி, அச்சுநூல் கண்காட்சி எனத் தொடர்ந்து பல கண்காட்சிகளை நடத்துகிறோம். நிகழ்த்துக்கலை, இலக்கியம் எனக் கலைசார்ந்த நிகழ்வுகளையும் முன்னெடுத்து வருகிறோம். கண்காட்சிகளைப் பள்ளிக் குழந்தைகளுக்கும் மக்களுக்கும் காட்சிப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளோம்.
நூலகத்தில் செயல்படும் முக்கியமான ஒன்று நூல்களைத் தத்தெடுத்தல் என்னும் செயல்பாடு. அதாவது, ஒரு நூலின் பழுதடைந்த பகுதிகளைச் சரிசெய்து ஜப்பானிலிருந்து வரவழைக்கப்பட்ட உயர்தர தாள்களைக் கொண்டு வலுவூட்டி, அதன் ஆயுளை நீட்டிக்கச் செய்கிறோம். இத்துடன் சர்வதேசத் தரத்தில் மின்னணுவாக்கம் செய்கிறோம். இவற்றை மேற்கொள்ள ஒரு நூலுக்கு ரூ.10,000 செலவாகிறது. இந்த வகையில் மக்கள் தங்களுக்குப் பிடித்த நூலைத் தத்தெடுத்துக் கொள்கின்றனர். நூலகத்தின் இணையதளப் பக்கத்தில் [http://rmrl.in/] உள்ள நூற்பட்டியலில் அந்த நூலுடன் தத்தெடுத்தவர் பெயரும் இடம்பெறும்.
சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக நீங்கள் இருக்கிறீர்கள். தமிழ்நாடு பொது நூலகத் துறையில் நடைபெற்றுவரும் மேம்பாடுகள், மாற்றங்கள் பற்றிப் பகிர்ந்துகொள்ள இயலுமா?
தற்போதைய தமிழ்நாடு அரசு, நூலகங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அறிவுக் களஞ்சியங்களைப் பேணிக் காக்கும் செயல்பாட்டை மேற்கொண்டுவருகிறது. நூலகச் செயல்பாடுகளுக்குப் பெரிய அளவில் நிதி ஒதுக்கி யுள்ளது. அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் போலவே மதுரையில் கலைஞர் நூலகத்தை உருவாக்கிவருகிறது. மாவட்டங்கள்தோறும் புத்தகக் காட்சியை நடத்திவருகிறது. சென்னையில் நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக் காட்சி முக்கியமானது. அதன்வழி உலக அளவில் தமிழ் நூல்களுடனான உறவு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
வளர்ந்துவரும் தொழில்நுட்பத்தை நூலகத் துறைக்குள் புகுத்தி அனைவரும் எளிதாக நூலகச் சேவையைப் பெறுவதற்கு வழிவகை செய்யப் பட்டுள்ளது. பன்னாட்டு அளவில் முக்கியத்துவம் வாய்ந்த இதழ்கள் உள்ளிட்டவற்றை எளிதாகப் பயன்படுத்தவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அரசு மைய நூலகங்கள், கிளை நூலகங்கள் முதலியவற்றில் கிடைக்கப்பெறும் அச்சு, இணைய இதழ்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, நூலகச் சட்டத்தில் திருத்தங்களை அரசு முன்னெடுத்துவருகிறது. அதில் முன்னெடுக்கப்பட்டுள்ள அம்சங்களின் விளைவுகள் உடனடியாகத் தெரியாது. ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒரு பெரும் மாற்றத்தை உணரலாம்!