

கடந்த காலம் தந்த கொடை, இன்று நாம் எதனுடன் வாழ்கிறோம், எதிர்காலத் தலைமுறைக்கு எதை நாம் கையளிக்கிறோம் ஆகிய அனைத்தும் சேர்ந்ததே நமது மரபு. நமது வாழ்க்கைக்கும் நாம் அடையும் உத்வேகத்துக்கும் ஆதாரமாகத் திகழும் பண்பாட்டு, இயற்கை மரபுச் சின்னங்கள் எவையும் பதிலீடு செய்ய முடியாதவை.
உலகெங்கும் மனிதகுலத்துக்குத் தலைசிறந்த மதிப்பைக் கொண்டுவந்து சேர்க்கும் பண்பாட்டு, இயற்கை மரபுச் சின்னங்களை அடையாளம் காணுதல், பேணுதல், பாதுகாப்பதை ஊக்குவிக்கிறோம். இதற்கான சர்வதேச உடன்பாடு 1972இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
உலக மரபுச் சின்னங்கள் எனும் கருத்தாக்கத்தைத் தனிச்சிறப்புமிக்கதாக ஆக்குவது அதன் உலகளாவிய தன்மைதான். உலக மரபுத் தலங்கள்-சின்னங்கள் உலகின் அனைத்து மக்களுக்கும் உரியவை, எந்த நிலப்பகுதியில் அவை அமைந்திருக்கின்றன என்பது ஒரு பொருட்டில்லை.
- உலக மரபுப் பேரவை, யுனெஸ்கோ