

உலகிலேயே அரிய உயிரினங்கள் வசிக்கும் இடம் என்றால் அது கலாபகஸ் தீவுகள்தாம்! ஆயிரத்துக்கும் மேற்பட்ட யுனெஸ்கோ மரபுத் தலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது இது. பசிபிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் கலாபகஸ் தீவுகள் ஈக்வடார் நாட்டின் ஒரு மாகாணம்.
கடலுக்கு அடியில் உள்ள எரிமலைகளின் வெடிப்பால் சுமார் 50 லட்சம் முதல் ஒரு கோடி ஆண்டுகளுக்குள் உருவானவை இந்தத் தீவுகள். 13 பெரிய தீவுகள், 6 சிறிய தீவுகள், 107 தீவுத் திட்டுகள் இங்கே காணப்படுகின்றன. இளஞ்சூடாகவும் குளிர்ச்சியாகவும் கடல்நீரோட்டங்கள் தீவுகளைச் சுற்றியிருப்பதால், உயிரினங்கள் செழித்து வாழ்வதற்கான சூழல் காணப்படுகிறது. உயிர்க்கோளமாகத் திகழும் கலாபகஸ் தீவுக் கூட்டங்களில் ஒரு தீவில் இருக்கும் உயிரினங்களைப் போல இன்னொரு தீவில் இருப்பதில்லை.
மனிதர்கள் வருகை: ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த தாமஸ் டி பெர்லங்கா, 1535இல் பனாமாவிலிருந்து பெரு செல்லும் வழியில் கலாபகஸ் தீவுக்கு சென்றார். ஸ்பெயின் மன்னருக்குத் தீவு குறித்துக் கடிதம் எழுதினார். ஸ்பெயினி லிருந்து மாலுமிகள் வர ஆரம்பித்தனர்.
1832இல் ஸ்பெயினிட மிருந்து ஈக்வடாருக்கு இந்தத் தீவுகள் வழங்கப்பட்டன. அதன் பிறகு தண்டனை விதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் இடமானது. 1960க்குப் பிறகு மீன்பிடித் தொழில் காரணமாக மக்கள் இங்கே குடியேற ஆரம்பித்தனர். தற்போது சுமார் 30 ஆயிரம் பேர் தீவுகளில் வசிக்கின்றனர்.
டார்வின் ஆராய்ச்சி: விஞ்ஞானி சார்லஸ் டார்வின் 1835இல் எச்.எம்.எஸ். பீகிள் பயணத்தின்போது கலாபகஸ் தீவில் ஐந்து வாரங்கள் தங்கினார். பரிணாமக் கோட்பாடு குறித்து அவர் எழுதிய ‘உயிரினங்களின் தோற்றம்’ (The Origin of the Species) என்கிற நூலில் கலாபகஸ் தீவும் இடம்பெற்றுள்ளது.
அரிய உயிரினங்கள்: கலாபகஸ் தீவுகளின் நிலப்பகுதியிலும் கடலிலும் 2,900க்கும் மேற்பட்ட உயிரினங்கள் காணப்படு கின்றன. அவற்றில் 25 சதவீத இனங்கள் இந்தத் தீவுகளில் மட்டுமே காணப்படுபவை. ஸ்பானிய மொழியில் ‘கலாபகஸ்’ என்றால் ஆமை என்று பொருள். 150 ஆண்டுகள் வரை வாழக்கூடிய ராட்சத ஆமைகள் இங்கே காணப்படுகின்றன.
இங்கு உள்ள பூபி பறவைகளின் நடனம் நம் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். நீரில் நீந்தும் பல்லிகள், சிறிய பென்குயின்கள், கூட்டமாகச் செல்லும் சிவப்பு நண்டுகள், கடல் சிங்கங்கள், கடல் உடும்புகள், சம்மட்டித் தலைச் சுறாக்கள், அம்மமணி உழுவை, சப்பாத்திக் கள்ளிகள், கறுப்பு வெள்ளை அலையாத்தி தாவரங்கள் போன்றவை இங்கே உள்ளன.
இரவு வான்: உலகின் பிற பகுதிகளிலிருந்து இரவு வானைப் பார்ப்பதைவிட, கலாபகஸ் தீவிலிருந்து பார்க்கும்போது துல்லியமாகவும் பிரமிப்பாகவும் இருக்கும். காரணம், இங்கே ஒளி மாசு இல்லை. ஒரே நேரத்தில் வட, தென் அரைக் கோளங்களின் விண்மீன்களை இங்கே ரசிக்க முடியும்.
பாதுகாக்கப்பட்ட பகுதி: 1959இல் கலாபகஸ் தீவில் உள்ள 97 சதவீத நிலப் பகுதிகள் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டன. சாண்டா குரூஸ் தீவில் உள்ள சார்லஸ் டார்வின் ஆராய்ச்சி நிலையம் இத்தீவுக் கூட்டங்களில் காணப்படும் மதிப்புமிக்க உயிரினங்களையும் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புரிந்து கொள்வதிலும் பாதுகாப்பதிலும் மிக முக்கியப் பங்காற்றிவருகிறது.