

‘மலைகளின் ராணி’யான ஊட்டிக்குப் பலரும் சுற்றுலா போயிருக்கலாம். ஆனால், மேட்டுப்பாளையத்திலிருந்து மலை ரயிலில் ஊட்டிக்குச் சென்றது உண்டா என்று கேட்டால், பலரும் ‘இல்லை’ என்றுதான் சொல்வார்கள். உண்மையில் ஊட்டி சுற்றுலாப் பயணமும் மலை ரயிலின் பயணமும் வெவ்வேறு அனுபவங்களைத் தரக்கூடியவை. யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னமான இந்த மலை ரயில் நிறுவப்பட்ட கதையும் அதன் பயணமும் சிலிர்ப்பைத் தருபவை.
பிரிட்டிஷ் இந்தியாவில் மலைப் பிரதேசங்களைத் தங்கள் வசதிக்கேற்ப ஆங்கிலேயர்கள் நவீனப்படுத்தினார்கள். குளு குளு மலைகளுக்குச் சமவெளிப் பகுதியிலிருந்து ரயில் பாதையை உருவாக்கி ரயில் விட்டுச் சாதனை புரிந்தார்கள். இந்தியாவில் உள்ள நான்கு மலை ரயில் பாதைகளில் ஒன்றுதான் ஊட்டி மலை ரயில் பாதை. சிம்லா மலை ரயில் பாதை, டார்ஜிலிங் - இமாலயன் ரயில்பாதை, மாதேரன் மலை ரயில் பாதை ஆகியவை மற்ற மூன்று பாதைகள்.
ஊட்டி மலை ரயில் என்றழைக்கப் படும் நீலகிரி மலை ரயிலின் வரலாறு நெடியது. நூற்றாண்டைக் கடந்த இந்த மலை ரயிலுக்குப் பாதை அமைக்கும் திட்டம் 1854லேயே உருவாகிவிட்டது. ஆனால், 1886இல்தான் பணிகள் தொடங்கின. இதற்காக ‘நீலகிரி ரயில்வே கம்பெனி’ என்கிற அமைப்பை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள். மிகவும் செங்குத்தான இந்த மலை ரயில்பாதை அமைக்கும் பணியில் அன்றைய மதராஸ் ராணுவ வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாகத் தகவல்கள் உண்டு.
மிகவும் சிரமப்பட்டுதான் இந்த மலை ரயில்பாதையை அவர்கள் அமைத்தார்கள். பாறைகளைக் குடைந்து, பள்ளத்தாக்கில் பாலங்களை அமைத்து, செங்குத்தான மலைப்பாதையில் பயணிக்கப் பற்சக்கரங்களைக் கொண்டு ரயில்பாதையை உருவாக்கினார்கள். தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத அந்தக் காலத்தில் 13 ஆண்டுகளில் இப்பணிகளை அவர்கள் முடித்தார்கள்.
1899இல் மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே 27 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதே ஆண்டில் ஜூன் 15 அன்று மலை ரயில் தன் பயணத்தைத் தொடங்கியது. பின்னர், 1903இல் நீலகிரி ரயில்வே கம்பெனியை பிரிட்டிஷ் அரசாங்கம் தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் குன்னூர் - உதகமண்டலம் இடையே 19 கி.மீ. நீளத்துக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டு, 1908 அக்டோபர் 15 அன்று மலை ரயில் சேவை தொடங்கப்பட்டது. அப்போது தொடங்கிய மலை ரயில் போக்குவரத்து இன்றுவரை தொடர்கிறது.
மேட்டுப்பாளையத்திலிருந்து பயணத்தைத் தொடங்கி 7349 அடி உயரத்தில் உள்ள ஊட்டிக்கு மலை ரயில்பாதை செல்கிறது. 46 கி.மீ. நீளப் பாதையின் இடையே 16 குகைகள், சிறிதும் பெரிதுமாக 250 பாலங்கள், 108 வளைவுகள் எனச் செங்குத்து மலையில் பல இக்கட்டுகளைக் கடந்து ஆங்கிலேயர்கள் சாதித்திருக்கிறார்கள். இடைப்பட்ட தொலைவில் 11 ரயில் நிலையங்களையும் அமைத்தார்கள். ஊட்டி மலை ரயில் ஆங்கிலேயர்களின் கொடை என்றாலும், பற்சக்கரப் பொறியியல் உதவியை சுவிட்சர்லாந்து பொறியாளர்களே செய்தனர்.
கல்லாற்றிலிருந்து குன்னூர் வரை ரயில் தண்டவாளத்தின் நடுவில் பற்சக்கரங்களைப் பிடித்தபடிதான் ரயில் செல்கிறது. இந்தத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் உள்ள உலகின் இரண்டாவது ரயில்பாதை இது. அதுபோல உலகிலேயே 19 கி.மீ. நீளத்துக்கு பற்சக்கரத் தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருப்பதும் இங்கு மட்டுமே. காலத்துக்கு ஏற்ப ஊட்டி மலை ரயில் பல மாறுதல்களை இன்று அடைந்துவிட்டாலும், அந்த ரயில் தரும் பயண அனுபவமும் சிலிர்ப்பும் இன்னும் மாறாமலேயே இருக்கின்றன.
இன்றைக்கு 124 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட இந்த ஊட்டி மலை ரயிலுக்குப் பெருமைச் சேர்க்கும் வகையில் 2005இல் யுனெஸ்கோவின் உலக மரபுச் சின்னம் என்கிற அங்கீகாரமும் கிடைத்தது. அதற்கு முன்பே 1999இல் டார்ஜிலிங் -இமாலயன் மலை ரயில் இந்த அங்கீகாரத்தைப் பெற்றிருந்தது. 2008இல் சிம்லா மலை ரயிலும் அந்தப் பெருமையில் இணைந்தது.