

மனிதர்களால் உருவாக்கப்பட்ட தஞ்சை பெரியகோயில், தாஜ்மகால் போன்ற கட்டிடக் கலை அற்புதங்களை நமது மரபுச் சின்னங்களாகப் போற்றப்படுவதைப் போல் இயற்கை செழுமையையும் அற்புதங்களையும் நமது மரபுப் புதையல்களாகப் போற்ற வேண்டும் என்பார் சுற்றுச்சூழல் எழுத்தாளர் சு. தியடோர் பாஸ்கரன்.
இந்தியாவின் மேற்குப் பகுதி முழுவதும் ஓர் இயற்கை அற்புதமாக விரிந்து கிடக்கிறது மேற்கு மலைத்தொடர். இது உலகில் உள்ள 36 உயிர்ப்பன்மை செழிப்பிடங்களில் (Global biodiversity hotspots) ஒன்று. அத்துடன் உயிர்ப்பன்மை மிகுந்த உலகின் 8 முதன்மைச் செழிப்பிடங்களில் ஒன்றாகவும் மேற்கு மலைத்தொடர் மதிக்கப்படுகிறது. யுனெஸ்கோ உலக இயற்கை மரபுத் தலங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
உயிர்ப்பன்மை செழிப்பிடம்: இமய மலைத்தொடரைப் போல் உயரமானது இல்லையென்றாலும், இமய மலைத்தொடரைவிடப் பழமையானது மேற்கு மலைத்தொடர். ஒரு லட்சத்து 40 ஆயிரம் சதுர கி.மீ. பரப்பு கொண்ட இந்த மலைத்தொடர், குஜராத்தின் தபதி ஆறு தொடங்கி தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டம் வரை நீண்டுள்ளது.
இதன் பெரும்பகுதி நான்கு பெரிய தென்னிந்திய மாநிலங்களில் அமைந்துள்ளது. இந்திய நிலப்பரப்பில் வெறும் 6 சதவீதத்துக்கும் குறைவான பரப்பைக் கொண்ட மேற்கு மலைத்தொடர், நாட்டின் 30 சதவீதத் தாவரங்கள், மீன்கள், ஊர்வன, பறவைகள், பாலூட்டிகளைக் கொண்டுள்ளது.
உலகிலேயே அதிகப் புலிகள், ஆசிய யானைகள் இந்தக் காடுகளிலேயே வசித்துவருகின்றன. நீலகிரி மலைப் பகுதியில் மட்டும் 10,000 யானைகள் இருப்பதாகவும், மேற்கு மலைத்தொடரின் தெற்குப் பகுதி உலகின் 10 சதவீத வேங்கைப் புலிகளின் இருப்பிடமாகவும் கருதப்படுகிறது.
ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள செந்நாய், காட்டு மாடுகள் இங்கு வசிக்கின்றன. மேற்கு மலைத்தொடருக்கே உரிய தனித்துவ உயிரினங்களான வரையாடு (தமிழ்நாட்டின் மாநில விலங்கு), சோலை மந்தி (சிங்கவால் குரங்கு) உள்ளிட்டவையும் இங்கு வாழ்கின்றன. உலக அளவில் ஆபத்தான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள 325 உயிரின வகைகள் இங்கு வாழ்ந்துவருகின்றன.
உயிர் தரும் காடு: நீலக்குறிஞ்சி போன்ற அரிய தாவர வகைகளின் தாயகமும் மேற்கு மலைத்தொடர்தான். வெப்பமண்டல பசுமைமாறாக் காடுகள், சோலைப் புல்வெளிகள் எனப் பல்வேறுபட்ட காடுகளைக் கொண்டது இம்மலைத்தொடர். மருத்துவத் தாவரங்கள், வேளாண் தானியங்களின் காட்டு உறவுத்தாவரங்கள், பழங்கள், நறுமணப் பொருள்களின் மரபு ஆதாரங்கள் இந்தக் காடுகளில் உள்ளன.
இந்தியாவின் 40 சதவீதப் பகுதிக்கு உயிரூட்டும் சிக்கலான ஆறு அமைப்புகளுக்கான நீர்ப்பிடிப்புப் பகுதியாக மேற்கு மலைத்தொடர் திகழ்கிறது. இந்தியப் பருவமழையின் போக்கில் பெரும் தாக்கம் செலுத்தக் கூடியது இதன் காடுகள். தென்மேற்குப் பருவக்காற்றின் மழை மேகங்களைத் தடுத்து தென் மாநிலங்களுக்கு மழைப்பொழிவை ஏற்படுத்துகிறது.
தென்னிந்தியாவில் வாழும் 25 கோடி மக்களுக்குத் தேவையான ஆறுகள், காட்டு ஓடைகள், வாய்க்கால்களுக்கு மேற்கு மலைத்தொடரே பிறப்பிடம். அந்த வகையில் தென்னிந்திய மண்வளம், நீர்வளத்தின் ஆதாரமாக இந்தப் பகுதி உள்ளது. சுருக்கமாகத் தென்னிந்திய மக்களின் உயிர், மேற்கு மலைத்தொடரில் உறைந்துள்ளது எனலாம்.
சுற்றிச் சுழலும் பிரச்சினைகள்: ஆனால், மேற்கு மலைத்தொடரின் பெரும் பகுதி தேயிலை, காபி, ரப்பர், எண்ணெய்ப் பனைத் தோட்டங்களுக்காக ஆங்கிலேயர் காலத்திலிருந்து அழிக்கப்பட்டுவருகிறது. வெட்டுமரத் தொழில், மரக் கடத்தல், ஓரினப் பயிர் வளர்ப்பு போன்ற காரணங்களாலும் இக்காடுகள் அழிந்துவருகின்றன.
அத்துடன் சூழலியல் சுற்றுலா, யானை வழித்தடங்களிலும் காட்டின் எல்லை களிலும் அத்துமீறிக் கட்டப்பட்டுள்ள சொகுசுத் தங்கும் விடுதிகள் போன்றவை ஆபத்தாக உள்ளன. காட்டை ஊடறுத்துச் செல்லும் சாலைகள், அணைக்கட்டுகள், கால்நடை மேய்ச்சல் போன்ற தொடர் மனிதத் தலையீடு களால் மேற்கு மலைத்தொடர் காடுகளும் உயிரினங்களும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளன.
இவற்றின் விளைவாக யானை, புலி, சிறுத்தை போன்ற காட்டுயிர் – மனித எதிர்கொள்ளல், யானை வழித் தடங்களில் மனித ஆக்கிரமிப்பு, காட்டுயிர் கடத்தல்-கள்ள வேட்டை, பழங்குடிகள் வெளியேற்றப்படுதல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் மேற்கு மலைத்தொடரை மையமிட்டுள்ளன. இவற்றுக்கு ஆக்கபூர்வமான தீர்வைக் காண்பதிலேயே தென்னிந்தியாவின் எதிர்காலம் அடங்கியுள்ளது.