மரபைப் பாதுகாப்பதற்கான நாள்

மரபைப் பாதுகாப்பதற்கான நாள்
Updated on
1 min read

உலக மரபு நாள் என்று அறியப்படும் நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச நாள் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று கொண்டாடப்படுகிறது. உலகில் உள்ள மரபுச் சின்னங்கள் குறித்தும் பண்பாட்டுத் தளத்தில் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் விழிப்புணர்வை அதிகரிப்பது இப்படி ஒரு நாள் கடைப்பிடிக்கப்படுவதன் நோக்கமாகும்.

உலகில் உள்ள பண்பாட்டு மரபுத் தலங்களைப் பாதுகாப்பதற்காக நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச மன்றம் (International Council on Monuments and Sites) என்னும் பிரத்யேக அமைப்பு 1965இல் உருவாக்கப்பட்டது. இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ளது.

இந்த அமைப்பு கல்வி, அறிவியல், பண்பாடு ஆகிய துறைகளுக்கான ஐ.நா. துணை அமைப்பான யுனெஸ்கோவுக்கு உலகப் பாரம்பரியத் தலங்கள் குறித்து ஆலோசனை வழங்குகிறது.

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 18 அன்று நினைவுச் சின்னங்கள், தலங்களுக்கான சர்வதேச நாளாகக் கடைப்பிடிக்கலாம் என்று நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான சர்வதேச மன்றம் (ICOMOS) பரிந்துரைத்தது.

1983இல் நடைபெற்ற யுனெஸ்கோவின் 22ஆவது பொது மாநாட்டில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதன் மூலம் ஏப்ரல் 18ஐ நினைவுச் சின்னங்கள் மற்றும் தலங்களுக்கான நாளாகக் கொண்டாடுவது எனச் சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதே நேரம், இது யுனெஸ்கோவால் கொண்டாடப்படும் நாள் அல்ல.

ஐகோமோஸ் அமைப்பே ஒவ்வோர் ஆண்டும் குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் இந்த நாளுக்கான நிகழ்ச்சிகளை உலக அளவில் முன்னெடுக்கிறது.

உலகில் பல வகையான மரபுச் சின்னங்களும் தலங்களும் உள்ளன. அவற்றைக் கொண்டாடுவதற்கும் நினைவுச் சின்னங்களின் வழியாகப் பண்பாட்டு மரபையும் பன்மைத்துவத்தையும் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க இந்த நாள் பயன்படுகிறது. மரபுச் சின்னங்கள், தலங்களுக்கு நேரில் சென்று பார்ப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

‘மரபு மாற்றங்கள்’ என்னும் கருப்பொருளின் அடிப்படையில் 2023ஆம் ஆண்டுக்கான உலக மரபு நாள் நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. காலநிலை மாற்றத்தின் விளைவாக மரபுச் சின்னங்களில் நிகழ்ந்துள்ள மாற்றங்களைக் கவனப்படுத்துவதற்காக இந்தக் கருப்பொருள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. பண்பாட்டு மரபின் வழியாகக் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைப் புரிந்துகொள்ளவும் இந்தக் கருப்பொருள் உதவக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in