

உலகின் மிகப் பழமையான நாகரிகங்களில் ஒன்றாகச் சிந்துவெளி நாகரிகம் கருதப்படுகிறது. இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் சிந்துவெளியின் மக்கள் பரவியிருந்ததாகப் பல்வேறு ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது.
சிந்துவெளியின் நாகரிகத் தடங்கள், கைவிடப்பட்ட நகரங்கள் இன்றைய பாகிஸ்தானில் மட்டுமல்ல; வட இந்தியாவின் பல இடங்களிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. குறிப்பாக, குஜராத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் கட்ச் பிராந்தியத்தில் உள்ள தோலவிரா (Dholavira), அகமதாபாத் அருகே உள்ள லோத்தல் (Lothal) ஆகியவை.
சிந்துவெளி நாகரிகத் தொல்லியல் தலங்களில் இந்தியாவில் அமைந்துள்ள முதன்மையான தலம் தோலவிரா. சிந்துவெளி நாகரிகத்தின் எட்டு நகரங்களில் ஐந்தாவது மிகப் பெரிய நகரமாகவும் இது விளங்குகிறது. பொ.ஆ.மு.(கி.மு) 3500 முதல் பொ.ஆ.மு. 1800 வரையிலான காலகட்டத்தில் (பிந்தைய ஹரப்பா காலகட்டத்தின் முற்பகுதி) இங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். பண்டைய ஹரப்பா நகரமான தோலவிராவை உலகப் பாரம்பரியச் சின்னமாக 2021 ஜூலை 27 அன்று யுனெஸ்கோ அறிவித்தது.
நிலநடுக்கோட்டில் அமைந்திருக்கும் தோலவிரா, தொடர்ந்து நிலநடுக்கங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இதனால், பெரும்பாலான கட்டுமானங்கள் சிதிலமடைந்துவிட்டன. எனினும், தோலவிரா நன்கு திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்ட நகரத்துக்கான கூறுகளைக் கொண்டிருப்பதைப் எஞ்சியிருக்கும் அதன் சிதிலங்களின் வழியே அறிய முடிகிறது. நன்கு பாதுகாக்கப்பட்ட தொல்லியல் நகரங்களில் ஒன்றாகவும் இது விளங்குகிறது.
1960களில் சம்புதான் ஹாத்வி என்கிற உள்ளூர்வாசி இத்தலத்தைக் கண்டறிந்தார். அதற்கு 30 ஆண்டுகளுக்குப் பிறகு 1990இல் இந்தியத் தொல்லியல் துறை இங்கு அகழாய்வைத் தொடங்கியது. இங்கு வெளிப்பட்ட ஆச்சரியமளிக்கும் நகரக் கட்டமைப்பு, அக்காலகட்டத்துச் சமூகம் எப்படி இருந்திருக்கும் என்பதற்கான அடித்தளத்தை வழங்கியது.
பண்டைய மெசபடோமியா, மேற்கு ஆசியா, சிந்து, பஞ்சாப், குஜராத்தின் பகுதிகளுக்கு இங்கிருந்து வர்த்தகம் பரவியிருந்ததற்கான தடங்களைத் தொல்லியல் ஆய்வுகள் வழி அறிய முடிகிறது.
தோலவிரா நகரத்தின் தொல்பொருள் எச்சங்களில் கோட்டைகள், நுழைவாயில்கள், நீர்த்தேக்கங்கள், சடங்கு மைதானம், குடியிருப்புப் பகுதிகள், பணிமனைப் பகுதிகள், கல்லறை வளாகம் ஆகியவை அடங்கும்.
இவை அனைத்தும் ஹரப்பா பண்பாட்டையும் அதன் பல்வேறு வெளிப்பாடுகளையும் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. வலுவான தடுப்பரண்கள் கொண்ட கோட்டையால் இந்நகரம் பாதுகாக்கப்பட்டிருந்தது. மேலும், கல் வீடுகள் நிறைந்த தோலவிரா, செங்கல் வீடுகளைக் கொண்டிருந்த பிற ஹரப்பா தலங்களிலிருந்து தனித்து நிற்கிறது.
வறட்சியான பகுதியில் அமைந்திருந்தாலும் தோலவிராவின் மக்கள் மிகச் சிறந்த நீர் மேலாண்மைக் கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். மழைக் காலத்தில் பெருக்கெடுத்து ஓடிய மான்சர் ஆற்று வெள்ளத்தை அப்படியே தங்கள் நகருக்குள் திருப்பிச் சேகரித்துப் பயன்படுத்தி உள்ளனர். நிலத்துக்குக் கீழும் நீர் சேகரிப்புக் கட்டமைப்பு பிரம்மாண்டமாக இருந்தது என ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.