

தமிழ்நாட்டின் நாட்டார் கலைகளான கரகாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், மயிலாட்டம், பறையாட்டம் போன்றவற்றைக் கோயில்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள், கடற்கரைகள், பெருவணிக வளாகங்கள், நடைபாதைகள் என நகரின் 60க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சென்னைச் சங்கமம்’ என்னும் பெயரில் நிகழ்த்துவது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடந்திராத புதுமை.
பாரம்பரியமாக நிகழ்த்தப்படும் செவ்வியல் கலைகளோடு கிராமியக் கலை வடிவங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சிகள் நகரம் முழுவதும் பரவலாக நடைபெற்றுவருவதன் காரணமாகவே இந்தியாவின் கலாச்சார நகரங்களில் ஒன்றாக யுனெஸ்கோவால் சென்னை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அங்கீகாரத்தின் வழியாக உலக அளவில் கலாச்சாரப் பெருமைமிகு நகரங்களான வியன்னா, சால்ஸ்பர்க் போன்றவற்றுடனும் இந்தியாவின் கலாச்சார நகரங்களான ஜெய்ப்பூர், வாராணசி போன்ற நகரங்களின் பட்டியலிலும் சென்னை இடம்பெறுகிறது.
மந்தைவெளி, மடிப்பாக்கம், மாமல்லபுரம், சென்னையின் புறநகர்ப் பகுதிகள் எனப் பல்வேறு பகுதிகளிலும் ஒரே மாதத்தில் ஏறக்குறைய 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசை, நடனம், நாட்டார் கலை நிகழ்ச்சிகள் நடப்பது உலகில் வேறு எங்குமே நடக்காத அதிசயம் என்கிறார் தமிழ்நாடு சுற்றுலா மற்றும் பண்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் ஐ.ஏ.எஸ்.
செவ்வியல் இசையை மேடையில் நிகழ்த்துவதற்கு இன்றைக்கு நூற்றுக் கணக்கான சபாக்கள் இருக்கின்றன. அதே நேரம், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அவர்களின் பொழுதுபோக்குக்காக இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அப்படி 1883இல் மெட்ராஸ் ஜார்ஜ்டவுன் பகுதியில் தொடங்கப்பட்ட ‘பூணா காயன் சமாஜ்’தான் அந்நாளைய மெட்ராஸின் முதல் சபாவாகத் திகழ்ந்திருக்கிறது.
சென்னையின் இசைப் பெருமிதமாகக் கருதப்படும் மியூசிக் அகாடமியில் இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த காலகட்டத்திலும்கூட நிகழ்ச்சிகள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பேட்டியில் நினைவுகூர்ந்திருக்கிறார் மியூசிக் அகாடமியின் தலைவர் என். முரளி.
இசை நிகழ்ச்சிகளை 94 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்திவரும் மியூசிக் அகாடமி, கர்னாடக இசையை அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டு செல்லும் வழியில் இசைப் பள்ளியையும் நடத்திவருகிறது. திறமையான இளம் கலைஞர்களை அடையாளம் கண்டு, கலையை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு மேடை அமைத்துத் தருவதுடன் கலைஞர்களின் அளப்பரிய சேவையைப் பாராட்டி ‘சங்கீத கலாநிதி’ உள்ளிட்ட விருதுகளை வழங்கியும் கலைச் சேவை புரிந்து வருகிறது.
நம்முடைய செவ்வியல் இசை, நடன வடிவங்களைப் பேணிக்காப்பது, அடுத்த தலைமுறையினருக்கு அவற்றைக் கொண்டுசேர்ப்பது, இந்தியாவின் பிற மாநிலங்களின் செவ்வியல் இசைக் கலைகளுக்கும் கலைஞர்களின் திறமையையும் வெளிப்படுத்த மேடையை அமைத்துக் கொடுப்பது என இந்தியாவின் கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் இடையே உறவுப் பாலம் அமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது.