

உலகம் முழுதும் உள்ள வரலாற்று முக்கியத்துவம் பெற்ற இடங்கள், அருங் கலைச் செல்வங்கள் ஆகியவற்றைத் தேர்வு செய்து அவற்றை யுனெஸ்கோ நிறுவனம் உலக மரபுச் சின்னங்கள் என அறிவித்துப் பாதுகாக்கிறது. அத்தகைய உலக மரபுச் சின்னங்கள் வரிசையில் சோழ நாட்டில் மூன்று கோயில்கள் இடம்பெற்றுள்ளன.
தஞ்சாவூரில் உள்ள பெரிய கோயில் எனப்பெறும் ராஜராஜேச்சரம், கங்கைகொண்டசோழபுரத்துச் சிவாலய மான கங்கை கொண்ட சோழீச்சரம், தாராசுரத்தில் உள்ள ஐராவதீசுவரர் கோயில் எனப்பெறும் ராஜராஜேச்சரம் ஆகியவைதான் அந்த மூன்று சின்னங்கள்.
தஞ்சைப் பெரிய கோயில்: இக்கோயில் மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால்[பொ.ஆ.(கி.பி) 985–1014] எடுக்கப்பெற்றதாகும். இவ்வாலயத்தி லுள்ள அம்மன்னனின் கல்வெட்டுகள் சிலவற்றில் ‘தஞ்சாவூர் கூற்றத்து தஞ்சாவூர் இல் நாம் எடுப்பித்த கற்றளி ஸ்ரீராஜராஜீச்சரம்’ என்று மன்னனே எழுதிய குறிப்பு காணப்பெறுவதால் இது உறுதிபெறுகிறது. 216 அடி உயரமுடைய ஸ்ரீவிமானம், திருச்சுற்று மாளிகை, சுற்றுக் கோயில்கள் ஆகியவற்றுடன் திகழும் இக்கோயிலில் நம்மை வியக்க வைப்பது பிரம்மாண்டமான கட்டுமானமே.
நுழைவாயிலில் முதலில் காண்பது ஐந்து அடுக்குகளுடன் திகழும் கேரளாந்தகன் திருவாயில் எனும் கோபுரமாகும். அடுத்துத் திகழ்வது மூன்று அடுக்குகளுடன் உள்ள ராஜராஜன் திருவாயில் எனும் கோபுரமே. அஸ்திவாரத்தில் தொடங்கி உச்சி வரை கருங்கற்கள் கொண்டு எடுக்கப்பெற்றதே இவ்வாலயம். ராஜராஜன் திருவாயில் எனும் கோபுர வாயிலில் 18 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன இரண்டு துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன.
திருச்சுற்று மாளிகைப் பத்தியில் முப்பத்தாறு பரிவாராலயங்கள் முன்பு இருந்துள்ளன. அவற்றில் எட்டுத் திசை நாயகர்களான இந்திரன், அக்னி, யமன், நிருதி, வருணன், வாயு, சோமன், ஈசானன் ஆகிய தெய்வங்களுக்குத் தனிக் கோயில்கள் அமைந்துள்ளன.
கருவறையின் மையத்தில் 13 அடி உயரமுடைய சிவலிங்கம் உள்ளது. அவ்வறையின் சுவரின் கனம் 11 அடியாகும். கருவறையைச் சுற்றி ஆறு அடி அகலத்தில் சாந்தாரம் எனும் சுற்று அறை உள்ளது. அவ்வறையின் உள்சுவர்களில் சோழர்காலச் சுதை ஓவியங்கள் (Fresco) உள்ளன.
மேலும், பெரிய அளவில் உள்ள அகோரமூர்த்தி, சந்தியா நிருத்தமூர்த்தி, மனோன்மணி ஆகிய தெய்வங்களின் திருவுருவங்கள் உள்ளன. சாந்தார அறையின் வெளிப்புறச் சுவர் 13 அடி கனமுடையதாகும். உள்நான்கு சுவர்களும் வெளிநான்கு சுவர்களும் இரண்டாம் தளத்தில் முப்பதடித் தளமாக ஒன்றிணைந்து மிக உயரமான ஸ்ரீவிமானத்தைத் தாங்கி நிற்கின்றன.
அந்த விமானமோ தளம் தளமாக அமையாமல் முழுதும் உள்கூடாக அமைந்துள்ளது. மகாமண்டபத்தின் மேற்தளம் ஈரடுக்கு உடையதாக இருந்துள்ளது. அந்த மண்டபப் பகுதி மட்டும் பின்னாளில் சிதைவுற்றுத் தற்காலத்தில் ஒரு தளம் மட்டுமே உள்ளது. இம்மாதிரியான பிரம்மாண்ட கட்டுமான அமைப்பை இங்கும், கங்கைகொண்ட சோழபுரத்திலும் மட்டுமே காண இயலும்.
இவ்வாலயத்து ஸ்ரீவிமானத்தை சிவபெருமானின் தசாயுத புருஷர்களான பத்து ஆயுத புருஷர்கள் காத்து நிற்கின்றனர். கோஷ்ட தெய்வங்களாகத் தத்புருஷம், அகோரம், சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம் என்கிற ஐந்து தெய்வங்கள் இருப்பதை இங்கு மட்டுமே காணலாம்.
சாந்தார சுற்று அறையின் மேற்தளத்தில் 108 நாட்டிய கரணங்களுக்காகக் கற்கள் பதிக்கப்பெற்று அவற்றில் 80 கரணங்கள் முற்றுப் பெற்றுள்ளன. அந்த நாட்டியக் கரணங்களைச் சிவபெருமானே ஆடிக்காட்டுவதாக அமைந்துள்ளது அரிய காட்சியாகும். சோழர் கட்டிடக் கலையின் மாட்சிமையை எடுத்துக்காட்டும் பிரம்மாண்டமான ஆலயம் தஞ்சைப் பெரிய கோயிலாகும்.
கங்கைகொண்ட சோழீச்சரம்: அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் இவ்வாலயம் அமைந்துள்ளது. தஞ்சைக் கோயிலை ஒத்த கட்டுமான அமைப்பில் திகழும் இவ்வாலயத்தின் விமானம் மட்டும் தோற்றத்தால் சற்று மாறுபட்டது. எசாலம் எனும் இடத்தில் கிடைத்த ராஜேந்திரசோழனின் செப்பேட்டுத் தொகுதியில் கங்கைகொண்ட சோழீச்சரம் ராஜேந்திர சோழனால் (பொ.ஆ.1012 – 1044) கட்டப்பட்டது என்கிற தகவல் காணப்பெறுகிறது.
தஞ்சை விமானத்தைப் போன்று முழுவதும் உள்கூடாகவும், சாந்தார அறையுடனும் கட்டப் பெற்றதே இவ்வாலயம். இக் கோயிலின் மகா மண்டபமும் ஈரடுக்குடன் முன்பு திகழ்ந்து பின்னாளில் அழிந்து தற்போது ஒரு தளத்துடன் மட்டும் திகழ்கிறது. இவ் வாலயத்திலும் திருச்சுற்று மாளிகை அமைந்திருந்து, தற்போது அடித்தளம் மட்டுமே எஞ்சியுள்ளது.
ஆலய வளாகத்தில் தென் கயிலாயம் என்றும் வடகயிலாயம் என்றும் இரண்டு தனித்தனிக் கோயில்கள் விமானத்திற்கு இருபுறமும் உள்ளன. வடகயிலாயத்தைப் பிற்காலத்தில் அம்மன் கோயிலாக மாற்றம் செய்துவிட்டனர்.
இங்குள்ள கோஷ்ட தெய்வங்கள் மிகப் பிரம்மாண்டமானவை. லக்குமி, கணபதி, ஹரிஹரர், அர்த்தநாரி, நடராஜர், கங்காதரர், விஷ்ணு, முருகன், லிங்கோத்பவர், மாலவனுக்கு ஆழி ஈந்த பெருமான், காலகாலமூர்த்தி, கொற்றவை, இருதேவியருடன் பிரம்மன், பைரவர், காமதகனமூர்த்தி, சண்டீச அநுக்கிரகமூர்த்தி, சரஸ்வதி ஆகியவை பேரழகு வாய்ந்த சிற்பங்களாகும். இவை தவிர, பிற நாடுகளிலிருந்து வெற்றிச் சின்னமாகக் கொண்டுவரப்பட்ட பல தெய்வ உருவங்களும் இவ்வாலயத்தில் இடம்பெற்றுள்ளன.
தாராசுரம் ஐராவதீசுவரர் ஆலயம்: குடந்தை நகரையொட்டி அமைந்த தாராசுரத்தில் உள்ள இவ்வாலயத்தை இரண்டாம் ராஜராஜசோழன் (1150–1163) எடுப்பித்தான். சோழர் சிற்பக்கலையின் நுட்பத்தை இவ்வாலயத்தில் காணலாம். சேக்கிழார் எழுதிய பெரியபுராணத்தின்பால் மிகுந்த நாட்டம் கொண்டிருந்த இச்சோழமன்னன் பெரியபுராணத்தில் கூறப்பெறும் 63 அடியார் தம் வரலாறு முழுவதும் இவ்வாலயச் சுவர்களில் கதை, காட்சி அமைப்புடன் இடம்பெறச் செய்துள்ளார்.
மிகப் பரந்த வெளியில் சுவாமி கோயில் தனியாகவும், அம்மன் ஆலயம் தனியாகவும் அமைந்துள்ளன. இங்குள்ள சரபமூர்த்தி சிற்பம் மிகுந்த கலைநயம் வாய்ந்தது. ராஜகம்பீரன் திருமண்டபத்தில் நான்கு தூண்களில் நாற்பத்தெட்டுக் காட்சிகளாகக் கந்தபுராணம் முழுவதும் சித்தரிக்கப்பெற்றுள்ளது.
இவ்வாலயத்து ஸ்ரீவிமானத்தைச் சோழமன்னன் கயிலை மலையாகவே படைத்துள்ளான். மேலே கயிலைக் காட்சி சிற்பங்களாக இடம்பெற்றுள்ளன. இங்கு தூண்கள், தரைகள், படிகள், விதானங்கள், பலகணிகள் ஆகிய எல்லா இடங்களிலும் சிற்பக் காட்சிகளைக் காணலாம். சுமார் ஓர் அங்குல உயரத்தில்கூட குறுஞ் சிற்பங்கள் உண்டு. பல ஆயிரக்கணக்கான சிற்பங்களைப் பெற்ற சிற்பக் களஞ்சியமே தாராசுரம் திருக்கோயிலாகும்.
- குடவாயில் பாலசுப்ரமணியன் | கட்டுரையாளர், கலை ஆய்வாளர், எழுத்தாளர்; kudavayil@yahoo.com