

ஓர் ஓவியராக அங்கீகரிக்கப்படாத ஏமாற்றம் ஹிட்ல ருக்கு எப்போதும் இருந்தது. வியன்னா கவின்கலைக் கல்லூரியில் ஓவியம் பயின்ற அவர், அதில் தேர்ச்சியடையவில்லை. அவர் தலையெடுத்த காலத்தில் நவீன ஓவியங்களை ஏனோ முற்றிலும் வெறுத்தார். நவீன ஓவியங்களுக்கு எதிராகப் போர் தொடுக்கும் அளவுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகளையும் விதித்தார். ஏன் கலைப்பொருள்களைக் களவாடுவதிலும் அவர் அவ்வளவு ஆர்வம் காட்டினார்?
இனவெறியின் தேடல்: ஆரிய இனம்தான் உலகின் உயர்ந்த இனம் என நம்பியவர் ஹிட்லர். வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்தே அந்த இனம் ஆளுமை செலுத்திவந்தது என்பதை நிறுவ நாஸிக்களுக்குச் ‘சான்றுகள்’ தேவைப்பட்டன. எனவேதான் ஐரோப்பா தொடங்கி ஆஸ்திரேலியா வரை கலைப்பொருள் தேடுதலில் ஈடுபட்டனர். அப்போது பல ஓவியங்கள், சிற்பங்கள் திருடப்பட்டன. உலகின் மிகப் பெரிய கலைக் கொள்ளை அது!
புகழ்பெற்ற மோனலிசா ஓவியம் நாஸிக்களால் கவரப் பட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். படுகொலை செய்யப்பட்ட யூதர்கள், கம்யூனிஸ்ட்டுகள், தன்பாலின உறவாளர்கள், ஜிப்ஸிக்கள் என எல்லாரைப் பற்றியும் துல்லியமாகக் கணக்கு வைத்திருந்த நாஸிக்கள், அந்த ஓவியத்தை எந்தப் பட்டியலிலும் சேர்க்காமல் வைத்திருந்ததாகவும் தகவல் உண்டு.
ஆனால், அது உறுதிப்படுத்தப்படவில்லை. உண்மையில், போர் தொடங்குவதற்கு 10 நாள்களுக்கு முன்பே, பாரிஸ் அருங்காட்சியகத்தின் இயக்கு நர் ஜாக்குயிஸ் ஜோஜா தன் சொந்த முயற்சியில் மோனலிசா ஓவியம் உள்ளிட்ட கலைப்பொருள்களைப் பத்திரமாகக் காப்பாற்றி மறைத்துவைத்ததாக ஆதாரபூர்வமான தகவல்கள் உண்டு.
பிரத்யேகக் குழு: எனினும், நாஸிக்களிடமிருந்து கலைப் பொருள்களை மீட்டெடுக்கப் பிரத்யேகமாக ஒரு குழு 1943இல் அமெரிக்க ராணுவத்தால் உருவாக்கப்பட்டது, வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகியிருக்கிறது.
‘Monuments Men’ எனப் பெயரிடப்பட்டிருந் தாலும் அக்குழுவில் பெண்களும் இருந்தனர். 14 நாடுகளைச் சேர்ந்த தொல்லியல் துறை நிபுணர்கள், கலைப் பொருள் சேகரிப்பாளர்கள் என மொத்தம் 345 பேர் இக்குழுவில் இடம்பெற்றிருந்தார்கள்.
நேச நாடுகளின் படைகள் மீட்டெடுக்கும் நகரங்களின் கலைப்பொருள்களை இக்குழுவினர் சேகரித்தனர். கலைப்பொருள்கள் வைக்கப்பட்டிருக்கும் இடங்கள் மீது நேச நாடுகள் குண்டுவீசிவிடக் கூடாது என அந்த இடங்களை முன்கூட்டியே கண்டறிந்து சொல்லியும் வந்தனர். சேதமடைந்த கலைப் பொருள்களைப் புனரமைக்கும் பணிகளும் நடைபெற்றன. ஏறத்தாழ 50 லட்சம் கலைப்பொருள்கள் மீட்டெடுக்கப்பட்டன.
2014இல் ஜார்ஜ் க்ளூனி, மேட் டாமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான ‘தி மான்யுமென்ட்ஸ் மென்’ திரைப்படம், இக்குழுவின் சாகசப் பணியைப் பதிவுசெய்திருந்தது. அதில் ஒரு காட்சியில் இக்குழுவினருக்கு ஹிட்லர் தொடர்பான ஆவணப்படம் திரையிடப்படும். ஹிட்லர் வரைந்த ஓவியம் அதில் காட்டப்படும்.
அப்போது ஒருவர், “ஓவியம் அப்படி ஒன்றும் மோசமில்லை” என்று சொல்வார். ஒருவேளை ஓவியக் கலையில் ஹிட்லர் வெற்றிபெற்றிருந்தால் உலகப் போரே நடந்திருக்காது என்று ஒரு வாதம் முன்வைக்கப்படுவது உண்டு. அதில் வலுவான தர்க்கம் இல்லாமல் இல்லை.