

வட தமிழகத்தை பொ.ஆ.(கி.பி) 3ஆம் நூற்றாண்டு முதல் 9ஆம் நூற்றாண்டுவரை ஆண்ட பல்லவர்களின் தலைநகரமான காஞ்சிபுரத்திலிருந்து கிழக்கே 67 கி.மீ. தொலைவில் இருந்தது மல்லைத் துறைமுகம். உலக நாடுகளுடன் கொண்ட தொடர்பால் செல்வத்தில் மட்டுமல்ல, கலை வேட்கை கொண்ட பல்லவர்களால் கலையிலும் இந்த ஊர் செழித்திருந்தது.
ஏராளமான கலைச் சின்னங்களை ஒரே இடத்தில் உருவாக்கும் முயற்சியை பாதாமி, பட்டடக்கல், அய்ஹொளே, விதிஷா ஆகிய இடங்களில் காண்பதுபோல் மல்லையும் கலைச் சின்னங்களின் கருவூலம். ஆயினும் ஏனைய இடங்களில் இல்லாத புதுமைகளும் புதிர்களும் ஒவ்வொரு நாளும் உலகை இங்கே ஈர்த்துவருகின்றன.
மல்லைச் சின்னங்களைப் பொறுத்தமட்டில் இவற்றை உருவாக்கிய புரவலர்களும் புதிர்தான். முதலாம் மகேந்திரவர்மன், முதலாம் நரசிம்மவர்மன், முதலாம் பரமேஸ்வர வர்மன், ராஜசிம்மன் ஆகிய நான்கு அரசர்களின் காலங்களில் இவை உருவாக்கப்பட்டன எனவும் அனைத்துச் சின்னங்களும் ராஜசிம்மனால் மட்டுமே உருவாக்கப்பட்டன எனவும் அறிஞர்களிடம் இருவேறு கருத்துகள் உண்டு.
அதுபோலவே படைத்த கலைஞர்கள் குறித்தும் உறுதியான சான்றுகள் இல்லை. பூஞ்சேரி கிராமத்தில் பாறையில் பொறிக்கப்பட்டுள்ள கேவாத பெருந்தச்சன், சாதமுக்கியன், குணமல்லன், திருவொற்றியூர் ஆபாஜன் ஆகிய பெயர்களே சிற்பிகளின் பெயர்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பல்லவர் காலத்தில் இங்கு சின்னங்கள் எழுப்பப்படுவதற்கு முன்பே, சங்க காலத்திலேயே இப்பகுதியில் மக்கள் வாழ்ந்துள்ளதை பொ.ஆ. 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த,அண்மைய அகழாய்வில் கண்டறியப்பட்ட சாளுவன் குப்பத்து முருகன் கோயில் உணர்த்துகிறது.
நால்வகைச் சின்னங்கள்: மல்லையின் நடுவே நீண்டு கிடக்கும் பாறைக் குன்றிலும் அதைச் சூழ்ந்த பகுதிகளிலுமே பல்லவர் காலச் சின்னங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவை குடைவரைகள், ஒற்றைக் கற்றளிகள், திறந்தவெளிப் புடைப்புச் சிற்பங்கள், கட்டுமானக் கோயில்கள் என நான்கு வகைப்படுபவை.
பாறையைக் குடைந்து தூண்கள், மண்டபங்கள், பிரகாரங்கள், கருவறைகள், சிற்பங்கள் என உருவாக்கப்படும் குடைவரைகள் இங்கே பத்துக்கும் மேல் உண்டு. இவற்றுள் வராக மண்டபம், ஆதிவராக மண்டபம், மகிஷாசுரமர்த்தினி குடைவரை ஆகியவை புகழ்பூத்த சிற்பங்களைக் கொண்டுள்ளன.
வராக அவதாரம், திரிவிக்கிரம அவதாரம், கஜலட்சுமி, துர்க்கை, துர்க்கை - மகிஷன் போர், பள்ளிகொண்ட பெருமாளை அழிக்க முற்படும் மது கைடமர் சிற்பத் தொகுதிகள் உயிர்த்துடிப்புடன் இயங்குவன. ஆதிவராகர் குடைவரையில் சிம்ம விஷ்ணுவும் மகேந்திரவர்மனும் தத்தம் துணைவியருடன் காட்சியளிக்கின்றனர்.
ஒரே கல்லில் உச்சி முதல் பாதம் வரை எந்த இணைப்பும் இல்லாமல் வடிக்கப்பெறும் ஒற்றைக் கற்றளி எனும் கோயில்கள் ஒன்பது இங்குள்ளன. ஒன்றினைப் போல் மற்றொன்று இல்லாமல் ஒவ்வொன்றும் வேறுபட்டதாகப் படைக்கப்பெற்றிருப்பது தனிச்சிறப்பு. இவற்றுள் காலத்தால் முந்தையதான கணேசரதம் இந்தியாவின் முதல் ஒற்றைக் கற்றளியாகும்.
இமயமலைக் காட்சி: கூர்ச்சரபாணி எனப்படும் குடிசை வடிவிலான திரௌபதி ரதம், இரு தளங்களைக் கொண்ட அர்ச்சுன ரதம், சாலை விமானம் கொண்ட பீம ரதம், மூன்று தளங்களைக் கொண்ட தர்மராச ரதம், தூங்கானை வடிவிலான நகுல சகாதேவ ரதம் என ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதுமை முயற்சியாகும்.
அர்ச்சுன ரதமும் தர்மராச ரதமும் இணையற்ற சிற்பங்களைக் கொண்டவை. தர்மராச ரதமே காஞ்சி கைலாசநாதர் கோயில், தஞ்சை பெருவுடையார் கோயில் ஆகியனவற்றுக்கு முன்னோடியாகும். திறந்தவெளிப் புடைப்புச் சிற்பத் தொகுதிகள் எனப்படும் அரிய கலையாக்க முயற்சி இந்தியாவில் மட்டுமல்ல, உலகில் வேறெங்கும் இல்லாததாகும்.
‘அர்ச்சுனன் தபசு’ என அழைக்கப்படும் சிற்பத் தொகுதி இருபெரும் பாறைகளை ஒருங்கிணைத்து, இடைப் பிளவையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்ட மாபெரும் முயற்சியாகும். 12 மீட்டர் உயரமும் 40 மீட்டர் அகலமும் கொண்ட இத்தொகுதி, நான்கில் ஒரு பங்கு நிறைவடையாத நிலையிலேயே 152 சிற்பங்களைக் கொண்டுள்ளது.
மகாபாரத வனபர்வ வருணனையை அடிப்படையாகக்கொண்டு தெய்வ உருவங்கள், பதினெண் கணங்கள், மனிதர்கள், விலங்குகள், பறவைகள், மரங்கள் என முழுமையான இமயமலைக் காட்சியாக விளங்குகிறது.
இதுபோலவே கிருஷ்ண மண்டபம் என்னும் கோவர்த்தன மலைக் காட்சியும் திறந்தவெளிப் புடைப்புச் சிற்பக் காட்சியே ஆகும். அங்கு விஜயநகர காலத்தில் கட்டப்பட்ட மண்டபத்தை மறந்துவிட்டுப் பார்த்தால், மல்லைக் குன்றே கோவர்த்தனமாகப் படைக்கப்பட்டிருப்பதை உணரலாம்.
அர்ச்சுனன் தபசிலும் கோவர்த்தனக் காட்சியிலும் மேலிருந்து மழைநீர் கொட்டுமானால், அவை உயிர் பெற்ற இயங்கு சிற்பங்களாக மாறுகின்றன. இமயத்தில் கங்கை பாய்வதையும் மழைக்குக் கோவர்த்தனத்தைக் குடையாக்கி ஆயர்கள், ஆநிரைகளை கண்ணன் காப்பதையும் நேரில் காணலாம்.
சிற்பிகளின் கற்பனை உச்சம்: கடற்கரைக் கோயில் எனப்படும் கட்டுமானக் கோயில் அலைகளால் சூழப்படும் கடலோரத்தில் வழக்கத்தைவிடவும் கோயில் குன்றின் உச்சியிலும் முகுந்த நாயனார் கோயில் சமதளத்திலும் கட்டப்பட்டுள்ளன. இந்த இடத் தேர்வுகள் மாறுபட்ட ரசனைக்குக் காரணங்கள் ஆகின்றன. கடலை ஒட்டி அலைகள் மோத படகுத் துறை சூழ எடுக்கப்பட்டுள்ள கடற்கரைக் கோயில் ஒரு பொறியியல் அதிசயம்.
அங்குள்ள உருளை வடிவச் சிவன் கோயிலும் துர்க்கையின் சிம்ம வாகனக் கோயிலும் வடப்புறம் கடல் நீர் சூழ உள்ள துர்க்கைக் கோயிலும் தென்புறம் கடற்கரையில் உள்ள யாளி கோயிலும் புதுமையான கோயில் வடிவங்களாகும். சாளுவன் குப்பத்தில் 11 யாளித் தலைகளும் அம்பாரிகளுடன் இரண்டு யானைகளும் பல்லவச் சிற்பிகளின் கற்பனை உச்சம் தொட்ட படைப்புகளாகும்.
ஒற்றைக் கல்லாலான யானை, சிங்கம், எருது, சிம்மக் கட்டில்கள், தொட்டிகள் எனச் செயற்கையாக வடித்த புதுமைகள் ஒருபுறமெனில், பாறைச் சரிவில் உருண்டு விழாமல் நிற்கும் ‘கிருஷ்ணர் வெண்ணெய் உருண்டை’ மற்றொரு இயற்கை அதிசயம். கட்டிடம், சிற்பம், ஓவியம் எனும் கலைகளில் பொன்னேடுகளைப் படைத்த பல்லவர்களின் எல்லையற்ற மன விழைவுகளின் வெளிப்பாடுகளே மல்லைச் சின்னங்கள்.
- பாரதிபுத்திரன் | கட்டுரையாளர், பேராசிரியர், கலை ஆய்வாளர்; nayakarts@gmail.com